பழமொழி இன்பம் - வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் ? 

Monday, October 31, 2016

ஊரிலேயே அக்கா மகள் இருப்பாள். ஏதேனும் சிறுபகையைக் கருத்தில் வைத்துக்கொண்டு பெண் தேடி அலைவார்கள். மணப்பெண் எளிதில் கிடைத்துவிடுவதில்லையே. ஒருவழியாய் ஆய்ந்து ஓய்ந்து, ‘வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்” என்று அக்கா மகளையே மணமுடிப்பார்கள். 

பால்கறந்து உறைவுக்கு ஊற்றித் தயிராக்கிக் கடைந்து வெண்ணெய்யை எடுத்து வைத்திருப்போம். அதை உருக்கினால், சுவையும் மணமும் ஊட்டமும் உயிர்ச்சத்தும் மிகுந்த நெய் கிடைக்கும். ஆனால், வெண்ணெய்யை உருக்காமல் வைத்துக்கொண்டு நெய்தேடித் திரிவார்களா? அதுபோல் அறிவீனமான இன்னொரு செயல் உண்டா? 

 

கைப்பொருளில் இருந்து காரியத்தைத் தொடங்க வேண்டும். இருக்கின்ற வாய்ப்பிலிருந்து, இன்னொரு வாய்ப்பை நோக்கி நகர வேண்டும். உங்களுக்கு என்ன தெரியுமோ, அதைக்கொண்டு நம் முயற்சியைத் தொடங்க வேண்டும். கையிலுள்ள வெண்ணெய்யிலிருந்து நெய்யை உருக்க வேண்டும். அது எளிது. மூலப்பொருள் நம்மிடம் இருக்கிறது. அதிலிருந்து விளைபொருளை ஆக்குவது சுலபம். அதை விடுத்து, இல்லாத ஒன்றிலிருந்து எட்ட முடியாத ஒரு வினையைக் கனவு காண்பது தவறு. 

 

வேளாண்மைத் தொழில் மிக்குள்ள பகுதியில் வசிக்கின்றீர்கள் என்றால், உங்கள் தொழில் முயற்சியை வேளாண்மை சார்ந்த ஒன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும். நெசவுத் தொழில் சார்ந்த பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால், அதையொட்டிய சார்புத் தொழில்களில் ஈடுபட வேண்டும். அதனால்தான் வாரச் சந்தை என்பது காய்கறிகளையும் கால்நடைகளையும் விற்கும் தளத்திலிருந்து தொடங்கியது. மக்கள் வாழ்க்கையையொட்டி ஊர்ப்புறத்தில் கூடிய வாரச்சந்தைகள், அவர்களுக்குத் தேவையான பொருள்கள் என்னென்னவோ அவற்றை மட்டுமே விற்பதற்காகக் கூடியது. அவைதாம் அங்கு விற்றன. அந்தப் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்று வாழ்க்கைக்கு எது தேவையில்லையோ அவற்றை விற்கும் கடைகள் பெருகிவிட்டன. நிலைமை தலைகீழாக இருக்கிறது. 

 

இருக்கின்ற இடத்தில் என்னென்ன வாய்ப்புகள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதுதான் உண்மை. வெண்ணெய் என்பது யதார்த்தம். அதிலிருந்து நாம் அடையவேண்டிய இலக்கைத்தான் நோக்க வேண்டும். அதற்கும் அப்பால் போகும் நிலை கட்டாயம் ஏற்படும். ஆனால், அதற்குள் இந்த வாய்ப்பைக் கடக்கப் பழக வேண்டும். அதைக்கொண்டு அடுத்த முயற்சியைத் தொடங்க வேண்டும். வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தவர்கள் அலைந்துகொண்டே இருந்தார்கள். இருக்கின்ற வாய்ப்பின் அருமையை உணராமல் இவ்வாறு பகற்கனவு கண்டவர்கள் தோற்றுப் போனவர்கள். 

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles