அழகு தமிழ் பழகு - 26

Thursday, April 13, 2017

மகரக் குறுக்கம் 

மகரக் குறுக்கம் என்று அடிக்கடி படித்திருப்பீர்கள். ஐகார ஔகாரக் குறுக்கங்களைப் போலவே மகரக் குறுக்கம் என்னும்போது மகர எழுத்துகள் அனைத்தும் குறுகி ஒலிக்குமா என்பது கேள்வி. அதில் பாதி சரி. மீதி தவறு. 

ஐகார ஔகாரங்களில் அவ்வரிசை எழுத்துகள் அனைத்தும் குறுகி ஒலிக்கும் என்று பார்த்தோம். மகரக் குறுக்கத்தில் ம் என்ற மகர மெய்யெழுத்து மட்டுமே குறுகி ஒலிக்கும். ம முதல் மௌ வரைவிலான மகர உயிர்மெய் எழுத்துகள் எங்கும் குறுகாமல் வழக்கம்போலவே ஒலிக்கும். மகர மெய்யெழுத்தாகிய ம் என்னும் எழுத்துக்கு மட்டும்தான் குறுக்கம்.
 
மகர மெய் எவ்வாறு குறுகுகிறது ? ஐகாரம் சொல்லுக்கு  முதல், நடு, இடையில் வந்தால் குறுகும்... ஔகாரம் சொல்லுக்கு முதலில் வந்தால் குறுகும்... என்று பார்த்தோம். அதுபோல் மகரம் எங்கே குறுகும் ? மகர மெய்யானது சொல்லுக்கு இறுதியில் வரும்போதுதான் குறுகும்.
 
சொல்லுக்கு இறுதியில் மகர மெய் எவ்வாறு வருகிறது ? ஆம், நாம், பட்டம், கள்ளம், வளம், வானம் என்று பலவாறு வருகிறது. இவ்வாறு சொல்லுக்கு இறுதியில் குறுக வேண்டும். குறுகுகிறதா ? இல்லை. எல்லாச் சொல்லிறுதி எழுத்துக்கும் மகரமெய்க் குறுக்கம் இல்லை. மிகவும் அரிதான நிலைமைகளில் மட்டுமே மகரமெய் தன் ஒலிப்பளவில் குறுகும். சிற்சில சொற்களுக்கு மட்டுமே மகரமெய்க் குறுக்கத்தை வகுத்துள்ளார்கள்.
 
எடுத்துக்காட்டாக, மருளும் என்று ஒரு சொல் இருக்கிறது. இந்த ளு என்னும் எழுத்து, இறுதியில் உள்ள ம் என்னும் மகர மெய்யோடுகொண்ட ஒலியொற்றுமையால் மயங்கி உகரம் கெடுகிறது. ளு என்னும் எழுத்து ள்+உ என்னும் எழுத்துச் சேர்க்கையால் உருவாவதுதானே ? அந்த உ என்னும் எழுத்து கெடுகிறது. கெட்ட பின்பு எஞ்சுவது எது ? மருள்ம் என்ற சொல் எஞ்சுகிறது. அந்த மயக்கம் அத்தோடு நிற்பதில்லை. ள் என்னும் மெய்யை அடுத்து மகர மெய் வருவதால் ள் என்ற ஒலிப்பு மேலும் மயங்குகிறது. அவ்வாறு மயங்கி ண் என்று மாறிவிடுகிறது.
 
மருளும் => மருள்ம் => மருண்ம்  
 
திரைப்பாடல்களை உற்றுக் கேளுங்கள். ண் என்னும் மெய்யைச் சரியாக ஒலிப்பதற்காக கொஞ்சமாய் ள் என்ற ஒலியைக் கலப்பார்கள். ண் என்பதை ள்ந்ந் என்பதுபோல் அவர்களுடைய ஒலிப்பு இருக்கும். கண்ணிலே என்பதைக் கள்ந்நிலே என்பதுபோல்தான் ஒலிப்பார்கள். ஏனென்றால் ள் என்பதும் ண் என்பதும் ஒலிப்பில் ஒன்றுக்கொன்று ஒற்றுமை காட்டும். அந்த இயற்கைதான் மகரக்குறுக்கத்தில் எழுத்து மயக்கமாகச் செயல்படுவது.  
 
மருளும் என்னும் அந்தச் சொல் ‘செய்யும்’ என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கிறது. இவ்வாறு மகரக்குறுக்கமாக அமைகின்ற சொற்கள் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டில்தான் இருக்க வேண்டும். செய்யும் என்ற வாய்பாடு குறித்தெல்லாம் பின்னொரு கட்டுரையில் விரிவாக விளக்குவேன். இப்போதைக்கு செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைந்த மகர மெய்யீற்றுச் சொற்களில் மகரக் குறுக்கம் தோன்றும் என்பதை நினைவில் கொள்க.      
 
வெருளினு மெல்லாம் வெருளுமஃ தன்றி
மருளினு மெல்லாம் மருண்ம்.
 
என்பது பாட்டு. இங்கே மருளும் என்ற சொல் மருண்ம் என்று மகரக்குறுக்கமாகி இருப்பதைப் பாருங்கள். “வெருளினும் எல்லாம் வெருளும் அஃதன்றி மருளினும் எல்லாம் மருண்ம்” என்னும் அந்தப் பாட்டு வரியில்  ‘வெருளினும்’ என்னுமிடத்தில் மகரக் குறுக்கம் வரவில்லையா ? வராது. ஏனென்றால் மகரமெய்க்கு முந்திய எழுத்து ளு அல்லது லு என்பதாக இருக்க வேண்டும். இது முதல் விதி. மருளும், உருளும், அருளும் ஆகிய சொற்கள் மருண்ம், உருண்ம், அருண்ம் என்று ஆகும். இவ்வாறு மயங்கிய மகர மெய்க்குக் கால் மாத்திரைதான் ஒலிப்பளவு. இயல்பான மகர மெய்க்கு அரைமாத்திரை ஒலிப்பளவு என்றால் மகரக் குறுக்கத்துக்குக் கால்மாத்திரை.
 
ளு என்ற எழுத்து மகரமெய்யோடு மயங்கி ண் என்று ஆனதைப்போல, லு என்ற எழுத்து மகரமெய்யோடு மயங்கி ன் என்று ஆகும். போலும் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல்லும் செய்யும் என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கிறது. இதுவும் மேற்சொன்னவாறே மகரமெய்யால் உகரம் கெட்டு போலும் என்பது போல்ம் என்றாகி நிற்கும். கடைசியில் மகர மெய் வருவதால் அந்த ல் என்ற மெய்யால் அதே நிலையில் இருக்கமுடியாது. ன் என்று மேலும் மயங்கும். இறுதியில் போன்ம் என்று நிற்கும்.
 
போலும் => போல்ம் => போன்ம்
 
இவ்வாறு போன்ம் என்று தோன்றும் சொல்லின் மகர மெய்க்கும் கால் மாத்திரைதான் ஒலிப்பளவு. இங்கும் மகரக்குறுக்கம்தான். போன்ம் என்னும் மகரக்குறுக்கச் சொல் செய்யுளில் இடையிலும் வரும். இறுதியிலும் வரும். செல்லும் என்னும் சொல் இடைமெய்க்குறையுற்று செலும் என்றாகி அது சென்ம் என்னும் மகரக் குறுக்கச் சொல்லாகும். இவ்வாறு மருண்ம், போன்ம் போன்ற சொற்கள் செய்யுளில் வாய்பாட்டு இடையூற்றைத் தவிர்க்கவும் இசையின்பத்துக்காகவும் நன்கு பயில்கின்றன. தற்போது இவற்றை நாம் முற்றாக மறந்துவிட்டோம். செய்யுளில் இவை எங்கேனும் அரிதாய்த் தோன்றினாலும் நமக்கு அடையாளக் காணத் தெரியவில்லை. இனியேனும் அவ்வாறிராமல் மகரக் குறுக்கத்தின் அடையாளத்தையும் அருமையும் உணர்வோம்.
 
இனி மகரக் குறுக்கமானது தற்காலத்தில் எங்கே பயன்பாட்டில் உள்ளது என்பதையும் பார்ப்போம். மகரமெய்யீற்றுச் சொல்லை அடுத்து வகரத்தில் தொடங்கும் சொல் வந்தால் அந்த மகர மெய்யீறு தனக்குரிய வழக்கமான மாத்திரை அளவிலிருந்து குறுகி கால்மாத்திரையாய் ஒலிக்கும். வானம்வழங்கும், தரும்வகையில், வாழும்வள்ளுவர் ஆகிய சொற்றொடர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே ம் என்னும் மகரமெய்யை அடுத்து வகரத்தில்தொடங்கும் சொல் வருகிறது. அத்தகைய நிலைமைகளிலும் மகர மெய் குறுகி ஒலிக்கும். இதுவும் மகரக் குறுக்கமே. தற்காலத்தில் எங்கெங்கும் வழங்கும் மகரக் குறுக்கம் இவ்வகைமைதான். 
 
னணமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்’ என்பது நன்னூல் (96) நூற்பா.

னணமுன்னும் = ன்ண் என்பன தனக்கு முன்னே வருகையிலும்
வஃகான் மிசையும் = வகரமெய்க்கு முன்னே தான் வருகையிலும்
மக்குறுக்கும் = மகர மெய் தன் ஒலிப்பளவான அரைமாத்திரையிலிருந்து கால்மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படும்.
 
இத்தகைய செய்யுள் இயற்கைகள் தற்காலத்திற்கு என்ன பொருத்தப்பாடு உடையன என்பது எளிய கேள்வி. ஆனால், இவற்றை நாம் அறிந்துகொள்வதால்தான் நம் மொழியியற்கையை முழுமையாக உணர முடியும். மகர மெய்க்கு எத்தகைய மயக்க ஒலிப்பும் இணையொலிப்பும் உள்ளன என்பதை அறிய முடியும். எழுத்து என்பது ஒரு குறியடையாளம் என்றால் அதை வாயால் சொல்வதில் நாம் காட்டுகின்ற நுண்மையை விளங்கிக்கொள்ளவும் இயலும்.

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles