பழமொழி இன்பம் - கருவாடு மீனாகாது கறந்தபால் மடி புகாது

Friday, December 16, 2016

வாழ்க்கையின் தொடரோட்டத்தில் என்னென்ன நிகழ்கின்றன, என்னென்ன நிகழ்ந்து கடக்கின்றன, எதை நோக்கி நாம் நகர்ந்து செல்கிறோம் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே நேரமிருப்பதில்லை. ஆளாளுக்கு எதையோ துரத்திக்கொண்டு ஓடும் வேட்டைநாயைப்போல் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் இன்றுள்ள அருமைகளும் அழகுகளும் உன்னதப் பொழுதுகளும் உணரப்படாமலே கரைந்துவிடுகின்றன. பிறகு ஒருநாள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நாம் இழந்தவை எத்துணைப் பெரிய நன்மைகள் நலன்கள் என்று வியர்க்க வைக்கின்றன. 

இழந்தால் பெறவே முடியாதவை என்று மிகப்பெரிய பட்டியல் ஒன்று உண்டு. நம் அறியாமையை இழந்தால், அதை மீண்டும் பெறவே முடியாது. அறியாமை என்று களங்கமற்ற மனத்தைச் சொல்கிறேன். நாம் வாய்ப்பை இழந்தால் அதை மீண்டும் பெற முடியாமலே போகலாம். வாய்ப்பு என்பது ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம். அது கதவைத் தட்டும்போது படக்கென்று கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். அந்நேரத்தில் நமக்கு வேறு கவனங்கள் இருந்தால் கதவு தட்டுமொலி நம் காதில் விழாது. அதனால்தான் “விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் உன்போல் குறைட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்” என்று பட்டுக்கோட்டையார் பாடினார். 

இழப்பின் அருமை இழப்பின்போது தெரியாது. இழப்பைக் கடந்து செல்லவேண்டிய துயரத்தில் இருக்கும்போதுதான் தெரியும். ஒரு சாதாரண பேருந்தைச் சரியான நேரத்திற்குச் செல்லாமல் தவறவிட்டால்கூட அதன் பலன் கடுமையாய் இருக்கிறது. அடுத்த பேருந்துக்காக நெடுநேரம் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வேண்டும். அப்போது தோன்றும் எரிச்சல் நம் பொறுமையை முற்றாகக் கரியாக்கிவிடுகிறது. 

இளமையில் என்னென்னவோ செய்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. அவ்வாறு செய்திருந்தால் அவை ஒவ்வொன்றும் உரிய பலன்களைத் தந்திருக்கும். அவற்றையெல்லாம் கடந்து வந்தபின்பு தானே ஞானம் பிறக்கிறது! உறவுகளை இன்னும் கொஞ்சம் நேசித்திருக்கலாம், அவர்களோடு இன்னும் நிறையப் பேசியிருக்கலாம், அவர்கள் விரும்பிய சில இடங்களுக்கேனும் அழைத்துப்போய்க் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இதையெல்லாம் செய்து அவர்களை மகிழ்விக்கலாம் என்னும் எண்ணம் வந்தபோது அவர்கள் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாம் தனியாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

இழந்தால் பெறவே முடியாதவை என்று எண்ணற்றவை இருந்தாலும், அதில் முதலிடம் பெறுவது காலம். காலத்தைத் தொலைத்துவிட்டு எதையும் எங்கேயும் பெற்றுவிட முடியாது. கடிகாரங்கள் இலட்ச ரூபாய்க்குக் கூட விற்கின்றன. ஆனால், ஒரு நொடியைக் கூட நம்மால் விலைக்கு வாங்க இயலாது. காலத்தே செய்தவற்றால் என்ன விளையுமோ அவற்றைத்தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நாம் பெற்றுக்கொண்டிருப்பவை அனைத்தும் காலத்தே நாம் செய்த வினையால் விளைந்த பலன்களைத்தாம். 

காலத்திற்கு அடுத்துள்ளது வாய்ப்பு. வாய்ப்பைத் தொலைத்துவிட்டால் பிறகு அது எங்கேயும் தென்படாது. தகுதிப்படுத்திக்கொண்ட ஒன்று அதற்கேற்ற வாய்ப்பைக் கண்டுபிடித்துவிடுகிறது, அதைத்தான் அதிர்ஷ்டம் என்று ஊரார் கூறுவார்கள். 

வாய்ப்புக்கு அடுத்துள்ளது உறவுகளையும் நட்புகளையும் பேணும் அன்புமனம். அதையும் இழந்துவிடக்கூடாது. இழந்தால் பெற முடியாது. இந்த அருமையைச் சொல்கின்ற இனிய பழமொழிதான் ‘கருவாடு மீனாகாது, கறந்தபால் மடிபுகாது’. காய்ந்து கருவாடாகிப் போனது மீனாய் உயிர்பெற்று நீந்துமா?  கறந்தபால் மீண்டும் மடிக்குத் திரும்பிச் செல்லுமா?  இல்லை. முடிந்தது முடிந்ததுதான். முடிவதற்குள் செய்யவேண்டியவற்றைச் செய்து முடிப்பதுதான் நம்முன் உள்ள ஒரே வாய்ப்பு. காலம் கருது. வாய்ப்பைக் கைக்கொள். உறவுகள் பேணு. இவற்றைத் தவிர, செய்வதற்கு அரியன என்று வேறெதையும் உங்களால் சொல்ல முடியுமா, என்ன ?

- கவிஞர் மகுடேசுவரன்  

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles