கவிதைகள் சொல்லவா! - பா.மீனாட்சி சுந்தரம் 

Friday, April 28, 2017

வெக்கை சூழ் இக்கோடை 
கொதிகலனில் போட்ட 
கொண்டைக் கடலையென

மண்டையப் பொளக்கிறது 
உக்கிர உச்சிவெயில்
ஊசித் 
தூறலாவது 
விழுமா 
என 
ஏங்குகிறது 
என் ஏகாந்தம்

பாம்பெனக் 
கொத்துகிறது 
இவ்வெயில்

விசமேறிக் கிடக்கும் 
பிரபஞ்சமென 
தலைசுற்றுகிறேன்

இடைச்சி கடைந்த 
இதமான மோரினைப் 
பருகப் பருக
உடலிலிருந்து இறங்குகிறது 
ஏறுவெயில்

வெள்ளாவி வச்சு 
வெளுவெளுன்னு வெளுத்து 
கசக்கிப் பிழிஞ்சு 
காயப் போடுகிறது இவ்வுலகை
உன்மத்த வெறியோடு 
தாண்டவக்கோனாடும் வெயில்

பொக்கை வாய்க் கிழவன்
மென்று கடித்துத் துப்பிய பதார்த்தமாய் 
என் யாக்கையை மென்று 
வேர்வையைத் துப்புகிறது
வெக்கை சூழ் இக்கோடை

வெக்கையின் அனலை 
நீர்ப்பறவையாய் துரத்தியடித்து
நேற்றிரவு நனைத்த மழையின் ஈரம்
இன்னும் 
இன்னும் 
இன்னும்
குளிர்ச்சியாய் றெக்கையடிக்கிறது
ஏசியில்லா என்வீட்டில்

பெருங்காமம் கொண்டவனைத் துரத்தும் 
ஊழ்வினையைப் போல் 
இக்கோடை துரத்துகிறது 
அக்னி நட்சத்திரமென

ஒரு கன்னத்தில் அடித்தவனை
இரண்டு கன்னத்திலும் அடிக்கிறது
சூடு சொரணை உள்ளதுதான்
சுள்ளுன்னு அடிக்கும் இவ்வெய்யில்

வன்மம் நிறைந்தவளின்
கண்களில் பதுங்கியிருக்கும் தேவரூபன்
துடிதுடித்து மடிந்ததைப் போலவே
உன்னிடம் சொல்லப்படாத 
காதலின் வாதையும்
வாட்டுகிறது எனை

கொடுங்கூற்றுக்கிரையாகுமோ
இக்கோடை

ஒவ்வொரு நிமிடமும்
வெவ்வேறு மாதிரி
அடித்துத் துவைக்கிறது வெய்யில்.

கீரைக்காரியின்
வெண்கலக் குரலென
கணீரென்று ஒலிக்கிறது
தகரத்தில் அடித்த
வெய்யிலின் எதிரொளி.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles