பாசத்தைக் காட்ட நேரமில்லை.. நான் ஒரு மோசமான தகப்பன்.. இயக்குநர் பாக்யராஜ் 

Tuesday, January 31, 2017

"ஒரு நடிகராக இருந்ததால், எனக்கான கதைகளையே பண்ணிக்கிட்டேன். 'ஒரு கைதியின் டைரி ' மாதிரியோ 'சொக்கத்தங்கம்' மாதிரியோ, நானில்லாத படங்களை இயக்குவது என்பது கம்மியாகிவிட்டது. இதையெல்லாம் வரும் காலங்களில் நிவர்த்தி செய்ய வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில் என்னுடைய புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகும்" - உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார் தென்னிந்தியாவின் திரைக்கதை பிதாமகன் பாக்யராஜ். 

ஒரு மாலைப்பொழுதில் அவரிடம் பேசியபோது...

 

இப்போதும் உங்களுக்குள் அந்த திரைக்கதையாசியர் கனவு இருக்கிறதா?

"அது என்றைக்கும் தீராத ஒரு தாகம். திரைக்கதையாசிரியர் ஆக வேண்டும் என்று சினிமாவுக்கு வரவில்லை. உண்மையில் நடிகராக ஆகணும்னு தான் சினிமாவுக்குள்ளே வந்தேன். ஆனால், சந்தர்ப்ப சூழலால் டெக்னீஷியனாகி, திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா என்று மாறிய பின் இயக்குநர், நடிகனாகிவிட்டேன். என்னுடைய பலம் திரைக்கதையில் தான் இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். உண்மையில் திரைக்கதை சார்ந்து, நான் அறிந்துகொள்ள வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது!"

 

சினிமாவுக்கு புது வெளிச்சம் பாய்ச்சிய சமீபத்திய இயக்குநர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

"சில இயக்குநர்கள் என்னிடம் வந்து தங்களுடைய கதைகளைச் சொல்லி, அபிப்ராயம் கேட்பார்கள். அவர்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது உண்டு. அடுத்து நான் படம் இயக்க உள்ளதால், பிற இயக்குநர்களின் திரைக்கதையில் பணியாற்றுவதற்கான நேரமில்லை!" 

 

'நியோ ரியலிஸ' பாணியில் அமைந்தது 'அந்த ஏழு நாட்கள்'. அதன் தொடர்ச்சியாக, முந்தானை முடிச்சு படத்தை கமர்ஷியலாக இயக்கினீர்களே?

"முந்தானை முடிச்சு கமர்ஷியல் படம் மட்டும் அல்ல; ஒரு விஷயம் கமர்ஷியலாக சொல்லப்பட்டது. மனைவியை இழந்த ஒரு ஆசிரியரை வலுக்கட்டாயமாக காதலித்து கரம்பிடிக்கும் ஒரு பெண்ணின் கதைதான் அது. வழக்கமாக கிராமங்களில் மூத்த குடி இறந்துபோயிட்டா, அவளுடைய குழந்தைகளை இளைய குடியா வர்றவ சரியாக கவனிச்சிக்க மாட்டா என்கிற மூடப்பழக்கம் இருந்து வந்தது. விதிவிலக்காக சிலர் உண்டு என்றும், அதை மாற்றுவதற்காகவும், மேலும் சில விஷயங்களை சேர்த்து ஜனரஞ்சகமாக சொன்னேன். மற்றபடி, கமர்ஷியலாக சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படியொரு கதையை தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் கமர்ஷியலாக வசூல் செய்யுற அளவுக்கு சொல்லியிருக்கிறேன்!"

 

உங்கள் குருநாதரின் வேதம் புதிது படத்தையும், உங்களுடைய இது நம்ம ஆளு படத்தையும் திரை விமர்சகர்கள் அடிக்கடி விவாதிக்கிறார்களே?

"குருநாதருடைய வேதம் புதிது படமும் வெற்றிபெற்ற படம் தான். அந்தக் கதையை அவர் சீரியஸாக சொல்லியிருந்தார். எப்போதும், என்னுடைய கதைகளை லைட்வெயிட்டாக சொல்லக் கூடிய ஆள் நான். அதனால், இது நம்ம ஆளு படத்தின் கதையில் சில இடங்களில் சீரியஸாகவும் பல இடங்களில் எண்டெர்டெயின்மெண்ட்டாகவும் சொல்லியிருந்தேன். 

சாதி என்பதெல்லாம் தப்பு; மனித நேயம்தான் முக்கியம் என்கிற கருத்து உள்ளூற இருப்பது மாதிரி அமைத்திருந்தேன். அவருடைய பாணி வேறு; என்னுடைய பாணி என்பது வேறு. அதனால் இரண்டையும் ஒப்பிட வேண்டியதில்லை!"

 

நடிப்பதற்காகத்தான் கோலிவுட்டுக்குள் வந்தாகச் சொன்னீர்கள். ரோல் மாடல் என்று யாரேனும் உண்டா?

"சிவாஜி, கமல் எல்லாம் மாறுபட்ட பாத்திரங்களை தேடித்தேடி நடிப்பார்கள். சத்யராஜ் போன்றவர்கள் வித்தியாசமான பாத்திரங்கள் கிடைத்தால், அதில் தங்களுடைய முத்திரையை பதிப்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நானே ஒரு கதாசிரியர், இயக்குநராக இருப்பதால், எழுதும்போதே எனக்கான பௌண்டரி லைனை தாண்டிப் போகமாட்டேன். ரசிகர்களிடம் எனக்கான இமேஜ் உருவாகிவிட்டது. அதைத் தாண்டிப்போனா, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பது தெரியாது. அதனால், அந்த இமேஜைத் தாண்டிப்போக முடியாது. 

'ஒரு கைதியின் டைரி' படத்துக்கான கதை எழுதினேன். அதை குருநாதர் இயக்கினார். கமல் நடித்தார். அதில் நான் நடித்திருந்தால் சரியாக இருக்காது. திரையில் நகைச்சுவையோடு எதையாவது சொல்லுவேன்னு தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க. ஹாரரில் என்னை பார்க்க விரும்புவதில்லை. நடிகராக, பிரமாதமா நடிச்சேன் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்கிட்ட பாத்திரத்தை ஜனங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ, அந்தளவுக்கு நடித்திருக்கேன்!"

 

உங்களுக்கு என்று விசேஷமான நடன அமைப்பு உருவாக்கப்பட்டதே?

உறுதியாக "இல்லை.." என்று மறுக்கிறார். 

"சினிமாவுக்கு வரும்போது, நடிகனாக என்னை தயார்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விபத்தாகத்தான் நடிகனானேன். சண்டைப்பயிற்சிகள் எல்லாம், என்னால் எளிதாக கற்க முடிந்தது. ஆனால், சினிமாவில் யாராவது டான்ஸ் ஆடுவதைப் பார்த்தாலே நான் சிரிப்பேன். இயல்பு வாழ்க்கையில் யாராவது இப்படியெல்லாம் ஆடுவார்களா? என்று விமர்சனம் செய்வேன். அதனால் எனக்கு எது வருமோ, அதை மட்டுமே வைத்து நடனம் அமைத்தார்கள். அது பின்னால் பாக்யராஜ் டான்ஸ் என்று மாறிவிட்டது!"

 

நடிகராக மகன் சாந்தனுவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"நான் எதிர்பார்த்த அல்லது அவன் எதிர்பார்த்த வளர்ச்சி இன்னும் வரலை. அதற்கு நேரம் என்று ஒன்று இருக்கு. நல்லா நடிக்கிறாரு; டான்ஸ் பண்றாருன்னு ரசிகர்களிடம் நல்ல பேரு இருக்கு. ஆனா, அதிர்ஷடம் மட்டும் இன்னும் வந்து சேரலை. அநேகமாக, இந்த வருட இறுதிக்குள்ளே ஒரு முன்னணி கதாநாயகனாக வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கு!" 

 

உங்களுடைய குடும்பம் குறித்து..?

கேட்டவுடன் சிரிக்கிறார். 

"உண்மையில் நான் ஒரு மோசமான தகப்பன். ஏன்னா, ஒரு நல்ல அப்பாவாக என் குழந்தைகளை அக்கறை எடுத்து பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மீது பாசம் இருந்தது. ஆனால், அதைக் காட்டிக்கொள்வதற்கான நேரம் இருந்ததில்லை. குழந்தைகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்தது பூர்ணிமா தான். பாக்யராஜ் நல்ல தகப்பன், நல்ல கணவன் என்று சினிமாவில் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், இயல்பு வாழ்க்கையில் ஆவரேஜ்தான்!" தெளிவான திரைக்கதை அறிவின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட ஒரு ஜாம்பவானின் குரல், இதைச் சொல்லும்போது மெல்ல அமைதியில் அமிழ்கிறது..

- கிராபியென் ப்ளாக்

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles