கண்டிப்பாக மீண்டும் படம் தயாரிப்பேன்!! அழுத்தமாகச் சொல்லும் ஜெயபிரகாஷ்!

Friday, January 13, 2017

மாறிவரும் தமிழ் சினிமாவின் நிறம், கடந்த பத்தாண்டுகளில் பல நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நமக்குத் தந்துள்ளது. அவர்களின் மூலமாக, புதிய திசை நோக்கிப் பயணிக்கிறது ரசிகர்களின் ரசனைத்திறன். அதற்குக் காரணமான கலைஞர்களில் ஒருவர் நடிகர் ஜெயபிரகாஷ். ’மாயக்கண்ணாடி’ படம் மூலமாக திரையில் அறிமுகமான இவர், ‘பசங்க’, ‘நாடோடிகள்’, ‘வம்சம்’, ‘மங்காத்தா’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் நடித்து வெவ்வேறு ஆளுமைகளாகக் கூடுவிட்டு கூடு பாய்ந்தவர். இளம் இயக்குனர்களின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் ஜெயப்பிரகாஷ், மனம் இதழுக்காகத் தன் மனம் திறந்தார். 

மாயக்கண்ணாடிக்கு முன்.. மாயக்கண்ணாடிக்கு பின்..

சேரன் சார்ட்ட இருந்து ஒரு போன் கால் வந்தது. அந்த நிமிஷத்துல, அவர் எதுக்கு கூப்பிடுறார்னு எனக்குத் தெரியாது. பொற்காலம் தயாரிச்சதால, அவர்கிட்ட இருந்து ரெகுலரா போன் வரும். அதனால, நான் ஏதும் ஆச்சர்யப்படலை. அவரைப் பார்த்தபோது, மாயக்கண்ணாடியில நான் நடிக்கணும்னு சொன்னார். அதைக் கேட்டதும், எனக்கு ஷாக். ‘காசைப் போட்டு செய்ற தொழில் இது.. தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க’ என்றேன். ஆனா, அவர் கேட்கலை. ‘நீங்கதான் நடிக்கிறீங்க’ என்று ஆணித்தரமாகப் பேசினார்.  

அதுவரைக்கும், நான் திரைக்குப் பின்னாலதான் வேலை செஞ்சிருக்கேன். பிரஸ் மீட்ல கூட, நான் தலைகாட்டுனதில்லை. ’காசைப் போட்டு செய்ற தொழில் இது. என்னை வச்சுகிட்டு அவஸ்தைப்படாதீங்க’ என்றேன் சேரனிடம். காரணம், அப்போ டிஜிட்டல் கிடையாது; பிலிம் ரோல் வச்சு ஷூட் பண்ணா, எவ்வளவு வேஸ்டா போகும்னு தான் நான் யோசிச்சேன். ஆனால், சேரன் பிடிவாதமாக இருந்தார். அதனால, ‘ஓகே சார். நான் வந்துர்றேன்’ என்றேன். சொல்லிட்டேனே தவிர, ரொம்ப பயமா இருந்தது. கூச்ச சுபாவம் எனக்கு ரொம்ப ஜாஸ்தி. அதனால, ஷூட்டிங் ஸ்பாட்ல நான் நடிக்கிறதை நூறு பேர் பார்க்கிறதை நினைச்சே பயந்தேன். ஆனால், அவரோட டீம் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. ‘இதுதான் லைன், இங்கதான் பார்க்கணும்’ என்று எல்லாத்தையும் சேரன் கத்துக்கொடுத்தார். 

உள்ளே உதறல் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்காம நடிச்சேன். ஒவ்வொரு ஷாட் முடிஞ்சப்பவும் என்கரேஜ் பண்ணாங்க; மோட்டிவேஷன் கொடுத்தாங்க அந்த டீம். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த நடிப்புத் தொழில். இன்னிக்கு ஒவ்வொரு நாள் வேலைக்குப் போகும்போதும், சேரனுக்கு நன்றி சொல்றேன். ஏன்னா, அவர் அன்னிக்கு அழுத்தமா சொல்லலைன்னா, என்னால இந்த நடிப்பை ரசிச்சு செய்யமுடியாது. 

 

நீங்கள் சினிமா பின்னணி உடையவரா? எப்படி தயாரிப்பாளர் ஆனீங்க?

எனக்கு சொந்த ஊர் சீர்காழி. பியூசி முடிச்சவுடனே, ’வேலைக்குப் போறேன்’னு சொல்லிட்டு சென்னை வந்துட்டேன். சகோதரிகள் மூன்று பேர். நான் ஒரே பையன். அதனால, அப்பா அம்மா வருத்தப்பட்டாங்க. என்னோட உறவினர் ஒருவர் பெட்ரோல் பங்க் வச்சிருந்தார். அதுல வேலை செஞ்சு, மெதுவே முன்னேறினேன். சென்னைக்கு வந்து சுமார் 15 வருஷம் கழிச்சு, சினிமாவுக்கு வந்தோம். நண்பர்கள் எல்லோரும் சினிமா தயாரிக்கலாமேன்னு சொன்னாங்க. அப்ப, கொஞ்சம் வசதி வாய்ப்புகள் பெருகியிருந்தது. அப்ப ஆரம்பிச்சது தான், ‘ரோஜா கம்பைன்ஸ்’. எங்களோட முதல் படம் ‘சுட்டிக்குழந்தை’. தெலுங்கில சக்கைபோடு போட்ட படத்தை தமிழ்ல டப் பண்ணோம். இங்கயும் பெரிய ஹிட். அப்புறம் பொற்காலம், கோபாலா கோபாலா, பூந்தோட்டம் என்று பல படங்கள் தயாரித்தோம்.  

ஆனால், ஒரு கட்டத்துல ’சினிமா வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டோம். அதுக்கப்புறம் மூணு வருஷம் கழிச்சு, கேப்டனோட கால்ஷீட் கிடைச்சது. ஏன்னா, எப்பவும் சினிமாவுல டச் இருந்தது. அப்படித்தான் ‘தவசி’ பண்ற வாய்ப்பு வந்தது. 2001ல சிஜே சினிமாஸ்னு ஒரு பேனர் தொடங்கினோம். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், வர்ணஜாலம், ஜூலி கணபதி, நெறஞ்ச மனசு என்று வரிசையா படங்கள் பண்ணோம். ஒரு ஸ்டேஜ்ல நிறைய நஷ்டங்கள். சினிமாவுல மட்டுமல்ல, நான் செஞ்சுகிட்டிருந்த மற்ற தொழில்கள்லயும் கூட. அதனால, பழையபடி ரெகுலர் தொழிலுக்குப் போனேன். ஆனா, எதிர்பாராதவிதமா நடிக்க வந்துட்டேன். 

 

மாயக்கண்ணாடிக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறியது?

மாயக்கண்ணாடியில நடிச்சபிறகு, மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சது. நான் நடிப்பேன்னு யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், அதுக்குப்பிறகும் முழுநேர நடிகன் ஆகலை. லாடம் உள்பட சில படங்கள்ல சின்ன ரோல்கள்ல நடிச்சேன். சேரன் சார் ஆபீஸ்ல இருக்கும்போதே, ஒருநாள் இயக்குனர் சமுத்திரக்கனியைச் சந்திச்சேன். அப்போ தான், ‘மாயக்கண்ணாடி முடிச்சுட்டு, என்னோட படத்துல நீங்க நடிக்கிறீங்க’ என்றார் அவர். ‘நெறஞ்சமனசு’ படத்தை இயக்கியதால, அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் நாடோடிகள் இயக்கப்போகிறார் என்று, அப்போது எனக்கு தெரியாது. ’சரி’ என்று மட்டும் சொன்னேன். 

அப்புறம் ஒருநாள், கனி எனக்கு போன் செய்தார். நாடோடிகள் படத்துல பழனிவேல் ராமன் என்ற கேரக்டரைக் கொடுத்தார். அதுல வேலை செய்தபோது தான், சசிகுமார் எனக்கு அறிமுகம். 

ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கிறப்போ, ‘எதுக்கு சார் தாடி வச்சிருக்கீங்க’ என்று கேட்டார் சசி. சின்ன வயசுல இருந்து தாடி வச்சிருக்கிற காரணத்தைச் சொன்னேன். ‘இல்ல, தாடி எடுத்தீங்கன்னா ஒரு கேரக்டர்ல நீங்க நடிக்கலாம்’ என்றார் அவர். ‘ஐயோ சார், தாடி எடுத்து 20 வருஷம் ஆச்சு. எவ்ளோ கேவலமா இருக்கும்னு தெரியலை’ என்று மறுத்தேன். ஆனால், அவர் விடலை. அப்படி வந்த படம் தான் ‘பசங்க’. நாடோடிகளுக்குப் பிறகு, அதுல நடிக்கப் போனேன். 

ஷேவ் பண்ணிட்டு, என் மூஞ்சைப் பார்த்துட்டு நானே பயந்துட்டேன். தாடி வச்சிருக்கிறவங்களுக்கு, நான் சொல்ற அவஸ்தை புரியும். ஆனால், பாண்டி சார் எல்லாம் பார்த்துட்டு, ‘கரெக்டா இருக்கு’ என்றார். அப்படி நடிச்ச சொக்கலிங்கம் வாத்தியார் கேரக்டரை, இப்போ எல்லாரும் பிரமாதமா பேசுறாங்க. 

 

பசங்க, நாடோடிகளுக்குப் பிறகு நீங்கள் பணிபுரிந்த படங்கள் என்னென்ன? 

ஒரு நல்ல படம், இன்னும் ரெண்டு நல்ல வாய்ப்புகளைக் கொண்டுவரும். என் வாழ்க்கையில அது நடந்துச்சு. நான் பண்ணது எல்லாமே, அந்தந்த டைரக்டர்கள் கத்துக்கொடுத்தது. அப்படி பசங்க படம் மூலமாக, நான் மகான் அல்ல படத்துல சுசீந்திரன்கிட்ட கொண்டுபோச்சு. நிறைய இளைஞர்கள் ‘கார்த்தியோட அப்பாவா பின்னியிருந்தீங்க’ என்று இன்று பாராட்டுகிறார்கள். அது ‘நா பேரு சிவா’ என்று தெலுங்கிலும் ரிலீஸாகி ஹிட்டானது. இன்னிக்கு நான் தெலுங்கு சினிமாவுலயும் நடிக்கிறேன். அங்கயும் அந்தப்படத்தை பலர் நினைவில் வச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல, ‘வம்சம்’ படத்துல வயித்தெரிச்சல் பிடிச்ச ஒரு கேரக்டர் கொடுத்தார் பாண்டி சார். அவர் தான் நெகட்டிவ் கேரக்டர்லயும் ஒரு ஓபனிங் கொடுத்தார். அங்கயிருந்து, ஒரு புரபொஷனல் ஆக்டரா வர ஆரம்பிச்சிட்டேன். 

முழுநேர நடிகனான பிறகு, எந்தமாதிரியான கேரக்டர்களை ஒத்துக்கிட்டீங்க? எதையெல்லாம் வேண்டாம்னு ஒதுக்குனீங்க?
ஆரம்பத்துல, ஒரு கேரக்டரை வேண்டாம்னு சொல்ல ரொம்பத் தயங்குவேன். ’பிடிக்கலை’ன்னு மனசுக்குள்ள தோணினாலும், வெளியே சொல்ல கூச்சப்படுவேன். அதை மீறி, எனக்கு நிறைய நல்ல பட வாய்ப்புகள் வந்தது. ஓரிரண்டு படத்துல, நான் நடிச்ச கேரக்டர் சரியில்லாம இருந்திருக்கலாம். அதனால வருத்தம் எதுவும் இல்லை. எதை பண்ணக்கூடாதுன்னு கத்துக்கிறதுக்கான ஒரு வாய்ப்பா தான், அதையெல்லாம் நினைக்கறேன். 

யார்கிட்டயும் வாய்ப்பு கேட்காமலேயே நிறைய நல்ல படங்கள் கிடைச்சது. அப்படி கிடைச்ச படத்துல ‘மங்காத்தா’வும் ஒண்ணு. அவ்வளவு பெரிய படத்துல, எனக்கு முக்கியமான ஒரு ரோல் கொடுத்தார் வெங்கட்பிரபு. மங்காத்தாவோட வரவேற்பை, என்னால விளக்கவே முடியாது. ஒரு சூப்பர் பவர்புல் ஸ்டார் படத்துல நடிக்கும்போது, கூட நடிக்கிறவங்க கிராஃபும் ஏறும். என் கிராஃப் அப்படித்தான் ஏறுச்சு. 

அதே மாதிரி, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட் பிடிக்காதபோது அதுல வேலை செய்யமுடியாது. அதை நாசூக்கா சொல்லிட முடியும். இப்போ ஓரளவுக்கு அந்த பக்குவம் வந்திருச்சு. சில வாய்ப்புகள் வேறமாதிரி வரும். எப்படின்னா, ‘ரொம்ப முக்கியமான கேரக்டர். ஒருநாள் தான். அதை நீங்க தான் பண்ண முடியும்’னு சொல்வாங்க. அதையும் இப்போ செய்றதில்ல. ஒரு விஷயத்தை சொல்ற அளவுக்கு, என்னோட கிராஃப் ஏறிடலை. கருத்து சொல்ற அளவுக்கு, நான் பெரிய மனுஷன் ஆகலை. ஏன்னா, நான் ஒரு நடிகன். அதை மகிழ்ச்சியாக செய்றேன். அவ்வளவுதான். 

நாடகம் மற்றும் திரை அனுபவமுள்ள கலைஞர்கள் கூட, உங்களது யதார்த்த நடிப்பை ரசிக்கின்றனர். ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன், உங்களை எவ்வாறு தயார்படுத்திக்கிறீங்க..?!
நீங்கள் சொல்வது மிகப்பெரிய பாராட்டு. பல்வேறு பயிற்சிகளைச் செஞ்சு தயாராகிவந்த சக நடிகர்கள் சொல்லும்போது, அதுக்கு தலைவணங்கணும். 

பொதுவா ஸ்பாட்டுக்கு போயிட்டா, என் கவனம் முழுக்கவே அங்க தான் இருக்கும். டைரக்டர் என்ன சொல்றாரு, அந்த கேரக்டர் என்ன செய்யணும்கறது எல்லாம் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும். மத்தவங்ககிட்ட சிரிச்சிப் பேசினாலும், சீரியசான காட்சியா இருந்தா சுமார் 15 நிமிஷம் அவங்ககிட்டயிருந்து விலகியிருப்பேன். சில விஷயங்களை மனசுக்குள்ளே ஓட்டிப்பார்த்து, அந்த கேரக்டர் என்ன செய்யணும்னு யோசிச்சுப் பார்த்து நடிப்பேன். 

எனக்குக் கிடைச்ச வாத்தியார்களும் இந்தப் பாராட்டுக்கு இன்னொரு காரணம். டைரக்டர் சேரனில் தொடங்கி பாண்டிராஜ், சமுத்திரக்கனி, சுசீந்திரன், மிஷ்கின், அருண்குமார், தெகிடி ரமேஷ் என்று எல்லாருமே மிகச்சிறந்த வாத்தியார்கள். குறிப்பிட்ட காட்சியில் எனக்கு முக்கியத்துவம் அதிகமிருந்தா, அவர்கள் எனக்காக ஒரு பத்து நிமிஷம் ஒதுக்குவார்கள். முந்தின காட்சிகள் மற்றும் பின்னால வர்ற கதையைப் பத்தி சொல்வாங்க. அவங்க சொல்றதை உள்வாங்கிட்டு செய்யும்போது, அது சிறப்பா வெளிவந்திருக்குன்னு நினைக்குறேன். ஆறேழு வருஷங்கள் கடந்துவந்தபிறகு, ஆரம்பகாலத்தில் நான் நடித்த படங்களில் இருந்த தவறுகள் கண்ணுக்குத் தெரியுது. அதை இனிமே செய்யாம இருக்கணும்னு தோணுது. மத்தபடி, ஸ்கிரிப்டை முந்தினநாளே வாங்கி தயாராகிற அளவுக்கு, நான் இன்னும் வளரலைன்னு தான் நினைக்கறேன். 

 

50 வயசிலயும்  அழகா இருக்கமுடியும்கற நம்பிக்கையைக் கொடுத்திருக்கீங்களே, அதோட பின்னணி என்ன?

இதைக் கேட்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கறதுதான், என்னைப் பொறுத்தவரை அழகு. நான் என்னை வெளிப்படுத்திக்கறது உங்களுக்குப் பிடிச்சிருந்தா, i am good at presenting myself. நடிக்க வந்தபிறகு, முன்னாடியை விட கொஞ்சம் கவனம் அதிகமா இருக்கு. லட்சக்கணக்கான பேர் நம்மளைப் பார்க்கிறாங்க. அதனால, எக்ஸ்ட்ரா கவனம் கண்டிப்பா தேவைப்படுது. 

எப்பவுமே ஆரோக்கியமா இருக்கறதுல ஆர்வம் உண்டு. எல்லா பழக்கமும் இருந்தாலும், எதுவும் என் கைமீறிப் போனதில்லை. அதேமாதிரி எக்சர்சைஸ் பண்றது பிடிக்கும். சினிமாவுக்கு வந்தபிறகு, அதுல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தறேன். அவ்வளவுதான்!

நாற்பது வயதிற்குப் பிறகு வாழ்க்கை மாறும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? சிறுவயதில் இதுபற்றி யோசித்திருக்கிறீர்களா?
‘45 வயசுல ஆக்டிவ் பிசினஸ்ல இருந்து ஒதுங்கிரணும். உலகத்தைச் சுத்திப் பார்க்கணும்’. இருபது வயசுல பிசினஸ் பண்ண ஆரம்பிச்சப்போ, இதுதான் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும். ‘இன்னும் 25 வருஷம் நல்லா உழைச்சிட்டு, 45 வயசுக்கு மேல ஆபீஸ் பக்கம் போகக்கூடாது. எல்லாம் நல்லா நடக்குற மாதிரி, தொழிலை செட் பண்ணிடனும்’ என்று அடிக்கடி ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டிருப்பேன். ஆனால், அந்த வயசைத் தாண்டும்போது சில சிக்கல்கள் வந்தது. சினிமான்னு மட்டுமில்ல, எல்லா தொழில்கள்லயும் நெருக்கடி உண்டானது. அதை ஒரு கெட்ட நேரம்னுதான் சொல்லணும். எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறவங்க, அதை சமாளிக்கறதுக்காக சில முன்னேற்பாடுகள் செய்துப்பாங்க. 

’எப்போதுமே ஜெயிப்பேன்’னு நினைக்கிற என்னை மாதிரி ஆளுங்களை, தோல்விகள் கடுமையா பாதிக்கும். அதுல இருந்து மீண்டு வர்றதே பெரிசுங்கற மாதிரி ஆயிடும். அப்படியான காலகட்டத்தைச் சந்திச்சேன். இருபது வயசுல எப்படி ஒரு இன்னிங்ஸ் ஆரம்பிச்சேனோ, அதே மாதிரி 40 வயசுக்கு மேல அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிச்சு ஓடிட்டு இருக்கு. நான் செய்த தவறுகளை சரிசெய்யும் காலம் இது. கிடைத்த இரண்டாவது வாய்ப்பைச் சரியா பயன்படுத்திட்டு வர்றேன்னு நினைக்கறேன்.

 

உங்களிடம் இருக்கும் சில குணங்கள், உங்களது தோற்றத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும். அவை பற்றி..

மனசுல இருக்குறதை பேசிப் பழகியாச்சு. இந்த வயசுக்கு மேல அதை மாத்தணும்னு தோணலை. யாரையும் காயப்படுத்த மாட்டேன். ஆனால், காயப்படுத்தினா அமைதியா இருக்கமாட்டேன். ஒரு பிரச்சனை மனசுல ஓடிகிட்டே இருந்தா, அது நாம செய்ற எல்லா விஷயங்களையும் பாதிக்கும். பிரச்சனைக்குக் காரணமானவங்களோட உட்கார்ந்து பேசிட்டா, ஒரு தீர்வு கிடைச்சிரும். ஒண்ணு பிரச்சனை பெருசாகும், இல்ல முடிஞ்சு போயிரும்; ரெண்டுல ஒண்ணுதான் நடக்கும். அதனால எதை நினைச்சும் என்னைக் குழப்பிக்க மாட்டேன். 

உங்களது மகன்களும் நடிப்பில் இறங்கியிருக்கிறார்களே?
இதற்காக, சசிகுமாருக்கும் கம்பெனி புரொடக்‌ஷனுக்கும் நான் நன்றி சொல்லணும்! ஈசன் தயாரிக்கும்போது, ’பசங்களை கூட்டிட்டு வாங்க, ஒரு டெஸ்ட் எடுப்போம்’ என்றார் சசிகுமார். அதுவரைக்கும், நான் வீட்டுல சினிமா பத்தி பேசுனதே இல்ல. ’நான் நடிப்பேனா’ன்னு யோசிக்காதபோது, என்னோட பசங்க நடிப்பாங்கன்னு எப்படி யோசிச்சிருப்பேன்? அதனால, நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனாலும், அவர் கேட்கலை. 

அப்புறம் என்னோட இளையமகன் துஷ்யந்தை அழைச்சிட்டுப் போனேன். போட்டோஷூட்ல அவன் பிரமாதமா பண்ணான். ஈசன்ல அவன் டைட்டில் ரோல் பண்ணான். அவனுக்கு நடிக்க வரும்கறதையே, நான் அப்பதான் புரிஞ்சிகிட்டேன். 

ஈசன் நடிச்சப்போ, அவன் டென்த் படிச்சிகிட்டு இருந்தான். அது ஒரு ரெண்டும்கெட்டான் வயசு. அதனால, அதுக்கப்புறம் வந்த வாய்ப்புகளை வேண்டாம்னு மறுத்திட்டோம். இப்போ விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சிட்டு, திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சிருக்கான். இடையில ‘ஐவராட்டம்’னு ஒரு படத்துல நடிச்சான். இப்ப ‘தண்ணீர் தண்ணீர்’னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கான். ஒரு சின்ன தயாரிப்பு நிறுவனம். நிதானமா படம் பண்ணிட்டு இருக்காங்க. அது ஒரு நல்ல ஸ்கிரிப்ட். கூடவே, ‘வடசென்னை’ படத்துல ஒரு கேரக்டர் பண்றாரு. அது இன்னொரு நல்ல விஷயம். மூத்த மகன் நிரஞ்சன் இப்போ கார் பாலீஷிங் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். சின்னப்பையனுக்கு மட்டும் அப்பப்போ வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. 

 

உங்களது பள்ளிப்பருவம், குடும்பப்பின்னணி பற்றிச் சொல்லுங்க..

இப்போ என்னோட சொந்த ஊர் சென்னை தான். இங்க வந்து 30 வருஷம் ஆயிடுச்சு. ஆனா, என்னோட சொந்த ஊர் சீர்காழி. பியூசி வரை அங்க படிச்சேன். என்னோட பிறந்தவங்க மூன்று சகோதரிகள். பெற்றோர்கள் இப்ப உயிரோட இல்ல. இப்ப என்னோட மூத்த சகோதரி தான், எனக்கு தாய் மாதிரி. நான் ஒழுக்கமா இருக்கறேன்னு நீங்க நினைச்சா, அதுக்கு என்னோட குடும்பத்தினர் தான் காரணம். அத்தை, பாட்டின்னு ஊர்ல பெரிய குடும்பத்துல ஒருத்தனா வாழ்ந்தவன். இன்னிக்கு எல்லோரும் தனித்தனியா வந்துட்டோம். 

சின்னவயசுல, அடிக்கிற வெயில் முழுக்க எங்க தலை மேல தான் விழும். இப்போ உள்ள பசங்க விளையாடறதுல ஆர்வம் காட்டுறதில்லை. வீட்டுல பெண்களோடயே வளர்ந்ததால, அவங்க மேல பெரிய மரியாதை உண்டு. இப்போ சில செய்திகளைப் படிக்கிறப்போ, ரொம்ப சங்கடமா இருக்கு. சின்ன வாய்ப்பு கிடைச்சா கூட, தப்பா நடந்துக்கிறாங்க சிலர். இதுக்காக போலீஸை மட்டும் குறை சொல்லக்கூடாது. பெத்த தாய், தகப்பன் என்ன பண்றாங்க? கூட பழகுற ப்ரெண்ட்ஸ் என்ன செய்றாங்க? இப்படி நடந்தா, அவங்க மொத்தி எடுத்திர வேண்டாமா.. அடுத்தவங்களை குறை சொல்றதுக்கு தயாராக இருக்கிறோம். அதைத் தவிர்த்துட்டு, நம்மளையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் பெட்டரா வச்சுக்கிறது பத்தி யோசிக்கணும். 

என் பசங்ககிட்ட நான் சொல்ற விஷயம் ஒண்ணுதான். ’நீ எவ்ளோ பெரிய மனுசனா வேணாலும் வா, இல்ல சின்ன மனுஷனா இரு. தொழில்ல ஜெயி, இல்ல தோத்து போ. அடுத்தவங்களை எப்போதும் நோகடிக்காதே. குறிப்பா பெண்கள்கிட்ட தப்பா பேசுறதோ, செயல்படுறதோ கூடாது’ன்னு சொல்லுவேன். சின்ன வயசுலயே நாம சொல்ல வேண்டியதைச் சொன்னா, பிள்ளைங்க கேட்டுப்பாங்க. என்னைப் பெத்தவங்க நல்லா வளர்த்திருக்காங்க. அதையே என் பிள்ளைகளுக்கும் நான் சொல்றேன். 

 

நீங்கள் மீண்டும் படம் தயாரிப்பீர்களா?

கண்டிப்பா பண்ணுவேன். அந்தக்காலத்துல படத்தயாரிப்பில் இறங்குறபோது, சினிமா பத்தி பெரிய புரிதல் கிடையாது. ஏன்னா, வேற தொழில் பண்ணிட்டு இருந்தேன். அன்னிக்கு இருந்த செட்டப் வேற. 

இது மட்டுமே என்னோட ஆசைக்குக் காரணமில்ல. நான் தயாரிப்பாளரா இருந்த காலத்துல, ஸ்பாட்ல உட்கார்ந்ததே இல்ல. இப்போ நடிகனா இருக்குற ஏழெட்டு வருஷத்துல, ஸ்பாட்ல என்ன நடக்குதுன்னு பார்க்குறேன். ஒரு படத்துல எங்க தேவையில்லாம செலவு பண்றோம்கறது, இப்போ தெளிவா தெரியுது. ஒரு படத்துல எந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரோட பங்கு இருக்கணும்னு கத்துகிட்டிருக்கேன். இதையெல்லாம் என்னோட தயாரிப்புல பயன்படுத்துவேன். 

ஆனால், நான் எப்போ படத்தயாரிப்பில் இறங்குவேன்னு தெரியாது. எனக்கு இருக்குற சில சங்கடங்களைத் தீர்த்தபிறகே, அதைச் சரியா செய்ய முடியும். நான் செஞ்ச தவறுகளால பாதிக்கப்பட்டவங்களுக்கு உரிய மரியாதையைச் செஞ்சிட்டிருக்கேன். அதை முடித்தபிறகே, நான் படம் தயாரிப்பேன். 

நீச்சல் கற்றுக்கொண்டு தண்ணீரில் இறங்கும்போது தென்படும் நம்பிக்கை, ஜெயபிரகாஷின் உடலசைவில் மிளிர்ந்தது. ஜெயபிரகாஷின் வார்த்தைகளில் இருக்கும் அழுத்தம், இன்னும் பல திறமைகளை தமிழ்சினிமாவில் அடையாளம் காட்ட உதவட்டும்!

-  உதய் பாடகலிங்கம்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles