அட்லி மை ப்ரெண்ட்!   - நடிகர் ஷ்ரவன்  

Friday, June 30, 2017

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் தொடங்கி கோலிவுட் நட்சத்திரம் மாதவன் வரை சினிமா கேரியருக்கான விசிட்டிங் கார்டு சின்னத்திரை தான். சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பெரிய ஸ்டார்கள் கூட பிக் நிகழ்ச்சிகளுக்காக சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்துவதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியாக விரைவில் பிக் ஸ்கீரினில் இடம் பிடிக்க உள்ளார் நடிகர் ஷ்ரவன்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ தொடரில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். சினிமாவுக்காக கனடாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பறந்து வந்திருக்கிறார். ‘பாகுபலி’ வில்லன், ராணா சாயலில் இருப்பது ஷ்ரவனின் ப்ளஸ்! 
 
வங்கி மேலாளராக பணியாற்றியவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டபோது, “ நான் கல்லூரியில படிக்கும்பொழுது பகுதி நேரமாக, ஜெட் ஏர்வேஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போ ஒரு திரைப்பட இயக்குநர் என்னைப் பார்த்து ‘நீங்க சினிமாவுல நடிக்கலாமே’ன்னு சொன்னாரு. அந்த வயசுக்கே உரிய வேகம், என்னை முயற்சி செய்து பார்க்கத் தூண்டிச்சு. மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர்ன்னு சினிமாவை நோக்கி என்னோட பயணத்தை தொடங்கினேன்.
 
அந்தச் சமயத்துல இயக்குநர் அட்லியும் நானும் நல்ல நண்பர்கள். அவரது கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களை குறும்படம் இயக்கச் சொல்லி இருந்தார்கள். அவரும் அதற்காக ஒரு கதையை ரெடி பண்ணிட்டு ‘மாக்கியான்’ என்ற ஒரு குறும்படத்தை இயக்கினார். அதில் எனக்குதான் முக்கியமான பாத்திரம் வழங்கப்பட்டது. நான் ஒரு ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டியாக நடிச்சிருந்தேன். 
 
இந்தக் குறும்படத்தை எடுக்குறதுக்கு ஏழு மாசம் எடுத்துகிட்டாரு. அது காலேஜ் புராஜெக்ட் தானே ன்னு விளையாட்டா எடுக்காம, திரைப்படம் போல மெனக்கெட்டு வேலைப் பார்த்தாரு. நிறைய புதுப்புது விஷயங்களை அப்போவே அவர் யோசித்து, தன்னோட படத்துல சோதனை செஞ்சு பிரம்மாண்டமாகவே எடுத்தாரு. அது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவே இருந்தது. அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன் அட்லி, சினிமாவை நேசிக்கும்  ஒரு கடுமையான உழைப்பாளி!
 
என் படிப்பு முடிஞ்சதும், வேலை நிமித்தமாக  நான் கனடா நாட்டுக்கு, போனேன். அங்கேயும் அந்த நாட்டில் எடுக்கப்பட்ட குறும்படத்துல நடிச்சேன். அது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்துச்சு. நான் திரைப்படத்தை விட்டு விலகினாலும், அது என்னை விடவேயில்லை. அதனால, வெள்ளித்திரையில் ஏதாவது சாதிச்சே ஆகணும்னு, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துட்டேன்.  முயற்சி மேல எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கேன். இப்போ சில ப்ராஜெக்டுகள் பேசிட்டு இருக்கேன். விரைவில் அறிவிப்பு வரும்!” - நம்பிக்கையோடு முடித்தார் ஷ்ரவன். அவரது கனவு பலிக்கட்டும்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles