மாணவர்கள் அரசியலுக்குள் வர முடியாது! -  நடிகர் ஆரி 

Friday, April 28, 2017

தமிழ் சினிமாவில் இப்போது நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், அந்த நட்சத்திரங்களில் பிரகாசமாக ஜொலிப்பவை விரல்விட்டு எண்ணுமளவுக்கு இருக்கிறது. காரணம், படத்தில் நடித்தோமா, துட்டு பார்த்தோமா என்று இருப்பவர்களே அதிகம். இதில் விதிவிலக்காக, ஒரு சில நடிகர்களே சமூக மாற்றத்திற்காக தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

இதனால் விளையும் எதையும் எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் நடிகர் ஆரி. 'நெடுஞ்சாலை ', 'மாயா ' உள்ளிட்ட படங்களின் வழியே பரவலாக அறியப்பட்டவர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் இறுதிவரை நின்று போராடியவர். அதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கிறார். அவரிடம் உரையாடியபோது, 

நீங்கள் நடிகரா, சமூக ஆர்வலரா? 

"என்னுடைய தொழில் நடிப்பு. அதனால் எனக்கு நடிகன்னு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு. ஆனால், அடிப்படையில் நான் ஒரு சமூக ஆர்வலர். எல்லா மனுஷனுக்குள்ளேயும் ஒரு சமூக ஆர்வலர் இருந்துகிட்டேதான் இருக்கான். உதாரணத்துக்கு சொல்லணும்னா, தெருவில குப்பை கிடக்குது. அதை எடுத்து போடணும்கிறது அடிப்படையான எண்ணம். ஆனால் நம்ம நாட்டுலதான், குப்பை போடுறவங்களை உயர்வாகவும், குப்பை அள்ளுகிற தொழிலாளிகளைத் தாழ்வாகவும் பார்க்கும் ஒரு அவலம் இருக்கிறது. இந்த எண்ணம் மாறணும். அதாவது ஏற்றத்தாழ்வை ஒதுக்கி வச்சிட்டு, நம்மள நாமே சுத்தமாக வச்சுக்கணும் என்கிற எண்ணம் வரணும். என்னைக் கேட்டீங்கன்னா, இப்போ மெதுவாக சமூக மாற்றம் நிகழ்ந்துட்டு தான் இருக்கு. 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இன்றைக்கு இளைஞர்களிடம் விழிப்புணர்வு பிறந்திருக்கு. தொலைந்து போயிருந்த சமூக சேவகன் இப்போ திரும்பி வெளியே வந்துட்டான். இந்த ஆரோக்கியமான விஷயம் எனக்கு மகிழ்ச்சியளிக்குது!. உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கணும்னு ஆசைப் படறேன். சேவை செய்யணும் என்கிற விஷயம் குறைஞ்சுகிட்டே வருது. அதை நாம் எப்படி மீட்கப் போகிறோம் என்று, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேவசகாயம் ஐயா கிட்டே கேட்டதற்கு, “சேவை செய்யணும் என்கிற எண்ணம் குறைஞ்சுடுச்சு. எல்லாரும் தலைவன் ஆகணும் என்கிற எண்ணம் மேலோங்கிடுச்சு.  தலைவனாகும் தகுதியான இடம் நீ சேவை செய்து கொண்டேயிரு. உன்னை ஒரு நாள் அவன் தலைவனாக்குவான்.” என்று ரொம்ப எளிமையான ஒரு தீர்வை சொன்னார். இது எங்க எல்லாரையும் சிந்திக்க வைத்தது.

சேவை செய்யும் மனப்பான்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் விதைக்க வேண்டும். பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை கற்றுத் தர வேண்டும். உங்கள் குழந்தை அறிவாளியாகணும்னு மட்டுமே நினைக்காமல் அவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்று போதனை செய்யணும்" என்று சமூக அக்கறையுடன் வேண்டுகோள் விடுத்தவரிடம், தொடர்ந்து  மாணவர்கள் அரசியலுக்கு ஏன் வர முடியாது? என்று சொல்கிறீர்களே, ஏன் என சொல்ல முடியுமா? என்று கேட்டதற்கு, “நான் மறுபடியும் சொல்றேன், மாணவர்கள் அரசியலுக்கு வர முடியாது. இப்படி சொன்னா ஷாக் ஆகிறீங்க இல்லையா? ஆனால் வரக் கூடாதுன்னு சொல்லவில்லை. அதை நீங்க கவனிக்கணும். 

நீங்க பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்கும் பொழுது, மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு பதில் சொல்லி ஆகணும். அதனால, படிக்கிற நாட்களில் மாணவர்கள் அரசியலைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கணும்னு சொல்றேன். அப்படி படித்து முடித்ததும் உங்களுடைய எதிர்காலம் என்ன என்பது உங்களுக்கு தெரிய வரும். நீங்க எந்தப் பாதையில் நடக்கணும்ங்கிற தெளிவும் கிடைச்சிருக்கும். அந்த நேரத்துல அரசியல் தான் உங்களுக்கு சரின்னா, நீங்க அதையே உங்க கேரியராக எடுத்துக் கொள்ளலாம். உங்களோட பெற்றோர்களுக்கும் உங்கள் மேல நம்பிக்கை வரும். நீங்கள் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டு வரும் பக்குவத்தையும் அடைந்திருப்பீர்கள்!” என்றார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் பிரச்சினை, வங்கிக் கொள்ளை சம்பந்தமாகவும் பேசியுள்ளார் ஆரி. சில கேள்விகளுக்கு தடாலடியாகவும் பதில் அளித்துள்ளார். வரும் இதழ்களில் அவற்றை வாசகர்கள் படிக்கலாம்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles