பழமொழி இன்பம் - 22

Thursday, April 13, 2017

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...
தான் பாடுபட்டுச் சேர்த்ததை அளந்து பயன்படுத்தும் ஒருவர் பிறத்தியாரின் பொருள் என்றால் அள்ளித் தெளிப்பதைப் பார்க்கலாம். விடுதியில் அறை எடுப்பார்கள். அங்கே மின்சாரத்தை எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவு வீணடிப்பார்கள். கழிப்பறையில் இருக்கையிலும் மின்விசிறி ஓடும்.

பார்க்காதபோதும் தொலைக்காட்சியை அணைக்க மாட்டார்கள். 

நண்பர்களோடு ஏதேனும் ஓர் அறையில் தங்க நேரும்போது குளித்து முடித்துவிட்டு உடைநேர்த்தி செய்துகொள்வார்கள். அப்போது நண்பனின் மணத்தெளிகையைப் (Deodorant) பயன்படுத்த வாய்க்கும். வழக்கமாய் இரண்டொரு பீய்ச்சலில் முடித்துக்கொள்பவர்கள் அன்றைக்குப் பார்த்து உடலெல்லாம் தெளிக்க விடுவார்கள். எண்ணெய்யைப் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுகின்ற மண்தானே ஒட்டும் ? அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். எவ்வளவுதான் தெளித்தாலும் வீசுகின்ற மணம் ஒன்றுதான். ஓராயிரம் மல்லிகைகள் வீசும் மணத்தைத்தான் ஒற்றை மல்லிகையும் வீசும். ஒருதுளி தரும் நறுமணத்திற்கும் ஒருபடி தரும் நறுமணத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட முடியும் ? அதை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். 

இன்னொருவனின் வண்டியை எடுத்து ஓட்ட வேண்டி வரும். அவ்வாறு இரவலாய்க் கிடைத்த வண்டியைப் பாங்காய் ஓட்டிச் சென்று திருப்பித் தரவேண்டும்தானே ? அப்படிச் செய்யமாட்டார்கள். அந்த வண்டியை முறுக்கிப் பிழிந்துவிடுவார்கள். மேடுபள்ளத்தில் முரட்டுத்தனமாய் ஏற்றி இறக்குவார்கள். விபத்துக்குள்ளாக்கி ஒடுக்கித் தருபவர்களும் உண்டு. 

எல்லாரும் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், மனித மனத்தின் கீழ்மைக் குணங்களில் ஒன்று அவ்வாறு செய்யவைத்துவிடும். இயற்கையைப் பாழ்படுத்துவதுகூட இப்படித்தான். இது தனதில்லை என்னும் ஒரு கீழ்மையான எண்ணம்தான் இந்தப் பூமியைப் பாழ்படுத்துகிறது. இங்கே எரிக்கும் உன் புகைக்குழல்தான் வடதுருவத்தின் பனிப்பிசிறு ஒன்றை உருக்குகிறது என்பதை உணர்வதேயில்லை. 

பொருள் யாருடையதோ... ஆனால், அது என் கைக்குக் கிடைத்தால் முடிந்தவரை நுகர்ந்து தீர்ப்பேன் என்னும் தான்தோன்றி மனநிலை. ஊரார் வீட்டுக்கு விருந்தாடிச் சென்றால் அங்கே அவனுடைய மனைவியும் பந்தி பரிமாறிக்கொண்டிருந்தாளாம். தன் கணவனைப் பார்த்ததும் இலையில் வழக்கத்திற்கு மாறாக அள்ளியள்ளி நெய்யூற்றினாளாம். இலையெங்கும் நெய்யாய் வழிந்ததாம். 

அடுத்தவன் பொருளை அள்ளி இறைப்பது. தமக்குத் தொடர்பில்லை, இழப்பில்லை என்று தெரிந்தால் முற்றாய்த் தொலைப்பது. “ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...” என்னும் மனநிலைதான் இன்று நாம் அடைந்துள்ள சூழலியல் சீர்கேட்டுக்கும் காரணம்.  

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles