அழகு தமிழ் பழகு

Saturday, July 30, 2016

பெயர்ச்சொற்களின் ஆறு வகைகள் 

சொல் வகைமைகளில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கினை அறிந்து கொண்டோம். இவை தொல்காப்பிய வரையறையின்படி பகுக்கப்பட்ட நால்வகைச் சொற்களாகும். இவற்றுள் பெயர்ச்சொல்லே, மொழியில் முதன்முதலாய்த் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் கண்கூடு. செடி என்ற சொல்லே, முதலில் தோன்றியிருக்க வேண்டும். செடி என்பது பெயர்ச்சொல். அச்சொல் தோன்றிய பிறகுதான், முளைத்தது என்னும் வினைச்சொல் தோன்றியிருக்க வேண்டும்.

இதை எவரும் ஏற்பர். ஆக, மொழி வரலாற்றில் முதன்முதலாய்த் தோன்றிய பெயர்ச்சொல்லைக் குறித்து முதலில் பார்க்கப் போகிறோம்.

 

உயிருள்ளவற்றுக்கும் உயிரில்லாதவற்றுக்கும் பெயராய்த் தோன்றுவதும், ஐம்புலன்களாலும் மனத்தாலும் உணர்ந்தறியும்படி இருப்பதுவும் பெயர்ச்சொல் ஆகும். அது ஆடு, மாடு, பூனை, கோழி என்று உயிருள்ளவற்றையும் குறிக்கும். விளக்கு, கத்தி, கம்பு, கல், மண் என்று உயிரில்லாதவற்றையும் குறிக்கும். நிலவு, பாட்டு, மணம், இனிப்பு, குத்து என்று ஐம்புலன்களால் உணரத்தக்கவற்றையும் குறிக்கும். நினைவு, கனவு என்று ஐம்புலன்களால் காண இயலாத நிலையிலும் மனத்தால் உணரத்தக்க பொருள்களையும் குறிக்கும். இப்படிப் பெயர்ச்சொற்களின் பொருளுணர்த்தும் பரப்பு, எல்லா நிலைமைகளுக்கும் உரியது. எந்நிலையிலும் எப்பொருளுக்கும் பெயராய் வழங்கி நிற்பது.

 

பெயர்ச்சொற்களை நம் முன்னோர்கள் அறுவகையாய்ப் பிரித்தனர். அவ்வகைமையின் அடிப்படை, ஒரு பெயர் எதற்குப் பெயராக வழங்குகிறது என்பதைப் பொறுத்தது. எல்லாவற்றுக்கும் பெயராய் ஆகும்படி, ஒரு பெயர்ச்சொல் வழங்கும் என்பது நமக்குத் தெரியும். அது பெயராய் வழங்கும் பொருள்களை முன்வைத்து, அவ்வகைப்பாடு அமைந்திருக்கிறது.

 

முதலில் தோன்றிய சொல் பெயர்ச்சொல்லே என்று பார்த்தோம். அப்படியெனில், முதலில் எதற்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கும்? காணும் பொருள் ஒன்றுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கும். ’அம்மா’ என்று, தான் கண்ணால் கண்ட உயிர்ப்பொருளுக்கு ஒரு குழந்தை பெயர் வைக்கிறது. மரம் என்று ஓர் உயிர்த் தாவரத்திற்குப் பெயர்  வைக்கப்பட்டிருக்கும். கடித்துப் பார்த்ததும், இனிப்பை உணர்த்திய கனிக்கு முதலில் பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஆக, அன்னையும் மரமும் கனியும் என்ன ? இவை உயிருள்ள பொருள்கள். ஆக, பெயர்ச்சொல்லின் முதல் வகைமை பொருட்பெயர். பொருளுக்கு வழங்கும் பெயர்கள். 

 

அடுத்து எதற்குப் பெயரிட்டிருப்பார்கள் ? குட்டையில் நீர் தேங்கியிருக்கும். அங்கே சென்று குடிநீர் எடுத்து வந்திருப்பார்கள். கிணற்றை அகழ்ந்து நீர் பெறப் பழகியிருப்பார்கள். பயிர் செய்யும் நாகரிகத்தை அடைந்தவுடன், வயல்களை உருவாக்கியிருப்பார்கள். குட்டையும் கிணறும் வயலும் வாழ்ந்த ஊரும் என அடுத்த வகைப் பெயர்கள் தோன்றியிருக்கும். இவை எதைக் குறிக்கின்றன ? இவை அந்தந்த இடத்தைக் குறிக்கின்றன. மழைநீர் தேங்கிய இடம் குட்டையெனும் பெயர் பெற்றது. நீரூற்று தோன்றும்வரை, குழியாய் அகழ்ந்த இடம் கிணறு என்ற பெயர் பெற்றது. உண்ணும் தானியங்களை விளைவிக்கும் இடம் வயல் என்றானது. ஆக, குட்டையும் கிணறும் வயலும் என்ன ? இடப்பெயர்கள். ஆம். பெயர்ச்சொற்களின் அடுத்த வகைமை தோன்றிவிட்டது. இடப்பெயர். இடத்திற்கு வழங்கும் பெயர்கள்.

 

காலையில் எழுந்தார்கள். வயலுக்குச் சென்றார்கள். நண்பகலில் மரத்தடியில் உணவு உண்டார்கள். மாலையில் வீட்டுக்கு வந்தார்கள். இரவில் உறங்கினார்கள். கோடையில் வறட்சி நிலவியது. வாடையில் வீசும் காற்று உடலை வருத்தியது. ஆண்டு என்பது பருவகாலச் சுழற்சிகளின் இடையறாத இயக்கம் என்பது விளங்கிவிட்டது. வெய்யிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் கோடைக்கும் திட்டமான கால அளவை இருப்பதை அறிந்துவிட்டார்கள். அதனால் காலத்திற்குப் பெயர்வைத்து அழைத்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலத்திற்குப் பெயர் வைத்துப் பழகினர். காலையும் மாலையும் பகலும் இரவும் கோடையும் கூதலும் என காலப்பெயர்கள் தோன்றின. இது பெயர்ச்சொற்களின் மூன்றாம் வகைமை. காலத்திற்கு வழங்கும் பெயர்கள். 

 

காலம் செல்கிறது. உடலில் நரைகள் தோன்றுகின்றன. கண்களால் முன்புபோல் துல்லியமாய்க் காண முடியவில்லை. காதுகள் முன்போல் கேட்பதில்லை. தலை வலிக்கிறது. மூட்டு பிடித்துக் கொள்கிறது. மரத்திலுள்ள கிளைமீது ஏற முடியவில்லை. செடிகளின் வேர்களில் ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பொருட், பெயர்ச்சொற்களுக்குள் நுண்மையான பல சொற்கள் தோன்றுகின்றன. மரம் என்று ஒரு பொருளுக்கு வைத்த பெயர், அத்தோடு நின்றுவிடவில்லை. அதன் பிற பகுதிகளுக்கும் பெயர் தோன்றுகின்றன. வேர்கள், கிளைகள், இலைகள், தழைகள் என்று நீள்கின்றன. இவையே பெயர்ச்சொற்களின் நான்காம் வகைமையாம். ஒரு பொருளின் உறுப்பாய் அமைந்தவற்றைக் குறிப்பது. இவையே சினைப்பெயர்கள். சினை என்றால் உறுப்பு என்பது பொருள். சினைக்குப் பெயராய் வழங்கும் பெயர்கள். 

 

கோடை காலத்தில் வெய்யில் கொளுத்துகிறது. வெம்மை உணர்த்துகிறது. குளிர் காலத்தில் இனிய காலநிலை நிலவுகிறது. குளிர்ச்சியாய் இருக்கிறது. மூடுபனி வெண்மையாய் நிலத்தில் படிந்திருக்கிறது. ’பச்சைப் பசேல்’ என்று வயல்கள் மரகதப் பச்சையாய் விரிந்திருக்கின்றன. கனிகளைத் தின்றால், நாவில் இனிக்கின்றன. மிளகாயைத் தின்றால், நாக்கு வெந்துவிட்டதுபோல் தவிக்கிறது. அந்த ஊர் மிகவும் அருமையாய் இருக்கிறது. ஊர்மக்கள் எல்லாரும் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  உண்மை பேசுகிறார்கள்.  இவ்வாறு பொருள்களுக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் உறுப்புகளுக்கும் என்னென்ன பண்புகள் என்பதை விவரிக்கும் பெயர்கள் தோன்றத் தொடங்கின. வெம்மை, குளிர், வெண்மை, பச்சை, இனிமை, காரம், அருமை, ஒற்றுமை என்று பண்புருவத்தை எடுத்துக்கூறும் பெயர்ச்சொற்கள் தோன்றிவிட்டன. ஒன்றுக்கே உரிய பண்பு நலனைத் தெரிவிக்கும் பெயர்கள் குணப்பெயர்களாம். குணப்பெயர்கள் அல்லது பண்புப் பெயர்கள் என்று வழங்கப்படும் இவை பெயர்ச்சொல் வகைமையில் ஐந்தாவது பண்புகளுக்கு வழங்கும் பெயர்கள். 

 

மரம் என்று மரத்துக்குப் பெயர் வைத்தாயிற்று. மரம் பொருட்பெயர். அது நிலத்தில் வரப்போரம் வளர்ந்திருக்கிறது. வரப்பு இடப்பெயர். தையில் தழைகளைக் கொட்டி, மாசியில் புத்திலைகளாய் தழைத்திருக்கிறது. தையும் மாசியும் காலப்பெயர். மரம் கிளை பரப்பிப் பெரிதாய் வளர்ந்துவிட்டது. கிளை சினைப்பெயர். மரத்தடி நிழல் குளிர்மையாய் இருக்கிறது. குளிர்மை பண்புப்பெயர். அத்தோடு முடிந்துவிட்டதா என்ன? இல்லை. இனிமேல்தான் மரத்தின் பயன் என்று ஒன்று இருக்கிறதே. மரம் நல்ல வளர்ச்சி பெற்றுவிட்டது. அதன் செழிப்பைப் பார்த்ததும் தெரிந்துகொள்ளலாம்.  மரம் காய்ப்பு காய்க்கிறது. காய்கள் பழுப்பை எய்துகின்றன. பழங்களைப் பறித்துச் சென்று கூடையில் வைத்தால், எல்லாரும் வந்து ‘நல்ல விளைச்சல்’ என்று பாராட்டுகிறார்கள். ஆக, மரத்தின் வளர்ச்சி, செழிப்பு, காய்ப்பு, பழுப்பு, விளைச்சல் என்று எண்ணற்ற வினைகளுக்குப் பெயர்கள் தோன்றிவிட்டன. இவ்வாறு வினைகளைக் குறிக்கத் தோன்றிய பெயர்கள் யாவும் தொழிற்பெயர்கள் எனப்பட்டன. தொழிலுக்கு வழங்கும் பெயர்கள். 

 

தொழிற்பெயர்களே பெயர்ச்சொற்களின் ஆறாம் வகைமையாகும். இந்தத் தொழிற்பெயர்களே, நம் மொழியின் உயிராய் விளங்குகின்றன. தொழிற்பெயர்களைத்தாம் புதிது புதிதாய் உருவாக்கிக் கொண்டே செல்லலாம். தோன்றி வழங்கும் தொழிற்பெயர்களைவிட, இன்னும் தோற்றுவிக்கப்பட வேண்டிய தொழிற்பெயர்கள் ஏராளமாய் உள்ளன. இன்று புதிதாய் ஒரு பெயர்ச்சொல்லை ஆக்க வேண்டுமெனில், அதற்குத் தொழிற்பெயரையே நாட வேண்டும். தொழிற்பெயரின் மாண்புகளைக் குறித்தும், அவற்றைப் புதிதாய் எவ்வாறு ஆக்கலாம் என்பதைக் குறித்தும், பிறகு விரிவாகக் கூறுவேன். அதனைக் கற்றுக்கொண்டால், நீங்களே ஒவ்வொன்றுக்கும் தமிழில் பெயரிடும் ஆற்றலையும் புலமையையும் பெற்று விடுவீர்கள். பிற பெயர்கள் எல்லாம், ஏற்கெனவே மொழியில் வழங்கிப் பயின்ற பழஞ்சொற்களாக இருக்கையில், தொழிற்பெயர் மட்டுமே அன்றாடம் புதிது புதிதாய்ப் பூத்துக்குலுங்கும் புதுவனமாக இருக்கிறது.

 

இதுவரை பெயர்ச்சொற்களின் ஆறு வகைமைகளை உரிய விளக்கங்களோடு அறிந்து கொண்டோம். ஒரு பெயரைக் கேட்டவுடன், அது ஆறு வகைப்பெயர்களுள் எப்பெயர் என்பதை உடனே கூறத்தக்க அறிவைப் பெற்றுவிட்டோம். ஒரு பெயர் எதைக் குறிக்கிறது என்பதைக் குறித்தே இவ்வகைப்பாடு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறவாதீர். பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் – என்னும் தொடரை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.    

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles