பழமொழி இன்பம் - 21

Friday, March 31, 2017

கிட்டாதாயின் வெட்டென மற!
மனிதர்களின் நினைவுத்திறனைப் பற்றி அறிவியல் வியக்கிறது. மனித மூளையை நிகர்த்த கணினியை இன்றும் யாரும் செய்துவிடவில்லை. அத்துணை நுண்ணிய உட்செறிவை உடைய அமைப்பு நம்முடைய மூளை.

அதே மூளைக்கு வழங்கப்பட்டுள்ள இன்னொரு அருங்கொடைதான் மறதி. என்றென்றும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ளும் அதே மூளைதான் ஒன்றை நினைவிற்கொள்ளாமல் மறந்துவிடுகிறது. 

எண்ணிப் பார்த்தால் நினைவுத்திறன் எவ்வளவுக்கு எவ்வளவு நம்மை வாழவைக்கிறதோ அதே போன்ற நன்மையைத்தான் மறதியும் வழங்குகிறது. ஒன்றை நினைத்திருத்தல் வாதை என்றால் அதை மறத்தலே அதற்கு மருந்து. 

நினைவின் தடத்தில் ஒன்றுக்கு அவ்வளவு எளிதில் வழி கிடைத்துவிடாது. அதேபோல்தான் மறதியின் பரணில் ஒன்றைத் தூக்கி எறிதலும் எளிதன்று. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்பதுதான் காதலின் பெருந்துயரம். 

எதை நினைப்போம் தெரியுமா ? எது நம்மை உணர்வோடு அழுத்திப் பிடித்து ஆட்கொண்டதோ அதை என்றென்றும் நினைத்திருப்போம். நம் நிராசைகளே நம்மை இயக்குகின்றன.  

என் இளவயதில் ஜிலேபி என்னும் இன் பண்டத்தைத் தின்பதற்கு விரும்பினேன். ஆனால், அதன் கிட்டாமை என்னை வருத்திவிட்டது. உண்பண்டங்களிலேயே அழகிய தோற்றமுடையது ஜிலேபிதான். அதன் அடர்நிறமும் சுருள்வடிவமும் ஓரிரண்டுமுறை தின்று அறிந்திருந்த அதன் இனிமையும் என்னை அடிமையாக்கிவிட்டது. ஆனால், எண்ணும்போதெல்லம் உண்பதற்கு அது கிடைக்கவில்லை. கிட்டவில்லை என்பதால் அதை மறக்கமுடியவில்லை. 

பிற்காலத்தில் என்னால் கூடை நிறைய ஜிலேபியை வாங்கி உண்ணக்கூடிய சூழலும் வாய்த்தது. ஆனால் அப்போது அதன்மீதான மோகம் குறைந்துவிட்டது. கிட்டாதபோது என்னை உறுத்திய அப்பண்டத்தின்மீதான ஏக்கம் கிட்டியதும் குன்றிவிட்டது. ஆனால், அதுவரை நான் பட்டபாடு எவ்வகையிலும் தேவையற்ற ஒரு மயக்கம்தான் என்பது இப்போது விளங்குகிறது. 

கிட்டாதபோது அதை மறந்திருக்க வேண்டும். முதன்முறை ஜிலேபியைத் தின்றபோது கிட்டிய அதே சுவைதான் ஆயிரம் ஜிலேபிகளைத் தின்றாலும் கிடைக்கக்கூடியது. அதற்காக என்னை நானே வருத்திக்கொண்டு சோர்ந்திருந்தது எவ்வகையிலும் அறிவுடைமையன்று. கிட்டாதபோது அதனை மறந்து வேறு நாட்டத்தில் மனம் செலுத்த வேண்டும். கிட்டும்போது பார்த்துக்கொள்ளலாம். இனி கிட்டவே கிட்டாது என்றே ஆனாலும் நாம் என்ன செய்துவிட முடியும் ? ஒன்றும் செய்யமுடியாது. அதை மறந்துவிட்டு நம்மை மீட்பதுதான் நாம் செய்யவேண்டியது. கிட்டாததை வெட்டெனெ மறந்து நம்மை மற்ற ஆக்கங்களில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மற ! 

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles