சென்னைக்கு மிக அருகில் என்பது வெறும் கற்பிதம்! - எழுத்தாளர் விநாயக முருகன்

Saturday, August 13, 2016

தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை இப்போது இளைஞர்களின் ஆதிக்கம்தான். சரவணன் சந்திரன், ஆர்.அபிலாஷ், லஷ்மி சரவணக்குமார் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் எழுத்தாளர் விநாயக முருகன். அடிப்படையில் மென்பொருள் வல்லுநரான இவர் எழுதிய ராஜீவ்காந்தி சாலை நாவல், தமிழ் எழுத்துலகில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்றது. தொடர்ந்து சென்னைக்கு மிக அருகில், வலம் உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். நவீன இலக்கிய உலகினுள் நுழைந்தது பற்றி, அவரே இங்கே பேசுகிறார்!

எழுத்தாளராக உங்களது பயணம் ஆரம்பித்தது எப்போது?

“நான் பிறந்த ஊர் கும்பகோணம். தஞ்சாவூர்லதான் கல்லூரி பருவம். அப்போதான், சிற்றிதழ்களில் எழுதிகிட்டு இருந்தேன். அப்போ, தமிழ் கம்ப்யூட்டர் என்கிற பெயரில் ஒரு இதழ் வந்துட்டு இருந்துச்சு. தகவல் தொழில்நுட்பத்துறையை மையமாக வைத்து வந்து முதல் பத்திரிகை அதுதான். அந்தப் பத்திரிகைக்கு, ஆங்கிலத்தில் வெளியாகிற கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழில் கொடுத்துட்டு இருந்தேன். 1994ம் ஆண்டில் வெளியான அந்த இதழின் மூலமாகத்தான், என்னுடைய எழுத்துப் பயணம் ஆரம்பமானது. கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, அதே பத்திரிகையில் 2000 ஆண்டு வரைக்கும் முழு நேர உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். அதன்பிறகு, ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். சென்னைக்கு வந்தபிறகு, அகநாழிகை பதிப்பகம் மூலமாக என்னுடை முதல் கவிதை தொகுப்பான ’கோயில் மிருகம்’ வெளியானது. 

 

‘ராஜீவ்காந்தி சாலை’ நாவல் உருவான விதம் பற்றி?

நிறைய இதழ்களில் கவிதைகள் எழுதினேன். அவ்வப்போது சிறுகதைகளும் வரும். அதன்பிறகுதான், உயிர்மை பதிப்பகத்தோட ஒரு தொடர்பு கிடைத்தது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் சாருக்கு அறிமுகமானேன். பின்னர், முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பத்துறையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலான ராஜீவ்காந்தி சாலையை உயிர்மை பதிப்பித்தது. அப்படித்தான், என்னுடைய முதல் நாவலின் பயணம் ஆரம்பமானது. ஐ.டி. பிரச்சினைகளை மையமாக வைத்து ஏற்கனவே சில நாவல்கள் வந்திருக்கு. அந்த நாவல்களில் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அதன் பேசுபொருள் நின்னுடுச்சு. உதாரணத்துக்கு, ‘இடைவேளை’ நாவல் மற்றும் எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய நாவல்களில் சிலவற்றைச் சொல்லலாம்!

ராஜீவ்காந்தி சாலை நாவல்தான் ஐ.டி. துறைக்குள்ளே இருக்கிற பல்வேறு பிரச்சினைகளைச் சமூகத்துக்கு முன்னால கொண்டு வந்துச்சு. அது மட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து இயங்குகிற ஐ.டி. இ.எஸ். என்கிற எனேபெல்டு செக்டார், அப்புறம் ஐ.டி.க்குள்ளே இருக்கிற கேப் டிரைவர்கள், செக்யூரிட்டிகள் வாழ்க்கைப் பதிவுகளும் நாவலில் வரும். அந்த சாலையினுடைய முழுப்பரிணாமமும் நாவலில் வெளிப்பட்டிருக்கும். குறிப்பாக, இருவழிச்சாலையாக இருந்ததை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்தபோது, அங்கு வசித்த மக்கள் எல்லாம் எப்படி புலம்பெயர்ந்தாங்க? அவங்களுடைய வாழ்வாதாரம் எப்படிப் பாதிக்கப்பட்டது? அது மட்டுமில்லாமல், 2000 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரைக்கும் ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் எல்லாம் எப்படி வளர்ந்துச்சு? இப்படியாகப் பல விஷயங்கள் நாவலில் பதிவாகியிருக்கு. ராஜீவ்காந்தி சாலை நாவல், வெறும் ஐ.டி.யை சார்ந்தது மட்டுமில்லை. அதற்கு உள்ளும் புறமுமாயிருக்கிற விஷயங்களையும் பேசுறதுதான்!

 

நவீன இலக்கிய உலகத்தில் ‘ராஜீவ்காந்தி’சாலை’ நாவல் ஏற்படுத்திய அதிர்வலைகள் பற்றி?

யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் ஆர்.அபிலாஷ்தான், ராஜீவ்காந்தி சாலை நாவலுக்கு முதலில் விமர்சனம் எழுதியிருந்தார். பிறகு, நான் பெரும் மதிப்பு வைத்திருக்கக் கூடிய எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் விமர்சனம், உயிர் எழுத்து பத்திரிகையில் வெளிவந்துச்சு. அவருடைய எழுத்து ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துச்சு. அதன்பிறகு எழுத்தாளர்கள் இமையம், முருகேசப்பாண்டியன் உள்ளிட்டோர் குறிப்பிட்ட விமர்சனங்களை எழுதினாங்க. அதன்பிறகுதான், அந்த நாவல் பெருவாரியான வாசகர்களை போய்ச் சேர ஆரம்பித்தது. உதகை பாலநந்தகுமார் நிர்வகிக்கும் அமைப்பின் மூலமாக ‘மலைச்சொல் விருது’, அதே ஆண்டில் (2013) கிடைத்தது. பெருவாரியான பத்திரிகைகளும் நாவலை பாராட்டி எழுதியுள்ளன.

 

ஒரு நாவலை எழுத, எப்படி உங்களை தயார்படுத்திக்கிறீங்க?

ஒரே மூச்சில், ஒரு நாவலை எழுதிவிட முடியாது. அதற்கு திட்டமிடல் ரொம்ப அவசியம். ஒரு நாவல் எழுத, குறைந்தது இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாவது ஆகும். பழைய மகாபலிபுரம் சாலை வழியாக, அடிக்கடி சென்னைக்கு வந்து போவேன். ஒரு இருபது ஆண்டுகளாக வந்து போகும்போது, எனக்குள்ளே இந்த சாலையில் நடக்கிற மாற்றங்களை கவனிச்சிருக்கேன். அதனால, அதற்கு பெரிசா களப்பணி எதுவும் தேவைப்படலை. இந்த இருபது வருஷத்துல, நான் பார்த்து உணர்ந்ததைத்தான், ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலாக எழுதினேன். ஆனாலும், அந்த நாவலுக்காக மூன்று வருஷம் ஹோம்வொர்க் பண்ணினேன். 

 

உங்களுடைய எழுத்தில் ‘சென்னைக்கு மிக அருகில்’ நாவலும், அதிகமான வாசகர்களை சென்றடைந்ததே?

சென்னையில் இருக்கிற ராஜீவ்காந்தி சாலைக்கு நிகராகச் சொல்லணும்னா, மேற்கு தாம்பரத்தை சொல்ல முடியும். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்த பகுதின்னு சொல்லலாம். அதற்கு முன்னாடி எல்லாம் மீனம்பாக்கம் தாண்டினா, வெறும் வயக்காடுதான் இருக்கும். எங்கேயோ ஒரு வீடு இருக்கும். அப்புறம் தாம்பரம். அதைத் தாண்டிட்டீங்கன்னா, அதற்குப் பிறகு மேல்மருவத்தூர்தான். இடையில் எதுவுமே இருக்காது. எல்லாமே விவசாய நிலங்கள்தான். மென்பொருள் நிறுவனங்களின் அதிகரிப்பால்தான், தாம்பரத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளும் விரிவடைஞ்சுது. வேளச்சேரி, பள்ளிக்கரணை மாறியதும் அப்படித்தான்.

என்னுடைய நண்பர் ஒருவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறார். சென்னையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க, அவர் இடம் தேடிக்கொண்டிருந்தார். மேற்கு தாம்பரத்துல, ஒரு விவசாயக் குடும்பத்திடம் எங்களுக்கான இடம் இருந்துச்சு. அவங்களை அணுகினோம். அந்த இடத்தை விற்பனை செய்வதற்கான உரிமையை, அந்த விவசாயி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தாரு. அந்த நிறுவனம் பிளாட் போட்டு பொதுமக்களிடம் வித்துக்கிட்டு இருந்துச்சு. நேரடியாக நிலத்தினுடைய உரிமையாளரைச் சந்திக்கிறதை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தடுத்தன. ’எல்லா டீலையும் எங்ககிட்டேயே வைச்சுக்கங்க..’ன்னும் சொல்லுச்சு. அப்போதுதான் சில உண்மைகள் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. அதாவது, விவசாயிகளிடம் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதை பலமடங்குக்கு விற்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம். பத்து லட்சத்துக்கு விற்கிற விவசாய நிலம், பல கோடி ரூபாய்க்கு விற்பனை ஆயிடும். இப்படியான நுட்பமான விஷயங்களை அவதானிச்சு எழுதினேன்.

அது மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பிரபல தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுப்பாங்க. அப்போ, ’சென்னைக்கு மிக அருகில்’னு வெகுதொலைவில் இருக்கிற திருச்சியைக் கூட சொல்லுவாங்க. அப்படித்தான், அந்த நாவலுக்கு அந்தப் பெயரையே வச்சேன். கிண்டி கத்திப்பாரா பாலத்துக்கு கீழே மைல்கல் இருக்கு. அதுல, சென்னை ஜீரோ மைல்னு எழுதப்பட்டிருக்கு. அப்படீன்னா, சென்னை நகரமே அங்கிருந்துதான் ஆரம்பமாகுது. முன்பு சென்னைன்னு நாம சொன்னது வடசென்னையைத்தான். பிரிட்டிஷ்காரன் பீரியடுல, பிராட்வே பூக்கடைதான் சென்னையா இருந்துச்சு. உண்மையிலேயே, சென்னைக்கு மிக அருகில் என்பது வெறும் கற்பிதம்தான்!” என்றார்.

சமகாலத்தின் மீதான விமர்சனங்கள் அனைத்தும், விநாயக முருகனின் பேச்சில் வெளிப்படுகிறது. இந்தப் பார்வை நிலைத்திருக்கும் வரை, அவரது படைப்பு வேகமும் இடைவிடாது முன்னேறிக்கொண்டே இருக்கும். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles