எனக்கு தமிழ் மீது வெறி! நடிகர் தியாகராஜன்

Wednesday, March 1, 2017

"நிறைய சினிமாக்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும், 'எமன்' படத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவம். படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர் என்னை அணுகி கதை சொல்லியது தொடங்கி, படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேசியது வரை எனக்குக் கிடைத்தது எல்லாம் புதுவித அனுபவம் தான். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. எல்லாவற்றையும் இயக்குநர் ஜீவா சங்கர் தனித்துவமாகப் படைத்திருக்கிறார்..!", என்று ஜீவா புராணத்துடன் தொடங்குகிறார் தியாகராஜன்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களைத் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வெளிக்காட்டியவர். சில காலமாக நடிப்புலகில் இருந்து சற்று விலகியிருந்தவர், தற்போது ‘எமன்’ படத்தின் மூலமாக மீண்டும் தனது இன்னின்ஸை தொடர்ந்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து பேசியபோது...

 

இயக்குநர் ஜீவா சங்கர் உடன் பணியாற்றியது பற்றி..?

"ஒளிப்பதிவாளர், இயக்குநர், வசனகர்த்தா என பன்முக ஆளுமை கொண்டவர் ஜீவா சங்கர். கடின உழைப்பாளி. 24 மணி நேரமும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார். அதேபோல, ஹெட்போனில் எதையோ கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம், "என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்றேன். "எடுக்கப்போகிற சீனில் கவனமாக இருக்க, இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்..." என்றார். செதுக்கி, செதுக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதற்குப் பிறகு, அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்!

எப்போதுமே எனக்கு தமிழ் மீது வெறி உண்டு. சின்ன வயசுல இருந்தே தமிழ் நாவல்களை விரும்பிப் படிப்பேன். தமிழ் படிப்பது என்றால், எனக்கு அவ்வளவு ஆர்வம். என்னுடைய படங்களுக்கு வசனங்கள் எழுதும்போது, அது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதேபோல, 'எமன்' படத்தில் ஜீவா சங்கர் வசனங்கள் புரியும்; வித்தியாசமாக இருக்கும். அது ரசிகர்களிடம் பேசப்படும்!"

 

'எமன்' நாயகன் விஜய் ஆண்டனி பற்றி..?

"பல திறமைகள் கொண்டவர்; எளிமையானவர். வசீகரமான முகத்தோற்றம் உள்ளவர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகக்கூடியவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாத்திமா மேடம், படத்தின் தயாரிப்புப்பணிகளை பார்த்துக்கொண்டார். மிகப்பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக லைக்கா புரொடக்‌ஷன்ஸ் இணைந்திருப்பது, படத்தைப் பெரிய அளவில் கொண்டுபோய் சேர்க்கும். அவருடன் நடித்தது மறக்க முடியாதது!"

 

படத்தில் நடித்துள்ள சக நடிகர்கள் பற்றி..?

"படத்தில் அருள் என்பவர் நடித்திருக்கிறார். அவருக்கு ஒரு வயதான பாத்திரம். மிக திறமையாக நடித்துள்ளார். ஆரம்பத்தில், அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும்போது 'யார் இந்த பெரியவர்?' என்றுதான் நினைத்தேன். படப்பிடிப்பு முடிந்து, அவர் முகச்சவரம் செய்துவிட்டு வந்து நின்றபோது வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். மிகவும் இளமையானவர் என்று அப்போதுதான் தெரிந்தது. தன்னுடைய பாத்திரத்துக்காக ஆறு மாதங்கள் நீண்ட தாடி, தலைமுடியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது. அவருடைய நடிப்பும் 'எமன்' படத்தில் பேசப்படும். அதேபோல ஜெயக்குமார், பிரின்ஸ், மியா ஜார்ஜ், சங்கிலி முருகன் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்!"

 

உங்களுடைய பாத்திரம் குறித்து..?

" 'எமன்' படம் அரசியல் பின்னணி கொண்ட வித்தியாசமான கதை. எந்தக் காட்சியும் யூகிக்கமுடியாத அளவுக்கு இருக்கும். படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தியேட்டரில் போய் பாருங்க. உங்களுக்கு எல்லாம் தெரியவரும்!" 

 

தேர்ந்தெடுத்து, சில படங்களில் மட்டும் நடிப்பது ஏன்?

"நடிப்பில் எனக்கும் தீனி வேண்டும். எனக்கான முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள் உருவாகும்போது, அது எனக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில், அந்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிறேன். கேமிரா முன்னாடி போய் சும்மா நின்றுவிட்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தப் படத்தில் கூட ஜீவா சங்கர் சொன்ன கதைக்காகத்தான் நடிக்க சம்மதித்தேன்!"

 

'எமன்' ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படமா?

"படத்தில் நிறைய தமிழர்கள் ஈடுபட்டிருக்காங்க. படத்தினுடைய இயக்குநர், அவருடைய இணை இயக்குநர் வெற்றிச்செல்வன், இவங்க எல்லோருமே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவங்க. திருவாரூர் சாமிகிட்ட வேண்டிக்கிட்டதாலதான் எனக்கு தியாகராஜன்னு பேர் வைச்சாங்க. அந்தவகையில் தமிழ் மீது ஈடுபாடு உள்ள நாங்கள் 'எமன்' படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஜல்லிக்கட்டு சார்ந்த பிரச்சினை விவாதக்களமாக மாறியது. அதற்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். அந்த வகையில்தான் போஸ்டரை கூட டிசைன் செய்தார் இயக்குநர். வியாபார யுத்திக்காக அதை வடிவமைக்கவில்லை. போராட்டத்தின்போது நாங்களும் மெரினாவுக்கு சென்று கலந்துகொண்டோம்!"

 

படப்பிடிப்பில் சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதேனும் நடந்ததா?

"படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வெவ்வெறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. எங்கேயும் எந்த அசம்பாவிதமும் நடக்காததே சுவராஸ்யமானதுதான்!"

 

உங்களது மகன் பிரசாந்த்தை வைத்து, அடுத்து படம் தயாரிப்பீர்களா?

" 'எமன்' படத்தின் இணை இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்கும். விஜய் ஆண்டனி நடித்த 'நான்' படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறேன். அதை ஹிந்தியில் பிரசாந்தை வைத்து எடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன!" ரகசியக்கதவைத் திறந்து வெளியேறுவது போல, தனித்துவத்துடன் நிறைகிறது தியாகராஜனின் குரல். இயக்கம், நடிப்பு என அவர் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய நேரமிது. 

-  கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles