நான் ஒரு கமர்ஷியல் ஹீரோயின்! நடிகை ஹன்சிகா 

Thursday, February 16, 2017

தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டமான கதாநாயகி நடிகை ஹன்சிகா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போகன்', 2017ம் ஆண்டின் தரமான திரைப்படங்களில் ஒன்றாகக் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். அந்த மகிழ்ச்சி ஹன்சிகாவிடம் தொற்றியிருக்கிறது. ஹன்சிகா என்றாலே அழகான குண்டு கன்னங்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இப்பொழுது அவர் சைஸ் ’0’ ஆகிவிட்டார். ’என்ன ஹன்சிகா இப்படி இளைச்சிட்டீங்களே’ என்றவாறே, அவரிடம் பேசத் தொடங்கினோம்.

‘போகன்’ திரைப்படம் பற்றி..?

“நான் இதுவரையில் படிக்காத, பார்க்காத கதை தான் ‘போகன்'. என்னோட கேரியர்ல இது ரொம்ப ஸ்பெஷலான படம். இந்த தயாரிப்பாளரோட, இது எனக்கு முதல் படம், இயக்குனருடனான இரண்டாவது படம், ‘ஜெயம்' ரவியோடு மூன்றாவது படம், ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜனுடன் நான்காவது படம்,  அதோட இமான் இசையில் இது எனக்கு ஐந்தாவது படம். இப்படிப் பல விஷயங்களை ‘போகன்' படத்தோட தொடர்புபடுத்தி கொண்டாடிட்டு இருக்கேன்.”

 

‘ஜெயம்’ ரவி, அரவிந்த்சாமி பற்றி..?

“திறமையான, அடக்கமான மனிதர் ‘ஜெயம்’ ரவி. கிட்டத்தட்ட ஐந்தாறு வருஷமாக எனக்கு ரவியைத் தெரியும். ஆனாலும், பல வருஷமா நட்பாகப் பழகியவராகவே இருந்து வருகிறார். அவர் குடும்பத்துல இருக்குற எல்லோரும், என்கிட்டே நல்லபடியா நட்பு பாராட்டுவாங்க.

அரவிந்த் சாமியோட இதுதான் எனக்கு முதல் படம். அவர்கிட்ட ஏதோ ஒரு கவர்ந்திழுக்குற அழகு இருக்கு. இந்த இரண்டு ஸ்மார்ட் நடிகர்களோட பணியாற்றியது ரொம்ப மகிழ்ச்சி.”

 

இயக்குனர் லக்‌ஷ்மன் குறித்து..?

“ஒரு விஷயத்தை லக்‌ஷ்மன் செயல்படுத்துற விதமே, அவரு மேல நம்பிக்கை ஏற்படக் காரணமாக அமைஞ்சிடும். கதையை எங்ககிட்டே சொல்லிட்டு, அவரு மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காருங்கிறதையும் தெளிவுபடுத்திடுவாரு. நாம அதை உள்வாங்கிட்டு சுதந்திரமாக பெர்பார்ம் செய்வோம். இந்த மாதிரியான அப்ரோச்சை, நான் ஆரோக்கியமா உணர்றேன். அதனாலதான், அவரோட இயக்கத்துல இரண்டாவது முறையாக நடிக்கிறேன்.”

 

பிரபுதேவா என்றொரு இயக்குனர், தயாரிப்பாளர். இரண்டையும் ஒப்பிட்டுக் கூற முடியுமா?

“தமிழ் சினிமாவுக்கு புது வரவாக இருக்கும்பொழுது, பிரபுதேவா இயக்கத்துல நடிச்சேன். ரொம்ப கண்டிப்பான இயக்குனர், நிறையா கத்துக்கிட்டேன். 

தயாரிப்பாளரா சொல்லணும்னா, அற்புதமான மனிதர். எந்த வேலைகள்லயும் அவரது அனாவசியமான தலையீடுகள் இருக்காது. ‘ஹன்சிகா நம்ம பொண்ணு’ன்னு என்னை ரொம்பவே ஊக்குவிப்பாரு. பிரபுதேவா தயாரிப்புல நடிச்சது, ரொம்பவே பெருமையான விஷயம்.”

 

நடிகை என்றால் ஒல்லியான உடல்வாகு அவசியமா? நீங்கள் திடீரென்று உடல் இளைத்ததன் காரணம் என்ன?

“இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்றதுன்னே தெரியல. நான் சினிமாவுக்கு வந்த புதுசுல நல்ல குண்டாக இருந்தேன். ஒரு நடிகை இவ்ளோ பருமனாக இருந்தால் நல்லா இருக்காதுன்னு சொன்னாங்க. இப்போ நான் உடல் இளைச்சதும், ”என்னங்க இப்படி ஒல்லியாகிட்டீங்க, நல்லாவே இல்ல”ன்னு சொல்லுறாங்க. பெண்களைப் பொறுத்தவரைக்கும், அவங்களோட பதினைந்து வயதுல ரொம்ப ஒல்லியான உடற்கட்டோட இருப்பாங்க அல்லது நல்ல பப்ளியா இருப்பாங்க. இதை நாம விமர்சிக்க முடியாது. ஆரோக்கியமாக இருப்பதுதான் ரொம்ப முக்கியமான விஷயம். பருமனாக இருக்கோமா அல்லது ஒல்லியா இருக்கோமாங்கிறது எல்லாம் இரண்டாம்பட்சமான விஷயம்.”

 

கமர்ஷியல் ரோல், கேரக்டர் ரோல் இரண்டில் உங்களுக்குப் பொருத்தமானது எது? 

“என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோயினா அடையாளப்படுத்திக்கவே விரும்புறேன். பேய் கேரக்டரோ அல்லது பப்ளி கேரக்டரோ, எதுவாக இருந்தாலும் என்னோட படம் பெரும்பான்மையான மக்களுக்குப் போய்ச்சேரணும். தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான நஷ்டங்களும் ஏற்படுத்தாமல் பைசா வசூலாகணும். அவ்ளோதான்.”

 

விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

“விமர்சனங்களை எப்போதும் பாசிட்டிவாகத்தான் பார்க்குறேன். ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். என் நடிப்புல ஏதாவது தவறு இருந்தா, அதைச் சரி செய்யணும்னு சொன்னா, அதை நல்லவிதமா எடுத்துக்குவேன். அந்தத் தவறு அடுத்தடுத்த படங்கள்ல நடக்காமல் இருக்கப் பார்த்துக்கறேன், அதோட கடினமாகவும் உழைப்பேன். என்னோட படங்கள் நல்லா இருக்குன்னு சொல்றவங்களுக்கு நன்றி சொல்லிட்டு, இன்னும் நல்லா பெர்பார்ம் செய்ய முயற்சி எடுப்பேன்.”

 

உங்கள் அழகின் இரகசியம்?

“என் மேக்கப்மேன் உங்கள் கண் முன்னாடிதான் இருக்காங்க, நீங்களே கேட்டுக்கோங்க. என்னோட சரும பராமரிப்புக்காக ரொம்ப மெனக்கெடறது இல்லை. ஒரு நடிகையாக இருக்கிறதனால மட்டும், ’நீங்க இதைச் செய்யுங்க, அதைச் செய்யுங்க’ன்னு சொல்லவே முடியாது. ஒவ்வொருத்தரோட உடலமைப்பும் ஓவ்வொரு மாதிரி இருக்கும். நீங்க ஒரு நல்ல டாக்டர்கிட்ட போய் கேட்டுகிறதுதான் நல்லது. ஆனால் ஒண்ணு மட்டும் சொல்லுவேன், நிறையா தண்ணீர் குடிங்க.”

 

பிட்னஸ் எவ்வளவு முக்கியம்?

“பிட்னஸ் எல்லோருக்கும் ரொம்பவே முக்கியம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க யோகா, ஜிம் பயிற்சிகள் இப்படி ஏதாவது ஒண்ணு செஞ்சுட்டே இருங்க. இதெல்லாம் முடியலேன்னாலும், பிடித்தமான விளையாட்டை தொடர்ந்து விளையாடுறதை வழக்கமா வச்சுக்கோங்க.”

 

சமூக சேவை செய்யும் எண்ணம் எப்படித் தோன்றியது?

“இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்ததுன்னே தெரியல. சின்னப்பெண்ணாக இருக்கும் பொழுது, என்னோட பிறந்தநாள் எல்லாவற்றையும் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துலதான் கொண்டாடுவேன். கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைக்காமல் எல்லாமே கொடுத்திருக்கார். அதை எல்லார் கூடவும் பகிர்ந்துக்கணும்னு ஆசைப்பட்டேன்; அதைத்தான் செஞ்சேன், எதுவும் திட்டமிடலை. அதேபோல, எதிர்காலத்துக்காகவும் எந்தத் திட்டமும் வச்சுக்கல, இதே மாதிரி தொடர்ந்து செயல்படணும்னு ஆசைப்படறேன்.”

 

நீங்கள் விரும்பும் கனவு கதாபாத்திரம்..!?

“அந்த மாதிரி எதுவும் நான் வரையறை செய்துக்கலை. ஒரு இளவரசியா நடிக்கணுமா, ‘புலி' படத்துல அப்படி நடிச்சிட்டேன். அதோட நிறுத்திக்க முடியாது இல்லையா?! என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகைன்னா இந்த மாதிரிதான் நடிப்பேன்னு எதுவும் இருக்கக்கூடாது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதைச் சவாலாக எடுத்துக்கிட்டு நல்லா நடிக்கணும்” என்று கூறியவர், அடுத்து வரப்போகும் படங்கள் பற்றி மட்டும் இப்போது பேசமாட்டேன் என்று கப்சிப் ஆனார். ஹன்ஸ், நீங்க எப்பவுமே ரொம்ப விவரமான ஆளு தான்..!!

- பவித்ரா​

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles