பழமொழி இன்பம் - ஊருடன் கூடிவாழ்

Friday, September 30, 2016

எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவான ஒரு தன்மையைச் சுட்டிக்காட்டலாம். அவை தமக்குள் கூடி வாழ்கின்றன. ஆடு மாடுகள் உள்ளிட்ட புல்வெளி மேய்ச்சல் விலங்குகள் தனித்தலையாமல் மந்தை மந்தையாய்க் கூடிவாழ்வதைக் காண்கிறோம். தனித்தலையும் புலிகள்கூட ஆங்காங்கே சிறுநீர் கழித்து அடையாளமேற்படுத்தி, தன் இனத்தோடு ஏதேனுமொரு தொடர்பில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

நிலவாழ் உயிரினங்களில் மிகப்பெரியதாகக் கருதத்தக்க யானைகளும் நீர்யானைகளும் காண்டாமிருகங்களும் தமக்குள் ஒன்றாகக் கூடியே வாழ்கின்றன. பறவைகளைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. வானத்தில் அணியணியாய் அவை பறக்கும் அழகுக்கு நிகர் வேறில்லை. வட துருவத்திற்கும் தென் துருவத்திற்குமிடையே பறக்கின்ற துருவ நாரைகள்கூட தனித்துப் பறப்பதில்லை என்கிறார்கள். 

 

காகங்களின் ஒற்றுமையும் அவற்றின் பகுத்துண்ணும் வாழ்முறையும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று வள்ளுவன் வியக்கத்தக்க அளவில் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள்தாம் தமக்குள் ஒடுங்கி ஒருவரோடும் ஒற்றைச்சொல் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்றவர்களாய் மாறிப்போனார்கள். 

 

‘மனிதன் என்பவன் சமூக விலங்கு’ என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவன் சமூகமாக தன்னை ஆக்கிக்கொண்ட பிறகு தனக்குள்ளாகவே ஓர் உலகத்தை ஏற்படுத்திக்கொண்டு தன்னலத்தவனாக தனித்தலைகின்றான். 

 

ஒரு மனிதனின் தேவைக்கு வேண்டிய உணவும் இன்னபிற பொருள்களும், எங்கோ ஒரு நிலத்தில் யாரோ பலரால் விளைவித்தும் ஆக்கியும் அனுப்பப்படுகின்றன. அவற்றைத்தான் அவன் நுகர்கின்றான். ஆனால், அங்குள்ளவனுக்கு ஓர் இடர் என்றால் இங்குள்ளவர்கள் எந்த அக்கறையும் காண்பிப்பதில்லை. 

 

பிறவுயிரினங்கள் தம் புவிவாழ்க்கையில் இயற்கை வழங்கியதற்கு மேலாக எழமுடியாமல் நின்றுகொண்டிருக்க, மனித இடம் நிகழ்த்திய முன்னேற்றப் பாய்ச்சலுக்கு அவ்வினம் ஒன்றுபட்டு ஓரினமாய் உழைத்ததுதான் காரணம். ஆனால், தற்கால மனிதன் அதை மறந்தவனாய் தானும் தன் குடும்பத்தாரும் என்பவனாய் ஏன் ஆனான்? அடுத்த வீதியில் ஒரு துக்க நிகழ்ச்சி என்றால்கூட தனக்கென்ன என்பவனைப்போல் வாழ்ந்து பழகிவிட்டான். 

 

நம்  முன்னோர்கள் இந்தத் தனிமனித முடக்கத்தை ஏற்கவில்லை. ‘ஊருடன் கூடிவாழ்’ என்றுதான் கற்பித்திருக்கிறார்கள். ஊரன் என்றுதான் ஒருவனை நம் இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஆனால், தொடர்புகள் பெருகிவிட்ட இக்காலத்தில் ஊருடன் கூடி வாழாமல் ஒதுங்கி வாழும் போக்குத்தான் முளைவிட்டிருக்கிறது. ஊருடன் கூடி வாழ்வதை விடவும் மெச்சத்தக்க சமூகச் செயல்பாடு என்று வேறேதும் இருக்க முடியுமா, என்ன ?    

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles