ஆன்மாக்களுக்கு இடையே பேதம் இல்லை! உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர் 

Thursday, April 13, 2017

இன்றைய நவீன சமூகத்தில் ஆன்மிகம் என்றாலே ஒருவித சலிப்பு, பெரும்பாலானோரிடையே காணப்படுகிறது. அதேபோல, சம்ஸ்கிருத மொழியைக் கேட்டாலே மனசுக்குள் ஒருவித வெறுப்பும் மேலிடுகிறது. இதெல்லாம் ஏன் என்ற கேள்வியும் நம் எல்லோரையும் துருவிக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன? இவை எல்லாவற்றுக்கும் தீர்க்கமாக பதிலளித்தார் உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர். 

தொழில்நுட்ப வல்லுனரான நீங்கள் உபன்யாசத்திற்குள் நுழைந்ததன்  அவசியம் என்ன?  

“முதன்மையான காரணம், ஆச்சார்யார்களோட ஆசீர்வாதம் தான். பிட்ஸ் பிலானியில படிச்சிட்டு இருக்கும் பொழுது, நான் ஸ்லோகம் சொல்வதைக் கேட்ட,  என்னோட துணை வேந்தர் மறைந்த  வெங்கடேஷ்வரர் அவர்கள், "உன்னோட உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு. நீ ஏன், ஒரு உபன்யாசம் கொடுக்கக் கூடாது?"ன்னு கேட்டார். எங்க வீட்ல பரம்பரையாக யாருமே உபன்யாசத்துல இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சரி! கொடுத்துதான் பார்ப்போமேன்னு தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, மும்பையில ஒரு கோவில்ல நான் கொடுத்த உபன்யாசத்தை எதேச்சையாக, விஜய் டிவி யில பார்த்திருக்காங்க. அவங்க எனக்கு ஒரு நிகழ்ச்சியை ஒதுக்கினாங்க. அதுக்கு அப்புறம் நான் தொடர்ந்து உபன்யாசம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்துல நான் பாத்துட்டு இருந்த வேலையை உதறிட்டு, முழுக்க உபன்யாசகராக மாறிட்டேன்!”

 

ஏற்கனவே, உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன், உ.வே. அனந்த பத்மநாபாச்சார் போன்றோர் இருக்க, அவர்களிடமிருந்து, உங்களை எவ்வாறு வேறுபடுத்தி காட்டுகிறீர்கள்?

“நீங்க இங்கே குறிப்பிட்ட எல்லோரும், சனாதன தர்மத்துக்காக, சம்பிரதாயத்துக்காக தங்களையே அர்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். என்னுடைய உபன்யாசம் எப்படி வேறுபட்டு இருக்கு? ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரம் வருடங்களுக்கு, முன் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லும்பொழுது, அவர் பேசிய மாதிரி சொன்னால் யாருக்குமே புரியாது. தற்காலச் சூழலுக்கு ஏற்ற மாதிரி சொன்னால் அவர்களுக்கும், ஆர்வம் வரும். குழந்தைகளும் கேட்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்!”

 

ஆன்மீக தத்துவங்களை பெருந்திரளான மக்களுக்கு எப்படி கொண்டு செல்கிறீர்கள்?

“விளம்பரம் மூலமாகத்தான். இங்கு இன்னாரின் உபன்யாசம் நடக்கிறது என்று விளம்பரப்படுத்தினால் தான், மக்களுக்குத் தெரியும். அவர்களும், வருவார்கள். அது மட்டுமில்லாமல், எந்த முறையில் விளம்பர படுத்துறோம் என்பதும் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, இராமாயண உபன்யாசம் என்று சொல்வதை விட; "ராமனுக்கு பிடித்தவன் பரதனா? அல்லது இலக்குவானா?" போன்ற கேள்விகளை எழுப்பி விளம்பரப் படுத்தினால், 'எனக்கும் இதே சந்தேகம் தான் இருக்கு, இவர் என்ன சொல்றார்?'ன்னு போய் கேட்போம்னு, சில பேர் வர வாய்ப்பு இருக்கு.

இவை எல்லாவற்றையும் விட, தொழில்நுட்பம் மிக அவசியம். நேரில் வந்து, உபன்யாசம் கேட்க முடியாதவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஆயிரம் வருடத்திற்கு முன் இராமானுஜரிடம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால் இன்று உலகம் முழுக்க அவர் சம்பிரதாயமே இருந்திருக்கும்!”

 

இராமானுஜர் காலத்திற்கு பிறகு இஸ்லாமியர் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்பிற்கு பின், சம்பிரதாயத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

“சமத்துவத்தை அழுத்தமாக மக்களுக்கு போதித்தவர் பகவத் ஸ்ரீமத் இராமானுஜர். எறும்பில் ஆரம்பித்து மனிதன் வரை எல்லோருக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவில் இருப்பது இறைவன். ஆன்மாவைப் பொறுத்தவரை எந்த பேதமுமில்லை. பார்ப்பவரின் கண்கள் தான் மனிதனை வேறுபடுத்துகிறது. இவர் கருப்பு, இவள் மெலிந்தவள் போன்ற பேதங்களை மனிதனின் அறிவே பிரித்து பார்க்கிறது.

சம்பிரதாய மாற்றம் நிகழ்ந்தது, ஆங்கிலேயரின் படையெடுப்புக்குப் பிறகுதான். ஸ்பூன், ஃபோர்க், கண்ணாடி குவளைகள் போன்றவைகள் நம் வீட்டு சமயலறைக்குள் நுழைந்தது நூறு வருடத்திற்கு முன்னர்தான். அதே போல் வட இந்திய பெண்கள் முக்காடு அணிந்து கொள்வதும் இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்தான் என்பது அடியேனின் கருத்து!”

 

சமஸ்கிருத மொழியை பலரும் எதிர்ப்பதேன்?

“நான் மறுபடியும் சொல்றேன், நமக்குள்ளதான் பேதம் இருக்கே தவிர மொழிகளுக்குள்ளே இல்லை. சமஸ்கிருதம் இயல்பாகவே தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளோட கலந்து இருக்கு. சமஸ்கிருதம் ஒரு ப்ராச்சீன மொழி. அது பிறந்த தினத்தை நாம சொல்லவே முடியாது. அந்த மொழியோட வடிவமைப்பை வியக்காத உலக நாடுகளே இல்லை.  இது நம் பாரத நாட்டுல பிறந்த மொழி தானே. நாம தான் பெருமைப்படணும். நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்றதும், பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. அதேபோல், ஒரு மொழியை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள், அந்த மொழியால் அவர்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டார்களா? என்று ஆராய்ந்து, பகை வளர்க்காமல் அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்!.” என்று சமூக அக்கறையோடு பேசி, முடித்தார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏனோ, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது நமக்கு. உபன்யாசகர்களின் சிறப்பே அதுதானோ?!.

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles