சாதி பிரச்சினை தீர ஆண்-பெண் சமத்துவம் தேவை! எழுத்தாளர் தமிழ்மகன்

Wednesday, March 15, 2017

"வாழ்க்கை என்பது ஒரு பெரிய பகடியாகத்தான் இருக்கு. அதனால் பகடியை நம்முடைய வாழ்க்கையில் இருந்து பிரிக்கவே முடியாது என்பது என் எண்ணம். பெரிய நகைச்சுவையாக இருக்கு வாழ்க்கை. அது இல்லாமல் எப்படி வாழ்க்கை இல்லையோ, அதேபோல அரசியல் இல்லாமலும் வாழ்க்கையில்லை. 'ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் இருக்கு' என்று மார்க்ஸ் சொல்கிறார்.

அதனால் பல வாக்கியங்கள் கொண்ட நாவலில் எப்படி அரசியல் இல்லாமல் இருக்க முடியும்? என்னுடைய நாவல்களில் இவை இரண்டும் நிச்சயமாக இருக்கும். அப்படித்தான் நாவல்கள் அமைய வேண்டும் என சொல்வேன்!" வன்மையான குரலும் கருத்தும் ஒருங்கிணைய, சமூகம் குறித்தான அக்கறையோடு பேசுகிறார் எழுத்தாளர் தமிழ்மகன். நவீன இலக்கியத்தில் 'ஜுனியர் சுஜாதா' என அழைக்கப்படுபவரை, மகளிர் தினத்தை ஒட்டி சந்தித்தோம்!

 

ஆண்-பெண் சமுத்துவம் சமூக சிக்கல்களைச் சீர்திருத்த முடியும் என நினைக்கிறீர்களா?

"நிச்சயமாக. எப்படி சாதி ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்த வேண்டும் என நினைக்கிறோமோ, அதை விட முக்கியமாக ஆண்-பெண் சமத்துவம் வேண்டும் என நினைக்கிறேன். சாதி பிரச்சனையைத் தீர்க்க, முதலாவதாக ஆண்-பெண் சமத்துவம் தேவை. அதுகுறித்து பெரியாரிடம், "எல்லாம் சமமாகிவிட்டால், அதைவிட ஒன்று வேண்டும் என்றுதான் ஒருத்தன் நினைப்பான்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

எந்தவொரு பெரிய கேள்விகளுக்கும் எளிய முறையில் பதில் அளிப்பதில் வல்லவர் பெரியார். "எப்படி மனிதனுக்கு இரண்டு கைகளுக்கு மேல் மூன்றாவது ஒரு கை தேவைப்படாதோ அப்படி. முதுகுக்குப் பின்னால் ஒரு கை துருத்திக்கொண்டு நிற்பதை யாரேனும் விரும்புவார்களா?" என்று சொன்னார் அவர். எனவே பாலினம், சாதி ஏற்றத்தாழ்விலும் சமத்துவம் ஏற்பட வேண்டும்!"

 

'ஆண்பால் பெண்பால்' நாவல் எழுதினீர்களே. அதை எழுதியதிற்கான காரணத்தை விரிவாகச் சொல்ல முடியுமா?

"ஏற்கனவே நான் சொன்னதுபோல, ஆண்-பெண்ணில் தான் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. பத்திரிகைகளில் வெளியாகும் ஜோக்குகளில் கூட பெண்களைத்தான் அதிகமாகக் கிண்டலடிக்கிறார்கள். சினிமா பாடல் காட்சிகளிலும், பெண் ஒரு நிலையிலும் ஆண் ஒரு நிலையிலும் இருப்பதைப் பார்க்கலாம். 

'வெட்டுப்புலி' நாவலுக்குப் பிறகு, நான் எழுத நினைத்தது ஒரு நாவல்தான். ஆனால், அந்த நாவலுக்குள் இரண்டு நாவல்கள் இருக்கும். ஒரு நாவலை ஆண் பேசுவான். அவன் தன் கதையைச் சொல்லி முடித்த பிறகு, அவன் எந்த இடத்தில் தொடங்கினானோ அதே இடத்தில் இருந்து பெண் தொடங்குவாள். அவள் சொல்வது முற்றிலும் வேறு விஷயமாக இருக்கும். ஒரே கதையை ஆண் சொன்னது ஒரு மாதிரியாகவும், பெண் சொல்லியது வேறு மாதிரியாகவும் இருக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உளவியல் ரீதியான பிரச்சினையை 'ஆண்பால் பெண்பால்' நாவலில் தொட்டேன். அந்தக் கதை 1970ல் தொடங்கி 2010ல் முடிவடையும். இந்த நாவலை எழுதுவதற்கு, எனக்கு உதவிகரமாக இருந்த ஆளுமை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் பெண்கள் மனதில் எப்படி ஆட்சி செய்தார் என்பதையும் நாவலில் விவரித்திருப்பேன்!"

 

நவீன சமூகத்தில் பெண்களின் நிலை இப்போது எப்படியிருக்கிறது?

"இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலையில் வியத்தகு மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1930களில் பெரியார் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார். அப்போது ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு வயதுக்கு உட்பட்ட விதவைகளும், பத்து வயதுக்கு உட்பட்ட விதவைகளும் லட்சக்கணக்கில் இருந்தார்கள். அவ்வகையில் பால்ய விவாகத்தை ஒழித்தில் பெரியாருக்கு மிகப்பெரும் பங்குண்டு. 

'பெண்களுக்கு எப்படி ஓட்டுரிமை வேண்டுமோ, அதேபோல அவர்களுக்கு சொத்துரிமையும் வேண்டும்' என்று முழங்கியவர். இதை பெரியாரின் ஒரிஜினல் கண்டுபிடிப்பு என்றே சொல்வார்கள். இவையெல்லாம் 1930-40களில் பெரியாரால் பேசப்பட்டு, பிறகு சட்டமாக்கப்பட்டவை. அவர்தான் பெண்கள் கிராப் வெட்டிக்கொண்டு ஆண்கள் போல உடை அணிய வேண்டும் என்றார். அது எல்லாம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. ஆண்களை வேலை வாங்கும் இடத்தில் இப்போது பெண்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் மகத்தான மாற்றங்கள். இது பதவி, சம்பளத்தில் நிகழ்ந்தது போல மனதிலும் நிகழ வேண்டும்!"

 

'வெட்டுப்புலி' நாவலை எழுதத் தூண்டியது எது? அந்த நாவலுக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?

"அந்த நாவலை எழுதுவதற்கான முனைப்பு எனக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி, நிச்சயமாகச் சொல்ல வேண்டும். 1950க்குப் பிறகு, திராவிட இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. நிறைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. 'சுயமரியாதை திருமணம்', 'குடிசை மாற்று வாரியம்', 'கை ரிக்‌ஷா ஒழிப்பு', 'இட ஒதுக்கீடு' என நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் நாவல்களில் இடம்பெறாததைக் கண்டேன். அதற்கான அழுத்தத்தோடு எழுதப்பட்ட நாவல்தான் 'வெட்டுப்புலி'. அது திராவிட குடும்பங்களைப் பற்றி பேசுகிறது. 

ஒரு நூற்றாண்டில் திராவிட இயக்கம் தமிழகத்தில் நிகழ்த்திய மாற்றங்களை சொல்கிற கதை. அது குறித்து, "வெட்டுப்புலி நாவலை தமிழில் வெளியான முதல் திராவிட இயக்க வரலாற்று நாவல் என்று சொல்லுவேன்" என்றார் தமிழறிஞர் தொ.பரமசிவம் அவர்கள். வெங்கட் சாமிநாதன், எஸ்.வி.ஆர், பிரபஞ்சன் போன்றவர்கள், "ஒரு நூற்றாண்டின் ஆயுள் கொண்ட நாவல்" என்றும் பாராட்டினார்கள்! பல கட்சி சார்புள்ள எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்டது. அதைத்தான் 'வெட்டுப்புலி' நாவலுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்!"

 

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிற்கு பிறகு, சயின்ஸ் பிக்‌ஷனில் உங்களைத்தான் அதிகமாகக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, 'ஆபரேஷன் நோவா' நாவல் தொடராக வெளிவந்தபோதே பேசப்பட்டதே?

"சுஜாதாவோடு என்னை ஒப்பிடுவதை, ஒரு பெரிய மிகையாகத்தான் பார்க்கிறேன். அவர் மிகப்பெரிய ஜுனியஸ். சுஜாதா மறைவு, அறிவியல் புனைகதை உலகுக்கு பெரிய இழப்பு. நான் அவருடைய கதைகளைப் படித்து வளர்ந்தவன். ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது, ஆசிரியரிடம் 'ஆபரேஷன் நோவா' நாவலுக்கான ஐடியாவை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. 

விகடனில் என்னுடைய முதல் தொடர் விஞ்ஞானக் கதையாக அமைந்ததில் நான் பூரிப்பும், சந்தோஷமும் அடைந்தேன். 'ஆபரேஷன் நோவா' இப்போது நடக்கும் கதைதான். மூவாயிரத்து பத்து, செவ்வாய் கிரகம் என்று சொல்லிவிடுவதால் மட்டும் அது சயின்ஸ் பிக்‌ஷனாகிவிடாது. இந்த அறையில் கூட, நாம் சயின்ஸை கொண்டு வந்துவிட முடியும். அதற்கு தேவை ஒரு கதையும், கொஞ்சம் விஞ்ஞானமும்தான்!"

 

அடுத்த என்ன நாவல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

"வரலாற்றையும் அறிவியலையும் கலந்து தற்போது ஒரு நாவல் எழுதுகிறேன். பல்லாயிரம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றையும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் இணைத்து எழுதிக்கொண்டு வர்றேன். பாதி நாவல் முடிந்துவிட்டது. அதற்கு 'வேங்கை நங்கூரத்தின் ஜீன்குறிப்புகள்' என பெயரிட்டுள்ளேன். பாரம்பர்யமாக ஒரு தகவல் எப்படி தொடர்து பதிந்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையையும் கடந்து, எத்தனை ஆயிரம் வருஷமாக வந்துகிட்டு இருக்கு என்பதை சொல்றேன். அது ஒருவேளை சர்ச்சையை ஏற்படுத்தலாம் அல்லது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!" - என்று சொல்லி, புன்னகையோடு முடித்தார் தமிழ்மகன்!

காலத்தோடு இணைந்த எழுத்தைப் படைப்பவர்களுக்கு, காலம் தாண்டியும் புகழ் கிடைக்கும். அந்த பெருமைச்சங்கிலியில் தமிழ்மகனும் இடம்பெறுவார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles