ஆணவக் கொலைகள் நடக்கும் சமூகத்தில்  லெஸ்பியனாக வாழ்வது சிரமம்!  - இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்

Thursday, April 13, 2017

"சாவு யாருக்கு வந்தாலும் வலி தான். யார் ஒடுக்கப்பட்டாலும் அதற்கு எதிரான குரல் ஓங்க வேண்டும் தான். அப்படியாக, 'டஸ்க்', 'லில்லி' போன்ற படங்கள் எனக்குள்ள நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கு! யார் எதிர்த்தாலும் நாங்கள் தொடர்ந்து படங்கள், நாடகங்கள், பாடல்னு இயங்கிட்டே தான் இருப்போம்" என்று தடாலடியாகப் பேசுகிறார்,  ஆவணப் பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்.

‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ எனும் படம் மூலமாக, சர்வதேச கவனம் ஈர்த்தவரிடம், கொஞ்சம் கதைத்தோம்!

‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப்படம் குறித்து?

“தற்கொலைகளை தடுக்கணும் என்ற நோக்கத்தோடு தான், இந்த ஆவணப்படத்தை எடுத்தேன். நான் தொடர்ச்சியாக எல்.ஜி.பி.டி. சம்பந்தமான விஷயங்களை ஆராய்ச்சி செய்து, கட்டுரைகளாக எழுதிட்டு வர்றேன். கடந்த வருடம், தமிழ்நாட்டுல, அதுவும் சென்னையில 17 ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (அகனன்) இறந்திருக்காங்க. பல பேருக்கு அந்தச் செய்தி போய்ச் சேரவேயில்லை. புள்ளிவிவரத்தின் படி, உலகத்திலேயே, அதிகமாக தற்கொலையில் ஈடுபடற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கு!

குறிப்பாக, தென்னிந்தியாவில் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக்கறாங்க. இதுக்கு காரணம், அவர்களை எல்லோரும் ஒதுக்கறாங்க. அதோட, அவங்களுக்கு நிகழும் பிரச்னைகள், உணர்வுகளை யாருமே புரிஞ்சுக்கிறது கிடையாது. அதை உணர்த்த வேண்டிய நோக்கத்துலதான் இந்த ஆவணப்படத்தை எடுத்தேன்!”

இந்த ஆவணப்படம் மூலம் தெரிந்து கொண்ட அறிய தகவல்கள் ஏதேனும் உண்டா?

“லெஸ்பியன் பற்றிய ஆவணப் படம்ங்கிறதால, தமிழ்நாட்டுல உள்ள பல  லெஸ்பியன்களை நான் சந்திச்சேன். சமூகத்துல அவர்களோட உணர்வுகளை யாரும் புரிஞ்சுக்காததால, தங்களின் பெற்றோர்கள் கிட்டே பேசக் கூட, அவர்கள் தயங்குறாங்க. அப்படியிருக்கும்பொழுது, என்கிட்டே எப்படி சொல்லுவாங்க?. 'லெஸ்பியன்கள் தங்களோட அடையாளத்தை கூட வெளியே சொல்ல மாட்டார்கள்' போன்ற பல விஷயங்களை இந்த ஆவணப்படத்துல பதிவு செஞ்சிருக்கேன்!”

'லெஸ்பியன்' என்கிற கான்செப்ட் தமிழ்நாட்டுக்கு புதுசா?

“மனித இனம் தோன்றிய காலம் தொட்டு 'கே' (அகனன்), 'லெஸ்பியன்' (அகனள்) என்ற பிரிவினரும் இருந்திருக்கிறார்கள். பெண்ணும் பெண்ணும் மற்றும் ஆணும் ஆணும் சேர்ந்து முத்தமிடுவது போன்ற  சிற்பங்கள், நம் புராதான கோயில்களில் இடம்பெற்றிருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் இது தமிழ்நாட்டுக்கு புதுசில்லை!”

உங்களுடைய ஆவணப்படத்தின் குழு பற்றி?

“லெஸ்பியன் பற்றி ஊடகத்துலேயே தெளிவான ஒரு பார்வை இல்லேன்னு தான் சொல்லணும். இப்படி ஒரு கருவை வச்சு நான் ஆவணப்படம் எடுக்கப் போறேன்னு சொன்னதும், என்னை எல்லோரும் அருவருப்போட தான் பார்த்தாங்க. நான் இதைப் பற்றி இயக்குநர் ரஞ்சித் கிட்டே சொன்னேன். அவரு, ‘நீலம் புரொடக்ஷன்' மூலமாக, பல சமூகம் சார்ந்த கான்செப்டை ஊக்குவிக்கறாங்க. என்னோட இந்த ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப் படத்தையும் தயாரிக்கிறேன்னு சொன்னாரு. இன்னிக்கி ரஞ்சித் இல்லேன்னா, இந்தப் படம் இல்ல. அதோட, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், லெஸ்பியன் ஆந்தெம் எழுதிய குட்டி ரேவதி, பாடல் வரிகளை கொடுத்த எழுத்தாளர் தமயந்தி, இவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!.”

எதிர்கால திட்டம்?

“படைப்பு பொறுத்தவரை, பெரிய படம், சிறிய படம்னு எதுவுமே இல்லை. எனக்கு எல்லாமே ஒரே மாதிரிதான். சமூக அக்கறையோடு, என் மனசுக்கு பிடித்த படங்களை கடைசி வரைக்கும் எடுத்துக்கிட்டுதான் இருப்பேன்" என்றார். இவர் இயக்கியுள்ள 'லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை தட்டி, வந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles