பழமொழி இன்பம் 23

Friday, April 28, 2017

பாத்திரம் அறிந்து பிச்சையிடு 

திரையுலகில் பாக்கியராஜ் கொடிகட்டிப் பறந்த எண்பதுகளுக்குச் செல்கிறோம். அப்போது அவரைச் சுற்றிலும் அவருடைய நண்பர்களும் ஊர்க்காரர்களும் உதவியாளர்களும் கூட்டமாய்ச் சூழ்ந்திருப்பார்களாம். 

அக்காலத்தில் திரைத்துறையில் நுழைவதற்கு ஒரேயொரு வாசல்தான் இருந்தது. திரைத்துறையில் ஈடுபட்டிருப்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்து அவருடைய அன்பைப் பெற்றே தொழில்கற்க முடியும். திரைத்துறையில் நுழைவதற்கு முயன்றால் உங்கள் வேண்டுகோளை ஏற்கும் ஒருவர் உரிய வாய்ப்பைத் தரவேண்டும். அப்போது திரைவிண்மீன்களாக மின்னிக்கொண்டிருந்தவர்களும் இதே முறையில் பயின்று தமக்கான வாய்ப்பைப் பெற்று புகழடைந்தவர்களே. 

பாக்கியராஜைச் சந்திக்க வருபவர்களில் பெரும்பான்மையர் அவரிடம் உதவியாளர் ஆகவோ பாட்டெழுதவோ வாய்ப்பைக் கேட்டபடி இருப்பார்களாம். ஓர் இயக்குநர்க்குத் தேவை ஐந்தாறு உதவியாளர்கள் தாம். ஒரு படத்திற்கு நான்கைந்து பாடல்களே தேவை. நிலைமை இவ்வாறிருக்க நாள்தோறும் பத்திருபதின்மர் வந்து பாட்டெழுதவும் பணியாற்றவும் வாய்ப்பு கேட்டால் என்னாவது ? அப்போதைய பாக்கியராஜின் நிலைமை அதுதான். அன்றாடம் ஏழெண்மராவது வந்து அவரிடம் பாடல் எழுத வாய்ப்பு கேட்பார்களாம். 

பாக்கியராஜும் தம் முயற்சிக் காலத்தில் அவர்களைப் போலவே பல்வேறுபட்டவர்களிடம் சென்று நின்று வாய்ப்புக்குக் கையேந்தியவராயிற்றே. அதனால் தம்மிடம் வாய்ப்பைக் கேட்டு வருகின்ற முயற்சியாளர்களிடம் ‘இல்லை’ என்று மனங்கோணும்படி சொல்லாமல் ‘கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்’ என்றே கூறுவாராம். சிலர் அந்தச் சொல்லுக்கே மகிழ்ந்து செல்வதுமுண்டு. மேலும் சிலர் அவரைத் தொடர்ந்து வந்து நச்சரித்து “வாய்ப்பு வழங்குகிறேன் என்று உறுதியளித்தீர்களே...” என்று நினைவூட்டி நிற்பார்களாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாக்கியராஜும் தம்முடைய படத்தில் பாட்டெழுத வைப்பதும் உண்டு. 

குருவிக்கரம்பை சண்முகம் (கவிதை அரங்கேறும் நேரம், செங்கமலம் சிரிக்குது போன்ற பாடல்களை எழுதியவர்), புலவர் சிதம்பரநாதன் (ஏரிக்கரைப்பூங்காற்றே பாடலை எழுதியவர்) போன்றோர் அவ்வாறு பாக்கியராஜ் வழங்கிய வாய்ப்பால் திரைப்பாடல்களை எழுதியவர்கள்தாம். அவ்வாறு தேர்ச்சியானவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறத்தில் வாய்ப்பைப் பெற்றவர்கள் பாட்டே எழுத வராமல் திணறிக்கொண்டிருப்பார்களாம். 

தொடர்ந்து நச்சரித்து வாய்ப்பைப் பெற்ற ஒருவர்க்குக் கதைச்சூழலைச் சொல்லி மெட்டைக் கொடுத்து எழுதச் சொன்னால் அவர் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்பாராம். வாய்ப்பு பெற்றவர் பாட்டுக்கான வரியைச் சொல்லமுடியாமல் நெளிந்துகொண்டிருக்க, அவரிடம் எதிர்பார்த்து பாக்கியராஜும் தவித்துக்கொண்டிருப்பாராம். 

இந்தக் காட்சியை அங்கே வந்த கவிஞர் வாலி பார்த்துவிட்டார். “என்னய்யா பிரச்சினை ?” என்று வாலி கேட்டதற்கு நிலைமையை விளக்கியிருக்கிறார் பாக்கியராஜ். வாய்ப்பு பெற்ற பாடலாசிரியரை அனுப்பிவிட்டு வாலி சொன்னாராம் : “இதோ பாருய்யா... நீ வாய்ப்பில்லாமல் அலைபவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னேற்ற வேண்டும் என்று நினைச்சது சரிதான். ஆனால், ஒன்றுமே தெரியாதவர்களுக்கும், மொழியறிவே இல்லாதவர்களுக்கும், உடனே ஒரு பாடல் வரியைச் சொல்ல முடியாதவர்களுக்கும், ஆர்வத்தைத் தவிர வேறெந்தக் கூறுமே இல்லாதவர்களுக்கும் பாடல் எழுத வாய்ப்புத் தருகிறேன் என்று அமரவைத்து நீயும் கெட்டு அவனையும் கெடுக்காதே... பாத்திரம் அறிந்து பிச்சையிடுய்யா...” என்று கூறிவிட்டுச் சென்றாராம். 

என்னே அருமையான அறிவுரை பாருங்கள்! இரப்பவர் எல்லார்க்கும் கொடுக்க முடியுமா? கூடாது. தகுந்தவர்க்கே தரவேண்டும். பிச்சைக்காரனுக்கு வைரக்கல்லைக் கொடுத்தால் என்ன செய்வான் ? இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம் என்று தூக்கி எறிந்துவிடுவான். தின்று தீர்ப்பவனுக்கு அரிய வகை விதையைக் கொடுத்தால் என்ன செய்வான் ? முதல் வேலையாக மென்று தின்றுவிடுவான். ஈய வேண்டும் என்ற எண்ணத்தாலோ இரக்கிறார் என்ற இரக்கத்தாலோ ஒன்றைத் தருவது கூடாது. அதனால் ஈகைக்கும் பெருமையில்லை. இரந்தோர்க்கும் பயனில்லை. 

பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும். இங்கே பாத்திரம் என்பது கொள்கலன். தகுநிலை. அது ஓட்டைப் பாத்திரமாயிருக்கையில் தேனை ஊற்றினால் என்னாகும் ? வழிந்து வீணாகும். அதனால் பாத்திரம் தகுந்ததா என்று பார்த்தே ஒன்றைத் தரவேண்டும். இந்த ஈகைப்பொருளுக்கு இவன் ஏற்றவனா என்று தகுதி பார்க்க வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும்.  

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles