'சாலை'க்காக சாகசப் பயணம்! இயக்குநர் சார்லஸின் ‘த்ரில்’ அனுபவம்!!

Friday, January 13, 2017

" ‘ஸ்ரீநகர் விமான நிலையம் வழக்கமானது அல்ல; அது முழுக்க இந்திய ராணுவத்திற்குச் சொந்தமானது. இங்கே புகைப்படங்களோ, வீடியோவோ எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்கிற அறிவிப்பு, விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கீழே பார்த்தபோது, முழு விமானத்தளமும் பனியால் போர்த்தப்பட்டிருந்தது. அங்கேயே எங்கள் படக்குழுவின் சாகசப் பயணம் தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தேன். அதன்பிறகு, படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க, நிறைய அதிகாரிகளைச் சந்தித்தேன்; நிறைய கேள்விகளை எதிர்கொண்டேன். இந்த சாகசங்களுக்காகத் தான் சினிமாக்குள்ளே வந்தேன்.

அதனால், ஒவ்வொரு ’மூவ்’வும் எனக்கு த்ரில்லான அனுபவமாகத்தான் இருந்தது. என்னுடைய படக்குழுவினரிடம், நான் சொன்னது இதுதான். "இது ஒரு சாகசம். இங்கே நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அதனால், இறுதிவரை நாம் நினைத்ததை உருவாக்க முயற்சி செய்வோம்!" என்றேன். அவ்வாறே முயற்சித்திருக்கிறோம்" - ரொம்ப தில்லாக மட்டுமல்ல, தீர்க்கமாகவும் பேசுகிறார் இயக்குநர் சார்லஸ். 'நஞ்சுபுரம்,' 'அழகு குட்டி செல்லம்' படங்களைத் தொடர்ந்து, 'சாலை' என்கிற படத்தின் மூலமாக பிரம்மாண்டத்துக்குள் கால்பதித்திருக்கிறார்!

 

'சாலை' படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பெரிய பட்ஜெட்டில் தயாரானது போன்று தெரிகிறதே?

"எனக்கு எப்பவுமே பிரம்மாண்ட படங்களின் மீது ப்ரியம் உண்டு. சினிமாவை, எப்பவுமே ஒரு அகண்ட திரையாகப் பார்க்கணும்னு தான் ஆசைப்படுவேன். அதேமாதிரி, படத்தில் அகண்ட நிலவெளிகளையும், அதனுடைய புவியியல் அமைப்பையும் இடம்பெற வைக்கணும்னு நினைப்பேன். அந்தமாதிரியான படங்களைத்தான் அதிகமாக விரும்பிப் பார்ப்பேன். என்னுடைய இயக்கத்தில் உருவாகிற படங்களையும் அப்படி எடுக்கணும்னு ஒரு திட்டம் இருந்தது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்குள் அது சாத்தியப்படாமல் போயிருக்கு. டிஜிட்டல் சினிமாவில் படம் எடுக்கலாம் என்ற நிலைக்குப் பிறகு, எனக்கு கிடைத்த இரண்டு கோடி ரூபாயில் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுக்க முடியுமான்னு யோசிக்க ஆரம்பித்தேன். என் யோசனைக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கு!"

 

கதைக்களனாக காஷ்மீரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

"நாம, அதிகமாக வெயிலுக்கும் குறைவாக மழைக்கும் மட்டுமே பழகியிருக்கோம். கொட்டும் பனியை அதிகமாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமாக பரிச்சயம் இல்லாத ஒரு நில வெளியில் கதை சொல்லணும் என்று தோன்றியது. அதனால் பனிப்பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதுதான் பேண்டஸியாகவும் கான்ட்ராஸ்டாகவும் இருக்கும். அதனால் காஷ்மீரை தேர்வு செய்தேன். 

தீவிரவாதம் சார்ந்த பிரச்சினைகளால், அங்கு படப்பிடிப்பு நடத்துவதை இந்திய சினிமா இயக்குநர்கள் தவிர்த்து வந்தார்கள். இப்போது, அங்கே நிலைமை கொஞ்சம் இயல்புக்குத் திரும்பியிருக்கு. அங்குள்ள மாநில அரசு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும்பொருட்டு சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். இந்தியாவிலேயே, காஷ்மீரில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய படம் "சாலை" மட்டும்தான்!"

 

படத்தின் நாயகன் விஷ்வா குறித்து?

" 'சாலை' படத்தில் உச்ச நட்சத்திரமா நடிக்கிறது ரொம்ப சிரமமான விஷயம். கதைப்படி அவரு டபுள் ஆக்‌ஷன் பண்ணணும். வில்லனாகவும், ஹீரோவாகவும் நடிக்கணும். வில்லன்னு சொல்லும்போது நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கும்; அடிபடும். அப்புறம் உடலையே கிடுகிடுக்க வைக்கிற பனியைத் தாங்கிக்கணும். 45 நாள் வனவாசத்தை அனுபவிக்கணும். இதற்கெல்லாம் ஒத்துப்போகிற ஒரு ஹீரோவை தேடினேன். அப்படி என்னுடைய தேடல்ல கிடைச்சவர்தான் விஷ்வா. ஏற்கனவே, 'எப்படி மனசுக்குள் வந்தாய்' படத்தின் மூலம் தன் திறமையை நிரூபித்தவர். முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிச்சாரு. படத்தில் அவருடைய பங்கு அளப்பரியது!"

 

மீண்டும் உங்களுடைய இயக்கத்தில் கிரிஷா நடித்திருக்கிறாரே?

" 'அழகு குட்டி செல்லம்' படத்தில் நடிக்கும்போதே கிரிஷாவோட நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது. இந்தப் படத்தின் கதையை எழுதும்போதும் நாயகி கிரிஷாதான்னு முடிவு பண்ணினேன். படப்பிடிப்பின்போது தன்னுடைய நடிப்பில் தீவிரம் காட்டினாங்க. ஷூட்டிங் இல்லாத நாள்லயும் கூட, தன்னோட பெற்றோர் உடன் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க. எங்களுக்கு உதவியா இருந்தாங்க. இன்றைக்கு இந்த காட்சியைத்தான் எடுக்கப் போறோம்னு எங்களுக்கு உறுதியா தெரியாது. சூழலைப் பொறுத்து அது மாறும். அதனால, எல்லா வசனங்களையும் முன்கூட்டியே மனப்பாடமா மனசுல வச்சிருப்பாங்க. எந்தக் காட்சியா இருந்தாலும், உடனே ரெடியாயிடுவாங்க. இதெல்லாம் ஒரு இயக்குநர் மேல நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாத்தியம். படத்துக்கு அவங்களும் ஒரு ப்ளஸ்!" 

 

இது த்ரில்லர் வகை படமா?

" நீங்க சில வீடியோ கிளிப்பிங்ஸ் பார்த்திருப்பீங்க. ஒரு ஓவியர் ஏதோ ஒரு சித்திரத்தை வரைந்து கொண்டிருப்பார். 'அட... இது நமக்கு தெரிஞ்ச உருவம்தானே'னு நினைப்பீங்க. ஆனா, அவர் வரைஞ்சு முடிச்சிட்டு, அந்த ஓவியத்தை திருப்பி வச்சபிறகுதான், அவர் தீட்டியது வேறொரு அழகான ஓவியம்னு தெரியும். அதை ’அவர் தலைகீழாக வரைய ஆரம்பிச்சிருக்காரு. இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்’னு ஒரு படிமத்தை முன்கூட்டியே நாமே நினைச்சிக்கிறோம். உண்மையில் அது அப்படி இருப்பதில்லை. அப்படிதான் இந்தப் படத்தின் திரைக்கதையும் இருக்கும். 

எல்லோருமே, பயணம்னா சேரும் இடத்தை நினைச்சிக்கிறாங்க. உண்மையில் பயணம் என்பது பயணிப்பது மட்டுமே. நீங்க எப்படிப் போறீங்க. எந்த மாதிரியான வாழ்க்கையை வாழுறீங்க என்பதுதான். "நாம எந்த சாலையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் நம்முடைய பயணத்தை தீர்மானிக்கிறது..."னு ஒரு வசனம் படத்தில் இடம்பெற்றிருக்கு. 'சாலை' மனிதனுடைய வாழ்க்கைப் பயணத்தை தான் பேசுது!" - ஷார்ப்பாக முடிக்கிறார் இயக்குனர் சார்லஸ். தெளிவாகத் திட்டமிட்டால், எந்தப் பயணமும் வெற்றியாகத் தான் முடியும்! ‘சாலை’ அப்படியொரு வரிசையில் இடம்பெறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles