அழகு தமிழ் பழகு -  33 

Friday, August 18, 2017

இலக்கணத்தைத் தொடராக எழுத முடியுமா, அப்படி எழுதினால் யார் விரும்பிப் படிப்பார்கள், முதலில் நான் இலக்கணக் கூறுகளை விரித்து எழுதத்தக்க ஆற்றல் கைவரப் பெற்றிருக்கிறேனா, அப்படியும் எழுதினால் பத்துக் கட்டுரைகளுக்கு மேல் தொடர்ந்தியங்க முடியுமா, எழுதுகின்றவை எளிமையாய் விளங்கிக்கொள்ளத் தக்கனவாய் இருக்குமா… என்று பலப்பலவாறான கேள்விகள் இத்தொடரை எழுதத் தொடங்கும்போது எழுந்தன. 
 
 

மனம் இதழாசிரியர் ஐஸ்வர்யா என்னை முகநூல் உள்ளஞ்சலில் தொடர்பு கொண்டபோது ஏதோ சிறப்பிதழுக்காக அணுகுகிறார்கள் போலும் என்றே எண்ணினேன். இதுவரை என்னை எண்ணற்ற ஊடக நண்பர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதைச் செய்துவிடலாம், இதைச் செய்துவிடலாம் என்று கனவுகளையும் கற்பனைகளையும் தொடர்ந்து விதைத்திருக்கிறார்கள். எல்லாரும் தொடர்ந்து இயங்கக் கூடியவர்கள்தாம். பல்வேறு பேரூடங்களில் நற்பொறுப்புகளில் இருப்பவர்களும் கூட. ஆனால், அப்படிக் கேட்டுக்கொண்டவர்களின் சொற்கள் மறுநாளே மறக்கப்பட்டன.
 
முதன்மைத் தொலைக்காட்சியொன்றில் தமிழ் இலக்கணப் பயிற்றுவிப்பு சார்ந்து அரைமணி நேரத் தொடர் ஒன்றை வழங்கும்படி தொடக்கநிலைப் பேச்சுகள் நடந்தன. நானும் தமிழ்மொழி அறிவை முடிந்தவரைக்கும் பரப்பிவிடலாம் என்ற கனவில் மிதந்தேன். ஆனால், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை… ஆளையே காணவில்லை. இப்படியே போனால் “கொட்டையை நோக்கி ஊர்வலம்” என்று சுவரொட்டி அடித்து ஒட்டாமல் என்ன செய்வார்கள் ? 
 
எந்தத் தொலைக்காட்சியாகட்டும் இதழாகட்டும்… தவறாமல் சோதிட நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இன்று நாள் எப்படி இருக்கும் என்று குத்து மதிப்பாக அடித்து வீசுகிறார்கள். ஒரு காலப்போக்கு எப்படியிருக்கும் என்பதில்கூட நிலையாமையின் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கணக்கு இருக்கிறது. ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை யார் விளக்கிவிட முடியும் ? ஆனால், அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. ஒரு சோதிடப் பண்டிதர் இவற்றைத் தொடர்ந்து விளக்குகிறார். 
 
நான் தமிழகமெங்கும் பல்வேறு ஊர்ப்புறங்களில் திரிந்திருக்கிறேன். நாட்டுப்புறப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள தேநீர்ச் சிறுகடையில் அமர்ந்து காத்திருந்திருக்கிறேன். அங்கே அவ்வூரார் யாரேனும் இருவர் அமர்ந்து சோதிடக்கூறுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவியேனும் அமர்ந்தால்தான் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏழரைச் சனி குறித்த அறிவும் தீமை தவிர்ப்பு முறைகளும் நம்மவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஆனால், நம்மவர்களுக்குத் தாய்மொழியைப் பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. நீ எதைப் பயன்படுத்துகிறாயோ, எது உன் உணர்வுகளின் ஒரே வெளிப்பாட்டு மொழியோ, எது உன் பன்னெடுங்காலப் பரம்பரைச் சொத்தோ… அதைக் குறித்த சிற்றறிவுகூட இருப்பதில்லை. இதையெல்லாம் எண்ணி மனம் வெதும்பித்தான் என் இலக்கிய அங்கியைக் கழற்றி ஓரத்தில் வைத்துவிட்டு இலக்கணக்காரனாக மாறினேன். அம்முயற்சியில் என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தேன். அதற்கு எனக்கு அருமையான வாய்ப்பைக் கொடுத்தது மனம் இதழ்தான். 
 
இணையத்தில் வெளியாகும் இதழை யார் படிப்பார்கள், எத்தனை படிப்பாளிகளைப் போய்ச்சேரும் என்கின்ற தொடக்க நிலைத் தயக்கங்கள் எல்லாம் முதற்சில இதழ்களிலேயே காணாமல் போயின. என்னைத் தொடர்புகொண்ட மனம் ஆசிரியர் ஐஸ்வர்யாவும் உதவி ஆசிரியர் கிராபியன் பிளாக்கும் இறுதிவரை வியக்கத்தக்க ஒத்துழைப்பை நல்கினார்கள். இவர்களைப் போன்ற இதழாசிரியர்கள் வாய்க்கப்பெற்றால் மலையையும் தூக்கிச் சுமந்துவிடலாம். பல நேரங்களில் பயணங்களில் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் கைப்பேசியிலோ வரைபட்டிகையிலோ (டேப்) நான் எழுத வேண்டிய கட்டுரைகளை எழுதி அனுப்பியிருக்கிறேன். ஒரு கட்டுரைக்காக நான்கைந்து நாள்கள் ஆராய்ந்து தரவுகளைத் திரட்டி எளிமைப்படுத்தி எழுதியெழுதிப் பார்த்துத் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறேன். இவ்வாறெல்லாம் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தமிழ் இலக்கண அடிப்படைகளின் பல்வேறு நுட்பங்களைத் தெற்றென விளக்கி அமைந்தன. 
 
இன்று வெகுமக்கள் இதழில் இதுபோன்ற ஒரு தொடரை எழுதுவதற்கு எனக்கு வாய்க்குமா என்பது தெரியவில்லை. ஆனால், மனம் இதழ் அதைச் சாதித்தது. இதை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டேன். தமிழ் இலக்கணத்தின் ஒரு பெயர்ச்சொல்லை விளக்கியுணர்த்தும் ஒரு கட்டுரை இருக்கிறதா என்று எங்கு வேண்டுமானாலும் தேடிப் பாருங்கள். இல்லவே இல்லை. எடுத்துக்காட்டாக குற்றியலுகரம் என்பதை விளக்கி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். எங்கேனும் உள்ளதா ? இல்லை இல்லை. ஏன் ? உரைநடையில் பெரிதாகப் பாய்கின்ற இக்காலத்தில் ஏன் குற்றியலுகரத்தைப் பற்றி ஒரு கட்டுரை இல்லை ? புனைவின் வழியே அல்லது நிகழ்காலக் கட்டுரைகள் என்ற பெயரில் வேண்டாத குப்பைகள் சேர்ந்து போன அளவுக்கு இலக்கணத் தன்மைகளை விளக்கி எழுதி ஒரு கட்டுரை எழுதப்படவே இல்லை. அந்த வசை ‘அழகு தமிழ் பழகு’ என்னும் இத்தொடரால் கழிந்தது. 
 
அந்த வெற்றிடத்தை நிரப்பவே இங்கே என் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். இன்று உயிரளபெடை என்றால் என்ன என்பது தெரியும். ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன என்பது தெரியும். முதலெழுத்து சார்பெழுத்து தெரியும். ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக விளக்கமாக முப்பத்திரண்டு கட்டுரைகள் வழியாக எழுதிவிட்டேன். இவ்வரிசையில் நான் ஆயிரம் கட்டுரைகள் எழுதுதற்குத் திட்டமிட்டிருந்தேன். அதில் முதல் முப்பத்திரண்டை இங்கே நிகழ்த்தினேன். எனக்கே நம்பிக்கை பெருகியிருக்கிறது. என்மீது பெருமித உணர்ச்சி கொள்கிறேன். நல்ல இதழாளர்களை நான் கண்டடைந்து நண்பர்களாகப் பெற்றுவிட்டேன். இனி இது எப்போதும் தொடரும்.
 
இணையத்தில் இதழ் நடத்துவது என்பது பொருட்செலவு பிடிக்கும் செயல். அதை விளங்கிக்கொள்கிறேன். இவ்விதழோடு மனம் இதழ் அடுத்தக் கட்டத்துக்கு நகர்வதாக அறிந்தேன். அதே நேரத்தில் காணொளி சார்ந்து இவ்விதழின் செயல்கள் தொடரும் என்பது ஆறுதல். இவ்வழியே காணொளித் தொடர்களாக தமிழ் இலக்கணம் கற்பித்தலை நாங்கள் தொடர்வதற்கு எண்ணுகின்றோம். வெறும் கட்டுரைகளாக இல்லாமல் தமிழ் இலக்கணத்தைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிக்கும் என்னை நீங்கள் அக்காணொளிகளில் காணலாம். அது எல்லாவற்றையும் பன்மடங்கு எளிமையாக்கிவிடும். நம் நோக்கம் செம்மையாய் நிறைவேறும். தமிழ் கற்றலில் அக்காணொளிகள் மொழிமக்களுக்கு முதல்வேட்டலாக மாறும். அவ்வுறுதியை என்னால் மண்ணில் அடித்துத் தரமுடியும். நல்லது நண்பர்களே… மீண்டும் ஒரு நற்றொடர் வழியாகச் சந்திப்போம். வாழ்க தமிழ் !  

- கவிஞர் மகுடேசுவரன்  

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles