டீசரை ரஜினி வெளியிட்டது கடவுளோட விருப்பம்!   இயக்குநர் இசாக்

Wednesday, May 31, 2017

"ஒவ்வொரு இயக்குநருக்கும் அவருடைய வாழ்க்கையில் முதல் படம் என்பது முக்கியமான தருணம். அந்தப் படத்தை மிகவும் சிறப்பாக இயக்கணும்னு தான் ஆசைப்படுவாங்க. படம் பெரிய ஹிட்டடிக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனால், என்னுடைய முதல் படம் வித்தியாசமாக இருக்கணும்னு நினைச்சேன். யாரும் செய்யாத ஒன்றை செய்யணும்னு விரும்பினேன். அப்படி யோசிச்சபோது கிடைச்சதுதான் "சிங்கிள் ஷாட்டில் ஒரு படம்".

அப்படி உருவான படம் தான் 'அகடம்'. அதை இயக்கியது எனக்கு சவாலா இருந்தது. படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், கின்னஸ் அவார்டு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!" என தீர்க்கமாக பேசுகிறார் இயக்குநர் இசாக். 'நாகேஷ் திரையரங்கம்' படம் மூலம், தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருப்பவரிடம் பேசினோம்!
 
'நாகேஷ் திரையரங்கம்' படம் பற்றி?
 
"சினிமாவில் ஹீரோவை பிடிக்காத ஆட்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், காமெடியனை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தவகையில் நாகேஷ் சாரை எல்லோருக்கும் பிடிக்கும். படத்தில் கதாநாயகனின் தந்தை நாகேஷ் சாரோட தீவிர ரசிகர். அதனால் தன்னுடைய தியேட்டருக்கு அவருடைய பெயரையே வைச்சதும் இல்லாமல், தன்னுடைய மகனுக்கும் அதே பேரைதான் சூட்டியிருப்பாரு. இந்நிலையில் தியேட்டரை விற்க வேண்டிய சூழல் வருது. அதை நாகேஷ் பாத்திரம் எப்படி எதிர்கொண்டு ஜெயித்தது, என்பதைத்தான் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கேன். 'நாகேஷ் திரையரங்கம்' எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும்!"
 
தனது தாய் இறந்தபோதும், படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்துக் கொடுத்தாராமே நடிகர் ஆரி?
 
"உண்மைதான். படப்பிடிப்புக்காக வெளியே போயிருந்தபோது, இரண்டு பேருக்குமே எதிரெதிர் அறைதான்  போட்டிருந்தாங்க. அன்னிக்கு அதிகாலை 3 மணி வரைக்கும் டிஸ்கஷன் நடந்துக்கிட்டு இருந்தது. அதற்குப் பிறகுதான் எல்லோருமே தூங்கப் போனோம். திடீரென்று என்னுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
 
'ஆஹா, விடிந்துவிட்டது போல. படப்பிடிப்புக்கு தயாராகணும்'னு நினைச்சிக்கிட்டு அவசரமாக எழுந்தேன். ஆனால், வெளியில் ஆரி சோகமாக நின்னுக்கிட்டு இருந்தாரு. இன்னும் விடியவே ஆரம்பிக்கலைன்னு பிறகுதான் தெரிந்தது. அவர் விஷயத்தை சொன்னதும் நான் ஷாக் ஆயிட்டேன்.
 
ஏன்னா, அன்றைக்குதான் படத்தோட கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது. பைட் சீக்வென்ஸ் என்பதால் எல்லாமே டபுள் கால்ஷீட். ஆனா, "இந்த உலகத்துல அம்மாவுக்கு ஈடு எதுவும் கிடையாது. அதனால உடனே நீங்க கிளம்புங்க..."னு சொன்னேன். தயாரிப்பாளரும் சம்மதம் சொன்னாரு. ஆனா, ஆரி ஊருக்கு கிளம்பவில்லை, ''நடிகனாகணும்னுதான் வந்தேன். அதற்குத்தான் அம்மாவும் ஆசைப்பட்டாங்க. இப்போ, ஷுட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு போனா, என்னோட அம்மா ஆத்மா சாந்தி அடையாது...!" என்று சொன்னாரு. அதன்படியே படபிடிப்பில் முழு ஈடுபாட்டோடு நடிச்சு, கொடுத்துட்டுதான் ஊருக்கு கிளம்பிப்போனாரு. அப்படியொரு நடிகர் எனக்கு கிடைத்ததுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்!"
 
படத்தின் நாயகி ஆஷ்னா சவேரி நடிப்பு பேசப்படுமா?
 
"ஏற்கனவே அவங்க நடித்த படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அடுத்தபடியாக அவங்களுக்குதான் ஸ்கோப் அதிகம். லுக், பெர்பார்மென்ஸிலும் வெரைட்டி காட்டியிருக்காங்க. ஆஷ்னாவுக்கு பேரு வாங்கிக் கொடுக்கிற படமாக ‘நாகேஷ் திரையரங்கம்’ இருக்கும்னு உறுதியாக சொல்லலாம்!"
 
ஹாரர் படத்தில் என்ன ஸ்பெஷல்?
 
"ஹாரர் மூவிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு. ஹாலிவுட்டுல எல்லாம் பேமிலியாக சேர்ந்து ஹாரர் படம் பார்க்க போவாங்க. அவங்க ஏன் குடும்பத்தோடு போறாங்கன்னா, அந்த மாதிரியான படங்கள் பார்க்கும்போது திடீர் திடீரென்று திகில் நிறைந்த காட்சிகள் பார்க்க நேரிடும். அப்போது அவர்களுடைய இதயம் வேகமாக இயங்க ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். அதனால் ஹார்ட் அட்டாக் வருவது தவிர்க்கப்படும். அப்படி வருஷத்துக்கு இரண்டு ஹாரர் படத்தையாவது குடும்பத்தோடு பார்த்துடுவாங்க. மற்ற ஜானர்களுக்கு இல்லாத ஸ்பெஷல் ஹாரருக்குதான். அப்படியானதொரு உணர்வு உங்களுக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை பார்க்க வருகிறவங்களுக்கும் ஏற்படும். அதற்கு நான் கியாரண்டி!"
 
டீசரை ரஜினி வெளியிட்டாரே?
 
"இந்தப் படத்தோட கதையை கேட்டுட்டு யாருமே நிராகரிக்கல. சின்ன ஆர்ட்டிஸ்ட்டுல இருந்து பெரிய ஆர்ட்டிஸ்ட் வரைக்கும் அது மாறல. அப்படிதான் நடிகை லதா மேடம் கதை கேட்டுட்டு, நடிச்சு கொடுத்தாங்க. பிறகு, படத்தோட டீசரை ரெடி பண்ணிட்டு, அவங்ககிட்ட போய் போட்டு காட்டினேன். "ரொம்ப நல்லா வந்திருக்கே..."னு பாராட்டினாங்க. இந்த டீசரை ரஜினி சார் வெளியிட்டா நல்லாயிருக்கும்னு அவங்ககிட்டே சொன்னோம். உடனே சாருக்கிட்டே பேசினாங்க. அவரும் ஓ.கே. சொல்லிட்டாரு. எங்க டீமுக்கு தலை காலே புரியல. டீசரை ரஜினி வெளியிட்டது கடவுளோட விருப்பம்!”சந்தோஷம் முகத்தில் கொப்பளிக்க ஷார்ப்பாக முடித்தார் இசாக்! 

- கிராபியென் ப்ளாக்
 
 
 
 
 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles