அழகு தமிழ் பழகு - 25

Friday, March 31, 2017

ஔகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கத்தைச் சென்ற பகுதியில் பழுதறக் கற்றுக்கொண்டோம். அடுத்து நாம் கற்கவிருப்பது குறுக்கத்தின் இன்னொரு வகையான ஔகாரக் குறுக்கம். அஃதென்ன ஔகாரக் குறுக்கம்? ஔகார நெடில் எழுத்துகள் தம் ஒலிப்பளவிலிருந்து குறுகி ஒலிப்பது.
 

ஔ உயிரெழுத்து என்பதை அறிவோம். அ என்னும் உயிரெழுத்து தமிழெழுத்துகளுக்கே தலையாயது. ஆனால் ஔ என்னும் எழுத்து பன்னிரண்டாம் உயிரெழுத்து. அதுதான் கடைசி உயிரெழுத்து. 

தமிழெழுத்துகளின் வரிசை அமைப்பை உற்றுக் கவனிப்பீர்கள் என்றால் ஒன்று புலனாகும். ஒவ்வோர் எழுத்தையும் அதன் பயன்பாட்டு மிகுதியைப் பொறுத்தே வரிசையில் முதல் இரண்டாம் மூன்றாம் இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 

தமிழில் உள்ள அ என்று தொடங்கும் சொற்கள் மிகுதி. ஒலிப்பின் உயிர்த்தோற்றம் அ என்னும் ஒலிதான். அதனாற்றான் அ என்னும் எழுத்து தலைமையிடத்தைப் பிடித்திருக்கிறது. 

எந்த வரிசை எழுத்துகளுக்குச் சொற்கள் மிகுதியாய் உள்ளன என்று உங்களிடமுள்ள அகராதியை எடுத்துப் பாருங்கள். உயிர்மெய் எழுத்து வரிசையில் ககர வரிசை எழுத்துகளில் ஏராளமான சொற்கள் இருப்பதைக் காண்பீர்கள். நம் அகராதிகளில் பேரளவிலான பக்கங்களை ககர வரிசை எழுத்துகளே எடுத்துக் கொள்கின்றன. 

அடுத்துள்ள ஙகர வரிசையில் சொற்கள் பேரளவு இல்லையே, அப்படியிருக்க அவ்வெழுத்தும் பட்டியலில் அடுத்து வருகிறதே என்று கேட்பீர்கள். அந்த ஙகர வரிசை எழுத்துகள் ககரத்துக்கு இனமான மெல்லெழுத்துகள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதனால்தான் ககரத்துக்குக் கீழே ஙகரம், சகரத்துக்குக் கீழே ஞகரம், டகரத்துக்குக் கீழே ணகரம், தகரத்துக்குக் கீழே நகரம், பகரத்துக்குக் கீழே மகரம், றகரத்துக்குக் கீழே னகரம் என்று எழுத்து வரிசை அமைக்கப்பட்டிருக்கிறது. 

அந்தந்த வல்லினத்துக்கு இனமான மெல்லெழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் ஒலிப்பில் நம்முடைய பெரும்பாலான சொற்கள் இருக்கும். கசடதபற-வும் ஙஞணநமன-வும் ஒன்றுக்கொன்று இனமாகி ஒலிப்பவை. அஃதாவது ங் என்ற மெய்யை அடுத்து ககர எழுத்துகளில் ஏதேனும் ஒன்றுதான் வரும். தங்கம், நங்காய், பொங்கி, எங்கே… என வரும் சொற்களை எடுத்துக்கொண்டால் ங் என்ற மெல்லின மெய்யை அடுத்து ககர எழுத்துகளே வருகின்றன. ங்த என்று எங்குமே வராது. ந்ற என்று எங்குமே வராது. இவையெல்லாம் சொற்களோடு நம் எழுத்துகளுக்கு உள்ள செம்மையான உறவுகளைக் குறிப்பவை. அதன்படியே எழுத்துகளின் பட்டியலிலும் முறையாய் அவை ஒன்றின்கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
 
மீண்டும் நாம் பாடத்துக்கு வருவோம். தமிழ் எழுத்துப் பட்டியலில் ஒவ்வோர் எழுத்தும் அமைக்கப்பட்டுள்ளதற்கு அதன் பயன்பாட்டு வலுவும் இனமான ஒலிப்பு முறையும் காரணங்கள் என்பது விளங்குகிறது. அதனால்தான் ஔ என்ற உயிரெழுத்து அதன் வரிசையில் பன்னிரண்டாம் எழுத்தாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொருள் என்ன ? ஔ என்ற உயிரெழுத்துக்குப் பயன்பாட்டு வலு குறைவு. ஔ என்ற எழுத்துக்கே இதுதான் நிலைமை என்றால் அதன்கீழ்வரும் ஔகார உயிர்மெய் எழுத்துகளாக கௌ, ஙௌ. சௌ முதல் னௌ வரையிலான எழுத்துகளின் நிலைமையைப் பற்றிக் கேட்கவா வேண்டும் ? ஆமாம். ஔகார எழுத்துகள் அனைத்துக்கும் சொற்பயன்பாடு குறைவு.
 
சொற்பயன்பாடு ஏன் குறைவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஔகார எழுத்துகள் சொற்களின் இறுதியில் தோன்றமாட்டா. சொற்களின் இடையிலும் தோன்றமாட்டா. சொற்களுக்கு முதலெழுத்தாக மட்டுமே ஔகார எழுத்துகள் தோன்றும். உங்களால் னௌ என்று முடியும் தமிழ்ச்சொல் ஒன்றைக் கூற முடியுமா ? முடியாது. ஔகார எழுத்துகள் சொல்லின் முதலெழுத்தாக மட்டுமே தோன்றும் என்பது ஒரு விதியென்றால் னகர எழுத்துகள் சொற்களுக்கு முதலில் தோன்றவே மாட்டா என்பதும் மற்றொரு விதி. அப்படியானல் னௌ என்ற எழுத்து எந்தச் சொல்லிலும் தோன்றாது என்பதுதானே உண்மை ? ஆம். அஃதே உண்மை. எந்தச் சொல்லிலும் தோன்றாத எழுத்தான னௌ என்னும் எழுத்து தமிழ் எழுத்துகளின் பட்டியலில் கடைசியிலும் கடைசியாகப் போய் உட்கார்ந்துகொண்டதா ? ஆம். தமிழ் எழுத்துகளின் பட்டியலில் னௌ என்ற எழுத்துக்குக் கடைசியிடம். ஔகார எழுத்துகள் அனைத்துக்கும் அவ்வாறே கடைசியிடம்.
 
சொற்களில் தோன்றாத எழுத்துக்கு மொழி எழுத்துகளின் பட்டியலில் எதற்கு இடம்கொடுப்பானேன் என்று சிலர் கேள்வியெழுப்புவர். அவற்றை நீக்கிவிடலாமே, சுமை குறையும் என்பது அவர்களின் தரப்பு. இராணுவப்  படைகளில் சேர்ந்தால் ஒன்றைக் கற்றுக்கொடுப்பார்கள். எதிரியிடம் நம்மைச் சேர்ந்த ஒரேயொருவர் சிக்கிக்கொண்டுவிட்டாலும் அவரை மீட்க ஒட்டுமொத்தப் படையும் ஒன்றாய்ச் சேர்ந்து போராட வேண்டும் என்பதுதான் அது. அவ்வொருவரை மீட்கும் முயற்சியில் மேலும் இருபது வீரர்கள் உயிர்துறக்கவும் நேரலாம். ஆனால், களத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரைக் கைவிட்டு நடக்கும் எண்ணத்துக்கே இடமில்லை. அம்முயற்சியில் ஒட்டுமொத்தப் படைக்கும் கேடு நேரினும் தோள்கொடுத்த வீரனைத் துறந்து நடக்கமாட்டார்கள். அதுதான் போர்மனம். அதுதான் வீரம். அதைப்போன்றதுதான் மொழிப்பட்டியலில் ஔகார எழுத்துகள் பெற்றுள்ள இடம். எவ்வெழுத்துகளில் சொற்கள் பயன்படுகின்றன, பயன்படவில்லை என்பதைக்கொண்டு அளவீடு இல்லை. அவ்வெழுத்து ஒற்றைச் சொல்லில் தோன்றினாலும் அதற்கும் மொழியியற்கையில் இடமுண்டு. கைவிடுவதற்கில்லை.
 
ஐ என்னும் எழுத்து அஇ என்னும் இரண்டு உயிரெழுத்துகளின் ஒலிப்பால் தோன்றியது என்று பார்த்தோமே. அதேபோல் ஔ என்ற எழுத்தின் தோற்றுவாயையும் பார்க்கப்போகிறோம். அ என்ற எழுத்து உ என்ற எழுத்தோடு சேர்ந்து ஒலித்தால் கிடைப்பதுதான் ஔ என்ற ஒலிப்பு. அஉ என்று ஒலிக்கும்போது உ என்ற ஒலிப்பைச் சற்றே குறைத்துச் சொல்லுங்கள். ஔ என்னும் ஒலிப்பு கிடைக்கும். அவ்வாறே அவ்வரிசையின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிக்கப்பெறும். கஉ என்பதுதான் கௌ. சஉ என்பதுதான் சௌ. ஐ என்ற எழுத்தின் ஒலிப்பை அய் என்பதைப்போல ஔ என்ற எழுத்தின் ஒலிப்பை அவ் எனலாம். ஆனால் ஒருபோதும் ஔ என்பதை அவ் என்று எழுதவே கூடாது. 
 
ஔகார எழுத்துகள் நெடில் எழுத்துகள். ஔகாரத்தில் நெடில் வரிசை மட்டுமே உள்ளது. குறில் வரிசை இல்லை. ஆனால், எல்லாவிடங்களிலும் ஔ என்ற எழுத்து நெடிலாய் ஒலிப்பதில்லை. ஔகார எழுத்துகளைத் தனியாய் ஒலிக்கையில் இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கின்றன. ஆனால், சொற்களில் மொழிமுதல் எழுத்துகளாய் இடம்பெறும் ஔகார எழுத்துகள் அடுத்து வரும் எழுத்தின் தொடர்பால் தம் ஒலிப்பளவில் சற்றே குறைந்து ஒலிக்கின்றன. அதைத்தான் ஔகாரக் குறுக்கம் என்கிறோம். சொற்களில் மொழி முதல் எழுத்துகளாய்த்தான் ஔகார எழுத்துகள் தோன்றும் என்பதையும் அறிவோம். ஆக ஔகார எழுத்துகளைத் தனியாய்ச் சுட்டும்போது அவை நெடில் எழுத்துகள். சொற்களில் இடம்பெறும் ஔகார எழுத்துகள் அனைத்துமே ஔகாரக் குறுக்கங்கள் என்னும் முடிவுக்கும் வருகிறோம்.
 
ஔ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களும் மிகக்குறைவே. ஔவித்தல் என்றால் பொறாமைப்படுதல். “ஔவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என்பது திருக்குறள் (167). பொறாமையுள்ள நெஞ்சத்தவனுக்குச் செல்வம் சேர்வதையும் நல்லவன் கெடுவதையும் எண்ணிப் பார்க்கின்றார் வள்ளுவர். 

ஔவை என்பவள் மூதாட்டி. ஔவுதல் என்றால் வாயால் அழுத்தியெடுத்தல். அதைக் கௌவுதல் என்றால் வாயால் கவர்தல். கௌவை என்றால் கள், பழிச்சொல், ஒலி, செயல். கௌளி என்றால் பல்லி. தௌவல் என்றால் கேடு. தௌவுத்தல் என்றால் தத்துதல். நௌவி என்றால் மான். பௌஞ்சு என்றால் சேனை. பௌரி என்பது பெரும்பண் வகை. பௌவம் என்பதற்கு உப்பு, கடல், நீர்க்குமிழி, ஆழம், நுழை, மரக்கணு, முழுநிலவு என நிறையவே பொருள்கள். பௌழியன் என்பவன் சேரன். பௌளி ஒரு பண்வகை. மௌகலி என்றால் காகம். மௌஞ்சி என்றால் ஒரு நாணல்வகை. மௌட்டியம் என்றால் அறியாமை. மௌவல் என்றால் முல்லை, தாமரை. மௌவை என்றால் தாய். வௌவால் என்பது ஒரு பறக்கும் பாலூட்டி. வௌவுதல் என்றால் கைப்பற்றுதல்.
 
ஔகாரக் குறுக்கத்தையும் ஔகாரத்தில் தொடங்கும் சொற்களின் சிறு பட்டியலையும் அறிந்துகொண்டோம். ஔகார எழுத்துகளையும் சொற்களையும்  பற்றிய ஒட்டுமொத்தத் தொகுப்பும் இஃதே.      
    
- கவிஞர் மகுடேசுவரன்  

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles