அழகுதமிழ்பழகு - 20

Friday, December 30, 2016

இடைச்சொற்கள் 

பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் அறிந்துகொண்டோம். சொற்களின் வகைமையில் மூன்றாவது பிரிவினையாய் வருபவை இடைச்சொற்கள். பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே தோன்றி, அவற்றுக்கு இடையேயான தொடர்புப் பொருளை விளக்கும்சொல் இடைச்சொல் எனப்படும். 

இடைச்சொல்லுக்கு என்று தனிப்பட்ட பொருள் இருந்தாலும் அச்சொற்கள் தனியே தோன்றமாட்டா.  ஆனால் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் தோன்றுகையில், அவை தமக்குரிய பொருளை உணர்த்தி  நிற்கும். இதைத்தான் தொல்காப்பியர் “இடையெனப்படுவ பெயரொடும் வினையொடும்  நடைபெற்று இயலும்; தமக்கு இயல்பிலவே” (தொல்காப்பியம் – சொல் 251) என்கிறார்.

 

“இடைச்சொல்லானது பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் தானும் சேர்ந்து நடத்தலே இயலும். தாமாகவே தனித்து நடக்கின்ற இயல்பு அவற்றுக்கு இல்லை” என்பது  அதன் பொருள்.

கந்தனை அழைத்தேன் – இந்தச் சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். கந்தன்  என்பது பெயர்ச்சொல். அழைத்தேன் என்பது வினைமுற்று. இரண்டுக்கும் இடையில் ஐ என்ற வேற்றுமை உருபும் இருக்கிறது. கந்தன் அழைத்தேன் என்றால் பொருள் நிறைவு கிட்டவில்லை. தெளிவே இல்லை. கந்தனை அழைத்தேன் என்றால் பொருள் நிறைவு கிட்டுகிறது. நான் கந்தனை அழைத்தேன் என்பது நன்றாக  விளங்குகிறது. ஆக, அந்தப் பொருள் நிறைவுக்கு உதவியது ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு. 

 

வேற்றுமை  உருபு என்றால் அஞ்சவேண்டா. இரண்டு சொற்களுக்கிடையே பொருளை வேறுபடுத்தவும் தொடர்பை வேறுபடுத்தவும் தோன்றுகின்ற ஓரெழுத்து ஈரெழுத்துகளாலான சிறு சொற்களே வேற்றுமை உருபுகள். இங்கே ஐ என்பது  வேற்றுமை உருபு. இந்த வேற்றுமை உருபுதான் சொல் வகைமையில் இடைச்சொல் ஆகிறது.தாமரைபோல் முகம் – இந்தத் தொடரை எடுத்துக்கொள்ளுங்கள். தாமரை, முகம் இரண்டும் பெயர்ச்சொற்கள். போல் என்பது என்ன? போல் என்பது இரண்டு பெயர்ச்சொற்களுக்கு 

இடையே உவமையை உணர்த்தத் தோன்றுகின்ற உருபு. வேறுபடுத்தத் தோன்றுவது வேற்றுமை உருபு என்றதைப்போல, உவமைப்படுத்தத் தோன்றுவது உவம உருபு. ஆக, போல் என்பது உவம உருபு. இந்த  உவம உருபும் இடைச்சொல்தான். இங்கே இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே தோன்றுகிறது. 

 

இவ்வாறு வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், சாரியைகள், விகுதிகள், ஏகார ஓகாரங்கள், உம், என, என்று, ஒடு, ஓடு ஆகிய எல்லாமே இடைச்சொற்கள்தாம். இவை அனைத்தும் பெயரோடும் வினையோடும் சொற்றொடர்களோடும் சேர்ந்துதான் நம் மொழிக்குப் பொருள்தருகின்றன.இப்பொழுது ஒவ்வொரு இடைச்சொல்லாகப் பார்ப்போம்.வேற்றுமை உருபுகள் என்னென்ன என்பதிலிருந்து தொடங்குவோம். ஒன்று முதல் எட்டு வேற்றுமைகள் உள்ளன. இவற்றுள் ஒன்றுக்கும் எட்டுக்கும் வேற்றுமை உருபுகள் இல்லை. மீதமுள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன. அவ்வுருபுகள் ஒவ்வொன்றும் இடைச்சொல்லாகும்.

 

ஒன்றாம் வேற்றுமைக்கு உருபு இல்லை

இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ – கந்தனை அழைத்தேன்

மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் – கண்ணால் பார்த்தான்

நான்காம் வேற்றுமை உருபு – கு– வள்ளிக்குத் திருமணம்

ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல் – தாய்மொழியில் பேசு

ஆறாம் வேற்றுமை உருபு – அது – மக்களது கோரிக்கை

ஏழாம் வேற்றுமை உருபு – கண் – மனைக்கண் இருந்தேன்.

எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

 

மூன்றாம் வேற்றுமைக்கு அன், ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய வேற்றுமை உருபுகளும் உள்ளன. ஆறாம் வேற்றுமைக்கும் ஆது, அ ஆகிய வேற்றுமை உருபுகளையும் கூறுவர். இவை சொற்றொடரில் எவ்வாறு பயின்று வரும் என்பதை நாம் பழக்கத்தில் அறிந்திருக்கிறோம். உவம உருபுகளும் இடைச்சொற்களாக அமையும். போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர், நிகர், அன்ன, இன்ன ஆகிய பன்னிரண்டும் இவைபோன்றுள்ள பிறவும் உவம உருபுகள். இவை ஒரு சொற்றொடரில் உவமை கூறுவதற்காக அமைகின்றன. உவம உருபுகளும் இடைச்சொற்களே.

 

உம்மைத் தொகை என்று ஒன்று உண்டு. பட்டிதொட்டி, காடுகரை, சேரசோழர் என்பவை உம்மைத்தொகைகள். எப்படி? ஒன்றுக்கொன்று ஒத்த தன்மையுடைய இரண்டு சொற்கள் அடுத்தடுத்துத் தோன்றுவது உம்மைத் தொகையாகும். உம்மைத் தொகையை விரித்துப் பொருள்கொண்டால் அப்பெயர்ச்சொற்களோடு உம் சேர்த்துச் சொல்லவேண்டும். பட்டிதொட்டி என்றால் பட்டியும் தொட்டியும் என்று விரியும். இங்கே பட்டிக்கும் தொட்டிக்கும் இடையில் உம் என்ற உருபு தொகுபட்டு இருக்கிறது. அந்த உம் தொகுபடுதால்தான், அது உம்மைத் தொகை. கந்தனும் முருகனும் வந்தனர் என்பதில் உள்ள உம் இடைச்சொல்.

அத்து, அற்று, அம் ஆகியவை சாரியைகள். குளத்து மீன் – என்பதில் அத்துச் சாரியை தோன்றுகிறது.

அவற்றால் முடியாது – என்பதில் அற்றுச் சாரியை மிகுந்தது.

இத்தகைய சாரியைகளும் இடைச்சொற்களே. ஒரு சொல்லைப் பகுபத இலக்கணப்படி பிரித்துப் பார்க்கலாம்.

 

பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை என எண்ணற்ற சொல்லுருபுகள் தோன்றும். அவற்றில் பகுதிக்கு மட்டும்தான் பொருள் இருக்கும். பிற உருபுகளுக்குப் பொருள் இல்லை. பகுபத உறுப்புகளில் பகுதி தவிர்த்த பிற எல்லா உறுப்புகளுமே இடைச்சொற்களாகும்.விகுதிகளில் பன்மை விகுதிகள் என்று கள், மார் போன்றவை இருக்கின்றன. இப்பன்மை விகுதிகளும் இடைச்சொற்களே.

வாழ்க, வளர்க, வாழிய, வாழியர் ஆகியன வியங்கோள் வினைமுற்றுகள். இவற்றின் விகுதிகளான க, இய, இயர் ஆகியவையும் இடைச்சொற்களே. தொழிற்பெயர் விகுதிகள், பண்புப்பெயர் விகுதிகள், பிற பெயர்ச்சொல் விகுதிகள் ஆகியனவும் இடைச்சொற்கள்தாம். ஒருசொல்லின் பொருட்பகுதியைத் தவிர்த்த பிற ஒட்டுகள் யாவுமே இடைச்சொற்கள் என்ற முடிவுக்குவரலாம்.என, என்று ஆகிய சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இவற்றைநாம் வினையெச்சம் என்றே கருதிக்கொண்டிருக்கிறோம். இல்லை. இச்சொற்கள்தாம் மிக மிக இன்றியமையாத இடைச்சொற்கள். ஒரு சொற்றொடரை ஆக்குவதில் இவ்விரண்டு இடைச்சொற்களும் தலையாய பங்கினைவகிக்கின்றன. அவன் வருகிறேன் என்று கூறினான். இதில் என்று, என ஆகிய இரண்டில் ஏதேனுமொன்றின் துணையில்லாமல் இச்சொற்றொடரை ஆக்கவே இயலாது. இவ்வாறு எண்ணற்ற நிலைமைகளில் என, என்று ஆகிய இடைச்சொற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

 

ஏகாரமும் ஓகாரமும் நம் எழுத்தில் மிகுதியும் பயன்படுகின்ற பிற இடைச்சொற்களாம். ஏ… மனிதா… என்று கவிதை எழுதத் தொடங்கினோமே, ஓ… கண்ணே… என்று உருகத்தொடங்கினோமே. அத்தொடரில் பயன்படும் ஏவும் ஓவும் இடைச்சொற்களே. இந்த ஏவும் ஓவும் எண்ணற்ற பொருளாட்சியில் நமக்குப் பயன்படுகிறது.

 

அவனுக்கே தெரியும் – இதில் அவனுக்கே என்பதில் உள்ள ஏ அவனைத்தனித்துப் பிரிநிலைப் பொருளை உணர்த்துகிறது.

ஆடே தின்றது? – இதில் ஏ என்பது ஆடோ தின்றது என்னும் வினாப்பொருளில் நிற்கிறது.

இயலே இசையே நாடகமே என்று மூன்றே – இத்தொடரில் ஒவ்வொன்றையும் எண்ணுவதற்காக ஏ என்னும் இடைச்சொல் தோன்றியது.

அடிக்கவே மாட்டேன் – இதில் ஏ என்பது தேற்றத்தன்மையுடைய உறுதிப்பொருளை உணர்த்துவதற்காகப் பயன்பட்டது.

ஏ… ராசாத்தியே – இதில் ஏ என்பது இசைநிறைப் பொருளில் வந்தது.

நறியவும் உளவோ நீயறியும் பூவே – இவ்வாறு ஒரு பாட்டின் ஈற்றடியில் ஈற்றசைப் பொருளில் ஏ தோன்றும்.

 

ஆக, ஏ என்னும் ஓர் இடைச்சொல் எண்ணற்ற நிலைமைகளில் பிரிநிலை,வினா, எண்ணல், தேற்றம், இசைநிறை, ஈற்றசை ஆகிய பொருள்களில் தோன்றுகிறது. ஒற்றை எழுத்தாலான இவ்விடைச்சொல் இல்லாவிட்டால் எண்ணற்ற பொருளாட்சிகளுக்கு வழியின்றி நிற்க நேரும். அவ்வாறு ஓ என்பதும் எண்ணற்ற பொருள்வழக்கம் உடையது.

 

ஒழியிசை (மறக்கவோ நினைத்தாய்), வினா (நீயோ நினைத்தாய்), சிறப்பு (ஓ.. அன்பே), எதிர்மறை (அவனோ தருவான்), தெரிநிலை (இரவோ பகலோ), கழிவு (ஓஓ யாருமில்லை எனக்கு), பிரிநிலை (இவளோ செய்தனள்), அசைநிலை (காணாயோ) என்று பல்வேறு நிலைமைகளில் ஓ என்னும் இடைச்சொல் பொருளுணர்த்துகிறது.தான், தாம், மூலம், பற்றி, மட்டும், ஆம் (தரலாம், ஏழாம்), ஆவது (மூன்றாவது), கூட, இருந்து, வரை, ஆ, அல்லது, இல்லை, ஆயினும், ஆனால், ஏனென்றால், எனினும், பார்க்கிலும், காட்டிலும், விடவும், இயம் (பெரியாரியம்), இயல் (அறிவியல்), காரன், காரி, சாலி (புத்திசாலி) ஆகிய இச்சொற்களும் இவைபோன்ற பிற அனைத்தும் இடைச்சொற்களே.இடைச்சொற்கள் என்றால் என்னவென்றும் அவை எவையென்றும் இப்போதுதெளிவாக விளங்கியிருக்கும். இதுநாள்வரை அறியப்படாதிருந்த ஒரு சொல்வகைமையை இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.

- கவிஞர் மகுடேசுவரன் 
 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles