பழமொழி இன்பம்

Saturday, August 13, 2016

இக்கரைக்கு அக்கரை பச்சை

அமெரிக்காவில் சென்று குடியுரிமை பெற்றுத் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நண்பர் ஒருவரை, அண்மையில் சந்தித்தேன். தம் வாழ்க்கையில் செல்வத்தால் இயல்கின்ற அனைத்தையும் பெற்றுவிட்டார் நண்பர். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுவிட்டார். அங்கொரு பெருவீடு. இங்கும் எண்ண முடியாத தூண்விதானங்கள் அமைத்து மாளிகை கட்டிவிட்டார். அங்கே அவர் மட்டும் குடும்பத்தோடு. இங்குள்ள வீட்டில் தாய், தந்தையர். 

‘இனி இந்நாட்டுக்கு வருவீர்களா?’ என்று கேட்டேன். ‘அது இயலாது’ என்றார். அவர்க்கு இரண்டு பிள்ளைகள். ‘பிள்ளைகள் என்னாவார்கள்? அவர்களுக்கு இனி, இந்நாட்டோடு மொழி முதற்கொண்டு எல்லா வேர்த்தொடர்பும் அறுந்துபோய்விடுமே…’ என்றேன். அவர் முகத்தில் படிந்த துயரத்தை, என்னால் கண்கொண்டு காணவே முடியவில்லை. 

 

கடந்த இருபதாண்டுகளுக்கு முன்புவரை வெளிநாட்டுக்குப் பெருமையோடு பறந்தவர்கள், அந்த நிலத்தின் இன்ப நலன்களை விட முடியவில்லை. அதேபோல், தம் தலைமுறையில் தொன்று தொட்டு வாழ்ந்து செழித்த தொல்குடித் தொடர்பை அறுக்க நேர்ந்ததே என்ற கொடிய வேதனையையும் கடக்க முடியவில்லை. பிள்ளைகளால், நம்மூர் தட்பவெப்ப நிலையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி நம் நாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை, அவர் உணர்ந்துவிட்டார். 

 

’தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அமெரிக்கப் படைவீரர்கள் தூர தேசத்தில் ஒரு கிராமத்தின் வழியே நடந்து செல்வார்கள். அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் கேட்பார், ‘நீங்கள் யார் ?’ என்று. அதற்கு வீரர்களில் ஒருவர் விடைகூறுவார், ‘நாங்கள் அமெரிக்கர்கள்.’ உடனே பெரியவர் திருப்பிக் கேட்பார் ‘எப்போதிலிருந்து ?’ அதற்கு, படைவீரர் விழிப்பார். இதுதான் செல்வத்தின்பொருட்டு, பணி வாய்ப்பின்பொருட்டுக் குடியேறியவர்களின் நிலை. நடுவழிக் குடிவாழ்வு. 

 

நம் நண்பரும் இப்போது அமெரிக்கர்தான். ஆனால், இப்போதிலிருந்துதான் அமெரிக்கர். இந்நாடும் நிலமும் மொழியும் நினையும் திணைப்பொருளும் அவரையும் அவர் தலைமுறையையும் விட்டகன்று நீங்கிவிடும் கொடுமையான மனவதைக்கு, அவர் விடை கூறியாக வேண்டும். உள்ளனவற்றை எண்ணி அவர் ஆறுதலடைந்தாலும், புறப்பொருளால் அகப்பொருளுக்குத் தர முடியாதவை என எண்ணற்றவை உள்ளன. அதை, அவர் எவ்வாறு பெறுவார் என்பது தெரியவில்லை. 

 

இதைத்தான் நம் முன்னோர்கள் எளிமையாகச் சொன்னார்கள் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’. இந்தக் கரையிலிருந்து பார்க்கும்போது, அந்தக் கரை பச்சைப் பசேலென்றுதான் தெரியும். மேய மேயத் தீராத புல்வளமுடையது என்றுதான் தோன்றும். எப்படியோ வெள்ளத்தை எதிர்த்து நீந்தி அக்கரைக்குச் சென்றடைந்து பார்த்தால், அத்தனையும் உண்ணத்தகாத நாணற்புற்களாக இருக்கும். இருந்த இடத்தில் இருந்த அருகம்புல்லைத் தின்று மகிழாமல், பச்சையடர்த்தியைப் பார்த்து மயங்கி வந்ததற்கு இந்தத் தண்டனை தேவைதான்.  

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles