கோடை வாசிப்பு

Friday, April 28, 2017

'படிக்கணும்னு ஆசைதான். ஆனா, எங்கே நேரம் இருக்கு?' வாசிப்புப் பழக்கமில்லாத பலரும் இப்படிச் சொல்வார்கள். அதைக் கேட்கிற வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள், 'இதெல்லாம் சும்மா சாக்குப்போக்கு, மனசிருந்தா மார்க்கமுண்டு' என்பார்கள்.

இவர்கள் இருவர் சொல்வதும் உண்மைதான். தினசரி வேலைகளுக்கு நடுவே வாசிப்பைப்போன்ற பொழுதுபோக்குகளுக்கு நேரம் செலவிட இயலாத சூழ்நிலை உள்ளது. அதேசமயம், கொஞ்சம் மெனக்கெட்டால், வழக்கமான வேலைகளைத் தியாகம் செய்யாமலேயே வாசிப்புக்கான நேரங்களைக் கண்டுபிடித்துவிடலாம்.

எடுத்துக்காட்டாக, எனக்குத் தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் வேலைக்குக் கிளம்பும்போது கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்கிறார். சவாரி இல்லாதபோது கொஞ்சம் படிப்பார், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்திருந்தால் கொஞ்சம் படிப்பார், இப்படி நாள்முழுக்கக் கொஞ்சம்கொஞ்சமாக வாசித்தே தினமும் ஒரு புத்தகத்தை முடித்துவிடுகிறார்.

இதேபோல், பேருந்தில், ரயிலில், விமானத்தில், திரைப்படத்துக்காக வரிசையில் காத்திருக்கும்போது, அவ்வளவு ஏன், பூங்காவில் நடக்கும்போதுகூடப் படிக்கிறவர்கள் உண்டு. படிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் போதும், அதற்கான வழிகளை மக்கள் எப்படியாவது உருவாக்கிக்கொண்டுவிடுவார்கள்.

ஆனால், அந்த எண்ணத்தை எப்படி வரவழைப்பது?

முதலில், வாசிப்பில் இருக்கிற சுவை நமக்குப் பழகவேண்டும். அதற்கான ஊக்கம் உள்ளிருந்து வரவேண்டும், வெளியிலிருந்து வரக்கூடாது.

இதை நாம் பள்ளிக்கூடத்திலேயே பார்க்கலாம். 'புத்தகம் படிச்சா நல்ல மதிப்பெண் வாங்கலாம்' என்பதற்காகப் படிக்கிறவர்கள், அப்படி மதிப்பெண் வாங்கிய மறுகணம் அதை மறந்துபோய்விடுவார்கள். ஆனால், விஷயம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவோ, வாசிப்பின் சுவையை அறிந்தோ படிக்கிறவர்களுக்கு அது நெடுநாள் நினைவில் நிற்கும்.

அதுபோல, 'சார் பெரிய படிப்பாளி' என்று மற்றவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காகப் படிப்பது, வெளியிலிருந்து வருகிற ஊக்கம். அந்தத் தேவை நிறைவேறியபிறகு, அல்லது, அது நிறைவேறாது என்று தெரிந்தபிறகு படிக்கத் தோன்றாது. மாறாக, நூல்களை வாசிப்பதன்மூலம் கிடைக்கும் பரவசத்தைப் புரிந்துகொண்டு, அந்த அனுபவத்துக்காகவே வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் எப்படியாவது வாசிப்புப் பழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.

ஆனால், இதை எங்கே தொடங்குவது? அந்த அனுபவத்தை முதலில் ருசித்துப்பார்த்தால்தானே அது நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று தெரியும்?

பள்ளிகளில் மாணவர்களுடைய வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகக் கோடை விடுமுறை நேரங்களில் 'வாசிப்புத் தாள்' ஒன்றைத் தருவார்கள். அதில் பல நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கி வாசிக்க வேண்டும். அப்படி வாசித்த நூலைப்பற்றிச் சுருக்கமாக ஒரு குறிப்பு எழுத வேண்டும். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும்போது ஆசிரியரிடம் அந்தக் குறிப்பைத் தரவேண்டும்.

ஆண்டுமுழுக்கப் பள்ளியில் நூலகம் இருக்கிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் அங்கே சென்று நூல்களை எடுத்து வாசிக்கிறார்கள். ஆனால், அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மாணவர்களும் இருக்கிறார்கள், அவர்களை ஆண்டுக்கு ஒரு புத்தகமாவது வாசிக்க வைக்கலாமே என்பதுதான் இந்தக் 'கோடை வாசிப்புத் தாளின்' நோக்கம்.

இந்தத் தாளில் என்னமாதிரியான புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும்?

அது வகுப்புக்கு வகுப்பு மாறுபடும். ஒன்றாம் வகுப்புக்குப் படங்கள் அதிகமுள்ள கதைப் புத்தகங்களைப் பரிந்துரைப்பார்கள், ஒன்பதாம் வகுப்புக்கு எழுத்துகள் அதிகமுள்ள நாவல்கள், வாழ்க்கை வரலாறுகளைப் பரிந்துரைப்பார்கள்.

வகுப்பு என்பதைவிட, வயது என்பதுதான் இங்கே முக்கியம். அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு என்னமாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என்பதை யோசித்து ஆசிரியர்கள் இந்தப் பட்டியலைத் தயாரிப்பார்கள்.

மொழியைப் பொறுத்தவரை, அந்தப் பள்ளியில் என்னென்ன மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்பதைப்பொறுத்து இந்தப் பட்டியல் மாறும். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஹிந்தி என்பதுபோல் பரிந்துரைப்பார்கள்.

மாணவர்கள் படிக்கவேண்டியது ஒரு புத்தகம்தான், ஆனால், இந்தப் பட்டியலில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றிருக்கும். அவையும் பலதரப்பட்ட புத்தகங்களாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு நகைச்சுவைக்கதை, ஒரு சரித்திரக்கதை, இரண்டு அறிவியல் புனைகதை, ஒரு கவிதைத்தொகுப்பு... இப்படி.

ஒரே ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு ஆசிரியர்கள் இத்தனை நீளப் பட்டியலைத் தருவது ஏன்?

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் முதல் ஓரிரு புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைத் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துவிடுவார்கள். சொல்லப்போனால், 'இதுல ஒரு புத்தகத்தைதான் வாசிக்கணுமா? நாலஞ்சு வாசிக்கறேனே!' என்றுகூட அவர்கள் ஏங்கக்கூடும்.

ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடைய நிலைமை தலைகீழ். அவர்களுக்கு எதை வாசிக்கவேண்டும் என்றே தெரிந்திருக்காது. சொல்லப்போனால், எதையும் வாசிக்க வேண்டாம் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். ஆசிரியர் அதை ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதால், வேறு வழியில்லாமல் ஏதேனும் ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க முனைவார்கள்.

அப்போது, அவர்கள் ஒவ்வொரு புத்தகத் தலைப்பாகப் படிக்கப் படிக்க, அந்தப் புத்தகங்களை நூலகத்திலோ புத்தகக்கடையிலோ பார்க்கப்பார்க்க, அவர்களுடைய மனம் வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அவற்றை நிராகரிக்கும், 'இது நீளமான கதை', 'இது ரொம்பச் சின்ன கதை', 'இது சோகமான கதை', 'இந்த இங்கிலீஷ் எனக்குப் புரியாது', 'இந்த எழுத்தாளர் கண்ணாடி போட்டிருக்கார்', 'இந்தப் புத்தகத்துல படங்களே இல்லை', 'இந்தப் புத்தகத்துல வெறும் படங்கள்தான் இருக்கு'... இப்படி ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு புத்தகத்தையும் அவர்கள் நிராகரிக்கத்தான் நினைப்பார்கள். பசி இல்லாதபோது யாராவது சாப்பிடச்சொன்னால் விதவிதமாகக் காரணம் சொல்லி அதைத் தள்ளிப்போடுகிறோமல்லவா, அதுபோல்தான் இதுவும்.

இப்படி அவர்கள் அனைத்தையும் நிராகரிக்கிற மனோநிலையில் இருக்கும்போது, அவர்களையும் குஷிப்படுத்தி உள்ளிழுக்கவேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு. ஆகவே, பட்டியலைப் பெரிதாக்கிவிடுகிறார்கள். வரிசையாக நிராகரித்துக்கொண்டிருப்பவர் ஏதேனும் ஒன்றையாவது ரசித்துவிடுவார் என்கிற நம்பிக்கைதான்.

இந்தக் கோடை வாசிப்புப் பயிற்சியைப் பள்ளிக்கு வெளியிலும் நாம் முன்னெடுத்துச் செல்லலாம். ஒருவேளை உங்களுக்கு நூல் வாசிப்புப் பழக்கம் இல்லாவிட்டால், இதன்மூலம் தொடங்கலாம்.

முதலில், நீங்கள் எந்தவகை நூல்களை வாசிக்க விரும்புகிறீர்கள் என்று யோசியுங்கள். 

சிறுவயதில், பள்ளியில் படித்தபோது ஏதேனும் ஒரு குறிப்பிட்டவகை நூல்களை நீங்கள் விரும்பி வாசித்ததுண்டா? சிறுகதை, நாவல், துப்பறியும் கதை, கவிதை, ஹைக்கூ, கட்டுரை, வரலாற்று நூல்கள்... வகை எதுவானாலும் பரவாயில்லை, வாசிப்பில் சிறந்தது, மோசமானது என்று எதுவும் கிடையாது.

ஒரு விஷயம், சின்ன வயதில் வாசித்தது என்பதாலேயே இப்போதும் நீங்கள் அதை விரும்பவேண்டும் என்று அவசியம் கிடையாது. அதன்பிறகு உங்கள் மனோநிலை, விருப்பங்கள் எவ்வளவோ மாறியிருக்கும். ஆனால், எங்கே தொடங்குவது என்று தெரியாத சூழ்நிலையில், அங்கிருந்து தொடங்கலாம்.

ம்ஹூம், நான் எப்போதும் எந்தப் புத்தகத்தையும் விரும்பிப் படித்தது கிடையாது என்றால், உங்களுக்குப் பிடிக்கும் என்று தோன்றக்கூடிய ஏதேனும் ஒரு துறை/வகையை ஊகித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது சரிப்படாவிட்டால், அப்புறம் மாற்றிக்கொள்ளலாம்.

உங்களுடைய நண்பர்கள் யாரேனும் நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த துறை/வகையை அவர்களிடம் சொல்லி, 'இந்தமாதிரி நல்லதா ஒரு பத்துப் பதினஞ்சு புத்தகம் சொல்லேன்' என்று கேட்கலாம். ஒருவேளை அப்படி நண்பர்கள் யாரும் இல்லையென்றால், அருகிலிருக்கும் புத்தகக்கடை/நூலகத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியரிடம் கேட்கலாம்.

பல எழுத்தாளர்கள், விமர்சகர்கள், தமிழில் வாசித்தாகவேண்டிய நூறு சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், எழுபத்தைந்து கவிதைத்தொகுப்புகள் என்பதுபோல் தங்களுடைய ரசனைப் பட்டியல்களை வெளியிட்டிருக்கிறார்கள், ஆங்கிலத்திலும் இதுபோன்ற பட்டியல்கள் உண்டு, அவற்றையும் நீங்கள் கருத்தில்கொள்ளலாம்.

எப்படியோ, உங்கள் கையில் இப்போது ஒரு பட்டியல் வந்துவிட்டது, அதில் குறைந்தது பதினைந்து நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எதைப் படிப்பது?

ஆசிரியர் தந்த 'கோடை வாசிப்புத் தாளை' வைத்துக்கொண்டு அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள் என்பது நினைவிருக்கிறதல்லவா? ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் வாசியுங்கள், அது என்னவகைப் புத்தகம் என்று தெரிந்துகொள்ளுங்கள், முடிந்தால் (புத்தகக்கடையிலோ நூலகத்திலோ இணையத்திலோ) அதைக் கையிலெடுத்து நான்கைந்து பக்கங்களை வாசித்துப் பிடித்திருக்கிறதா என்று பாருங்கள், அதன்பிறகு அதைக் காசுகொடுத்து வாங்குங்கள்.

கண்டிப்பாகப் புத்தகத்தை வாங்கினால்தான் உண்டு என்றல்ல, இரவல் பெற்றும் படிக்கலாம். ஆனால், காசுகொடுத்து வாங்கினால், அதற்காகவேனும் கஷ்டப்பட்டுப் படித்துவிடுவோம் என்பது உளவியல் உண்மை.

அதேசமயம், இரவல் புத்தகத்திலும் ஒரு நன்மை உண்டு: ஒருவேளை அந்தப் புத்தகம் சொதப்பலாக இருந்தால், திருப்பிக்கொடுத்துவிட்டு வேறு புத்தகத்தைத் தேடலாம்.

சொந்தப் புத்தகமோ இரவலோ, தொந்தரவில்லாத ஓரிடத்தில் உட்கார்ந்து மனத்தைச் செலுத்திப் படியுங்கள். ஓரக்கண்ணால் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே நுனிப்புல் மேயாதீர்கள். நீங்கள் எதையும் யாருக்கும் நிரூபிப்பதற்காகப் படிக்கவில்லை, உங்களுக்காகப் படிக்கிறீர்கள், அதை மறக்கவேண்டாம்.

ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும், தூக்கம் வரும், செல்ஃபோன் மணி ஒலிக்காதா, இதிலிருந்து பிய்த்துக்கொண்டு ஓடிவிடமாட்டோமா என்று தோன்றும், பல்லைக் கடித்துக்கொண்டு படியுங்கள், தினமும் நான்கு பக்கம் என்றாலும் பரவாயில்லை, விடாமல் படியுங்கள், இந்த வெய்யிலில் வெளியே போய் வேறு என்ன செய்துவிடப்போகிறீர்கள்?

இப்படி வேண்டாவெறுப்பாகப் படிக்கப்படிக்க, உங்களையும் அறியாமல் அதில் மனம் மூழ்கக்கூடும், அடுத்த பக்கம், அடுத்த அத்தியாயம், அடுத்த நாவல் என்று ஆவல் பிறக்கக்கூடும். அப்படியே பிடித்துக்கொண்டு செல்லவேண்டியதுதான்.

ஒருவேளை அப்படி எந்த ஆவலும் பிறக்காவிட்டால்?

வகை/துறையை மாற்றிப்பாருங்கள், அச்சுப்புத்தகங்களுக்குப்பதில் மின்புத்தகங்கள், ஒலிப்புத்தகங்களை முயன்றுபாருங்கள், படிக்கும் இடத்தை மாற்றிப்பாருங்கள், படிக்கும் நிலையை (உட்கார்ந்துகொண்டு, படுத்துக்கொண்டு, நின்றுகொண்டு, நடந்துகொண்டு...) மாற்றிப்பாருங்கள்... வாசிப்பில் ஆர்வம் பிறப்பதற்கு உங்களாலான முயற்சிகளையெல்லாம் செய்யுங்கள்.

அதன்பிறகும் ஆர்வம் வரவில்லையா? பரவாயில்லை. உலகில் ரசிப்பதற்கு இன்னும் எத்தனையோ கலைகள் உள்ளன, வெளியே தேடுங்கள்!
 

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles