அழகு தமிழ் பழகு - 27

Friday, April 28, 2017

ஆய்தமும் ஆய்தக் குறுக்கமும்
ஆய்த எழுத்து எனப்படுவது ஃ என்னும் முப்புள்ளியுடைய எழுத்து. தமிழ் எழுத்துகளில் எழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறையுண்டு. ஓரெழுத்தை எழுதி அதன் தலையில் புள்ளி வைத்து அதை மெய்யெழுத்து என்கிறோம்.

ஃ என்னும் எழுத்தின் உடலும் புள்ளிதான், அதன் தலைமீதும் புள்ளிதான். புள்ளியிருப்பதைக்கொண்டு அது மெய்யெழுத்தில் ஒருவகை என்றும் கருதக்கூடாது. மெய்யெழுத்தின் தகைமை அனைத்தையும் தனக்குள் கொண்டது என்பதுதான் அதன் பொருள். எழுத்தைப் பார்க்கும்முன் ஃ என்னும் ஒலியைப் பற்றி முதலில் முழுமையாய் அறிந்துகொள்வோம்.

நாம் ஓர் ஓசையை வாய்திறந்து எழுப்புகிறோம். அதுதான் உயிரோசை. அ என்று வாய்திறந்து சொல்லுங்கள், அதை நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே இருங்கள். அஅஅஅஅஞ். என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது அவ்வாறு எழுப்பிய ஒலியை எவ்வாறு நிறுத்துவது ? அப்படி நிறுத்துவதற்கு இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று தொழிற்சாலைச் சங்குபோல் ஒலிக்கத்தொடங்கி, ஒலித்து முடித்து, அதே ஒலிப்பில் ஒலியளவு கீழிறங்கி மூச்சு தீரும்வரை தேய்த்து ஒலிப்பது ஒருவகை. அ என்பதை அவ்வாறு ஒலிக்க முடியும். அ என்று தொடங்கி ஒலியைக் குறைத்தபடி முடிக்கலாம். அவ்வாறு ஒலிப்பவையே உயிரொலிகள். 

இன்னொரு முறை என்னவென்றால் அ என்று தொழிற்சாலைச் சங்குபோல் ஒலிக்கத் தொடங்கி மின்வெட்டானதுபோல் அவ்வொலிப்பைப் பட்டென்று நிறுத்துவது. அவ்வாறு நிறுத்துமொலிகளை நாம் மெய்த்தன்மையுடையதாய் வகுத்துக்கொண்டோம். அவற்றில் தலையாயது ஃ என்னும் ஒலி. அஅஅஃ என்று நிறுத்துகிறோம். அதிர்ச்சியில் அஃ என்று நிறுத்துவோமே அந்த நிறுத்தல் ஒலிதான் அது. 

உயிரொலி அனைத்துக்கும் அ என்பது தலையாயது என்பதைப்போல, இந்த நிறுத்தல் ஒலியான மெய்யொலிகள் அனைத்துக்கும் க் என்பதே தலையாயது. அதனாற்றான் உயிர் முதலாக அ என்ற எழுத்தும், மெய் முதலாக க் என்ற எழுத்தும் இருக்கின்றன. 

அ என்ற எழுத்துக்கும் க் என்ற எழுத்துக்கும் ஒரு கலப்பு இருக்குமானால் அதுதான் ஆய்த எழுத்து. ஆய்த எழுத்தான ஃ என்னும் எழுத்தை அக் என்று ஒலிப்பது இத்தன்மையால்தான். அந்த க் என்னும் மெய்யொலியை மேலும் நுண்மையாக ஒலிக்க முடியுமானால் அதுதான் ஆய்த எழுத்தின் ஒலிப்பு. வன்மையின் மென்மை கூடிவரவேண்டும். தனியெழுத்தாகத்தான் அதனை அஃ என்று ஒலிக்கலாமே தவிர, சொல்லிடையில் அவ்வொலியை உயிர்நீக்கி மெய்த்தன்மையோடுதான் ஒலிக்கவேண்டும். 

உயிரெழுத்தின் ஒலிகளே முதன்மையான ஒலிகள் என்று நாம் கருதியிருக்கிறோம். அதற்கும் மூத்ததாக ஓர் ஒலிப்பைச் சொல்லவேண்டுமென்றால் ஃ என்னும் ஒலிப்பைத்தான் சொல்லவேண்டும். ஃஃஃஃ என்று பறவைகள் கொட்டி ஒலிப்பதைப்போன்ற ஒலி அது. வௌவால்கள் க்ட் என்பதைப்போன்ற ஓர் ஒலியை எழுப்பி அதன் எதிரொலியைப் பெற்றே தடைதவிர்த்து இருட்டில் பறக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப்போன்ற ஒலிதான் ஆய்த எழுத்துக்குரியது. 

அவ்வொலியைத் தனித்து ஒலிக்க முடியாது என்பதுதான் அடிப்படை. அதனாற்றான் ஃ என்னும் எழுத்து எந்தச் சொல்லிலும் முன்னே தொடங்காது, பின்னேயும் முடியாது. அஃதாவது, சொல் முதலெழுத்தாகவோ சொல்லின் ஈற்றெழுத்தாகவோ ஃ என்னும் எழுத்து தோன்றாது. பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது சிலர் ஆய்த எழுத்தை முன்னே அமைத்து எழுதுகின்றனர். ஃபேன், ஃபோன் என்று எழுதுகிறார்கள். ஃ என்னும் ஆய்தம் சொல்முதலெழுத்தாகத் தோன்றாது என்ற இலக்கணத்தை அறிந்தவர்கள் அவ்வாறு எழுதமாட்டார்கள். இனி அவ்வாறு எழுதாதீர்கள். ஃ என்னும் எழுத்தைச் சொல்லுக்கு நடுவில் மட்டும்தான் இட்டு எழுதவேண்டும்.

எல்லா எழுத்துகளுக்கும் நடுவில் ஃ இட்டு எழுதவும் முடியாது. அதற்கு முன்னேயுள்ள எழுத்து குறிலாக மட்டுமே இருக்கவேண்டும். பின்னே வரும் எழுத்து வல்லின உயிர்மெய்யெழுத்தாக மட்டுமே இருக்க வேண்டும். அந்நிலையில்தான் சொல்லின் நடுவில் ஆய்த எழுத்து அமரும். உங்களுக்குத் தெரிந்த சொற்களை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அஃது, எஃகு, கஃசு, அஃறிணை, பஃதொடை, முஃடீது. இங்கே ஆய்தத்திற்கு முன்னுள்ள எழுத்து குறிலாகவும் பின்னுள்ள எழுத்து வல்லின உயிர்மெய்யாயும் இருத்தல் கண்டீர். 

இவ்வெழுத்துக்கு ஆய்தம் என்ற பெயர் ஏன் வந்தது ? ஆய் என்கின்ற வினைவேரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றை நுணுகிக் கண்டு சொல்லுவதுதான் ஆய்தல். கீரை ஆய்ந்து நல்லனவற்றைப் பிரித்தெடுக்கிறார்கள். ஒன்றை ஆய்ந்து சொல்லுகிறார்கள். ஆக, ஆய்ந்த நுண்மையோடு கூடிய மெய்யொலி என்ற பொருளை உணர்த்தும் சொல்தான் ஆய்தம் என்பது. கேடயம் என்னும் ஆயுதத்தில் உள்ள முப்புள்ளி வடிவில் இவ்வெழுத்து இருப்பதால் ஆயுதம் என்ற பொருளில் ஆய்த எழுத்து பயில்கிறது என்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே, அது தவறு. முப்புள்ளி வடிவமின்றியும் மேல்கீழ் புள்ளியும் வளைகோடுமாகவும் இவ்வெழுத்து முற்காலத்தில் எழுதப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆய்த எழுத்தின் ஒலிப்பளவு அரை மாத்திரை. ஆய்த எழுத்து தோன்றும் புணர்ச்சி நிலைமைகள் இரண்டு இருக்கின்றன. அங்கே அந்த ஆய்த எழுத்து தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து குறைந்து கால்மாத்திரை அளவில் ஒலிக்கும். அதைத்தான் ஆய்தக் குறுக்கம் என்கிறார்கள். 

ஆய்த எழுத்து தன் ஒலிப்பளவில் பெறுகின்ற குறுக்கம். எடுத்துக்காட்டாக, ல் என்ற மெய்யெழுத்திலும் ள் என்ற மெய்யெழுத்திலும் முடியும் சொற்களை அடுத்து தகர எழுத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் ஆய்தம் தோன்றப் புணரும். அவ்வாறு புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் தன் ஒலிப்பளவான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.

அல் திணை என்ற இரு சொற்களும் புணரும்போது என்னாகிறது ?

அல் + திணை = அஃறிணை  
முள் + தீது = முஃடீது

இவ்வாறு புணரும்போது புணர்ச்சியில் தோன்றும் ஆய்தமானது தன் ஒலிப்பளவான அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. அஃறிணை என்று சொல்லும்போது ஃ என்ற ஒலியில் எந்த நிறுத்தத்தையும் காட்டாமல் பாதியினும் பாதியாய் ஒலித்துச் செல்லவேண்டும். இத்தகைய புணர்ச்சி நிலைமைகளில்தாம் ஆய்தத்திற்கு ஒலிப்புக் குறுக்கமேயன்றி அஃது, இஃது, கஃசு, எஃசு போன்ற பிறவிடங்களில் ஆய்தத்திற்கு எந்தக் குறுக்கமும் இல்லை என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.

ஏதோ இரண்டு சொற்களுக்கு மட்டுமே ஆய்தம் பயன்பாட்டுக்கு வருகிறது. அந்தச் சொற்களும் புலவர் பயன்பாட்டாடோடு நிற்க, ஆய்தக் குறுக்கம் போன்றவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி எழலாம். முன்பே சொன்ன அதே விளக்கம்தான், இவையெல்லாம் நம்மொழி ஒலிப்பின் நுண்மைகளோடு தொடர்புடையவை. மொழி இயற்கையை அறிந்துகொள்ளத் துணைநிற்பவை.

ஆய்த எழுத்துப் பயன்பாட்டை மிகுதியாக்குங்கள் என்றுதான் நான் கூறி வருகிறேன். ஆய்த எழுத்தை பயன்படுத்தும் வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். பிறமொழிச் சொற்களில் ஃபேன் ஃபோன் என்று பயன்படுத்தாதீர்கள். ஆனால், மெக்டவல் என்று எழுதுமிடத்தில் மெஃடவல் என்று எழுதுங்களேன். அக்வா என்பதை அஃவா என்று எழுதலாம். பிறமொழிச் சொற்கள் என்றில்லை, தமிழிலேயே கூட சொல்+திறம் என்று புணர்த்தி எழுதவேண்டிய இடத்தில் சொற்றிறம் என்று எழுதுவது ஒருவகை. அங்கே சொஃறிறம் என்றும் புணர்த்தி எழுதலாம். அது இது எது என்று எல்லாவிடத்திலும் எழுதிச் செல்லாமல் அஃது இஃது எஃது என்று பயன்படுத்துங்களேன். அவ்வாறு சொல்வதால் அந்தச் சொஃறொடரே தமிழ்த்தன்மையால் செம்மாந்து நிற்பதை உணர்வீர்கள்.

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles