பழமொழி இன்பம் - 30

Monday, August 21, 2017

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
இது செல்வந்தர்களின் உலகம். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இருந்தால்தான் இன்று இவ்வுலகில் வாழவே முடியும். எண்பதுகளைப் பற்றிய என் கவிதையொன்றில் ஒரு வரியை இப்படி எழுதி இருந்தேன் “வேலைக்குப் போகாதவன் தன் வீட்டுக்குப் பாரமாய் இருந்ததில்லை” என்று.

முப்பதாண்டுகளுக்கு முன்பு வீட்டின் பிள்ளைகளில் ஒருவர் வேலைக்குச் செல்லாவிட்டாலும்கூட அவர் அவ்வீட்டுக்கு ஒரு சுமையாய் இருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை அவ்வாறில்லை. வேலைக்குச் செல்லாவிடில் அவர் அவ்வீட்டுக்கு ஓர் உறுத்தலாய் மாறிவிடுகிறார். சில பத்தாயிரங்களால் ஆன வீட்டுப் பொருளாதாரத்திற்கு அவர் ஒரு விரயமாய் மாறிவிடுகிறார். “எங்காச்சும் ஒரு வேலைக்குப் போயி ஐயாயிரம் பத்தாயிரம் கொண்டு வந்தீன்னா அது எவ்வளவு உபயோகமா இருக்கும்…” என்று தந்தையை மனம் குமைந்து கூற வைத்துவிடுகிறார். ஏனென்றல் இன்றைக்கு ஒருவர் பொருளீட்டாமல் உண்ணுவது கடினம். எல்லாம் விலைமயம். 

நான் வேலை வினைக்கெட்டு ஒரு நாள் மதியச் சாம்பாரின் இடுபொருள்களில் அடங்கியுள்ளவற்றின் விலைத்தொகுப்பு என்ன என்று பார்த்தேன். குறைந்தது அறுபது உரூபாய்ப் பொருள்கள் இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளைக்கான சாம்பாரைக் காய்ச்சி இறக்க முடியாது என்பது விளங்கியது. ஆக, இங்கே எல்லாம் பொருள் மயம். அதனால் என்ன செய்கிறோம் ? பள்ளியோ கல்லூரியோ முடித்தவுடனே வேலைக்கு ஓடுகிறோம். வேலை என்ற பெயரில் எங்கேனும் ஒரு கட்டடத்திற்குள் நம்மைத் திணித்துக்கொண்டு திங்களூதியத்திற்குத் துன்பப்படுகிறோம். ஏதேனும் ஒரு தொகையை ஊதியமாகப் பெற்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. பொருளீட்டாமல் உண்ணும் ஒரு கவளம் நம் தன்மானத்திற்கு இழுக்காகிறது. 

இப்படி இளமை முழுவதும் ஓடியோடி என்ன ஆகின்றோம் ? இஞ்ஞாலத்தின் பெருஞ்செல்வந்தன் ஆகின்றோமா ? இல்லை. நாற்பதுகளை எட்டும்போது உடல்வளம் குன்றிவிடுகிறது. முதுகும் மூட்டுகளும் வலிக்கின்றன. கண்ணாடி அணிந்தே ஆகவேண்டும். சூரிய வெளிச்சத்தோடு தொடர்புடையதாக இருந்தால்தானே நமது பார்வை தெளிவாய் இருக்கும் ? இங்கே நாம் பகலிலும் இரவிலும் மின்னொளிர் விளக்குகளுக்கு அடியிலேயே திரிய வேண்டியவர்களாக இருக்கிறோம். பார்வை மங்காமல் என்ன செய்யும் ? 

முறையற்ற உணவுப் பழக்கம், தொடர்ந்து மாவுச் சத்து தின்னும் பழக்கம். இரத்தத்தில் சர்க்கரை சேர்ந்துவிடுகிறது. இரத்த அழுத்தம் கூடிவிடுகிறது. நம் அகவை ஐம்பது என்னும்போது முதுமையை உணரத் தொடங்கிவிடுகிறோம். அறுபத்தேழுக்குள் செத்துப் போய்விடுகிறோம். ஓடோ ஓடென்று ஓடியவர்கள் இத்தகைய வாழ்க்கைச் சுற்றோட்டத்தைத்தான் அமைத்துக்கொள்கிறார்கள். இவை அனைத்துமே தவறு. 

வாழ்க்கைக்கு வேலை தேவைதான். அது தேவையடிப்படையில் இருப்பது நன்று. சிறு தேவைகளின் வாழ்வினராக நம்மை ஆக்கிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் நோய்க்கு இரையாக நம்மை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். 

மகாபாரதத்தில் தர்மரின் பேரறிவை அறியத் தரும் கேள்வி பதில் பகுதியொன்று வரும். அங்கே ஒரு கேள்வி கேட்கப்படும் “மனிதன் ஈட்டவேண்டிய மகத்தான செல்வம் எது ?” என்பது கேள்வி. “ஆரோக்கியம்” என்பது தர்மரின் பதில். இதைத்தான் தமிழில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கவிதைச் சுருக்கமாகச் சொன்னார்கள். 

எத்தகைய செல்வமும் அழியும். நோயற்ற செல்வம்தான் குறையாது. அழியாது. இன்று எவ்வளவு பொருட் செலவு செய்தாலும் ஆளைக்காப்பாற்ற முடியாத நோய்கள் மலிந்திருக்கின்றன. அதனால் உடல் நலத்தைக் காப்பாற்றுவோம். நோய்கள் அண்டாதபடி அரண்செய்து கொள்வோம். உடல் தரம் பேணுவோம். அதுதான் நாம் ஈட்டவேண்டிய முதற்பெருஞ்செல்வம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles