நவீன ஓவியத்தின் அடையாளம் மருது!

Friday, August 12, 2016

நவீன தமிழ் இலக்கியம், பத்திரிகை, சினிமா என சுற்றிச்சுழன்று, பெரும் பங்காற்றி வருபவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட துறையில்தான் ஒருவர் ஆளுமையாகப் பரிமளிக்க முடியும் என்ற இலக்கணத்தை உடைத்ததனால், மருது நம் காலத்தின் முன்னோடி என மார்தட்டிக் கொள்ளலாம்!

கோடுகளில் சிக்கிக் கொண்டிருந்த ஓவியங்களை, கணினியோடு இணைத்தவர். புகைப்படங்களோடு டிஜிட்டல் தூரிகையை இணைத்து, பத்திரிகைகளை அலங்கரித்தவர்களில் மருதுதான் முதன்மையானவர். பத்திரிகை மட்டுமின்றி தொலைக்காட்சிகள், பதிப்பகங்கள், பெருநிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும், அவரது மாயக் கைகளால் உருவாக்கப்படும் படைப்புகளே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒரே காரணம் தான். புதிய மாற்றங்களுக்கு ஏற்ப, தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் மருது.

 

உலக அளவில் பிரசித்த பெற்ற ஓவியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை, தன் முகநூல் பக்கம் வாயிலாக பெரும் வாசக பரப்பிற்கு எடுத்துச் சென்றுகொண்டிருப்பது, அவரது சமீப கால சிறப்பியல்புகளில் ஒன்று. அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு வி.எப்.எக்ஸ். செய்துள்ளார் டிராட்ஸ்கி மருது.

 

தான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படமாக ‘தேவதை’ படத்தைக் குறிப்பிடுவார் மருது. அது போலவே, அனைத்து படிமங்களும் கொண்ட ஆகச் சிறந்த படம் ‘தேவர் மகன்’ எனக் கூறுவார். அதற்கு அடிப்படையான காரணம், அதன் இயக்குநர் பரதன். “அடிப்படையில் பரதன் ஒரு ஓவியராக இருப்பதால்தான், படிமக் கட்டமைப்பின் வழியே காட்சியை நகர்த்திச் செல்கிறார். இங்கே சினிமாக்கள் வெறும் வசனங்களால் கட்டமைக்கப்படுகிறது. பார்வையாளனை, வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கக் கூடியது காட்சிப் படிமங்கள்தான்!” என்று அதற்கு விளக்கமும் அளிப்பார். 

இன்று அவரது பிறந்த நாள். தமிழின் மிக முக்கியமான படைப்பாளியான டிராட்ஸ்கி மருதுவை, மனம் இதழ் வாழ்த்தி மகிழ்கிறது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles