கேரவேனை தவிர்த்தார் நயன்தாரா - இயக்குநர் ந.கோபி நயினார்

Friday, April 28, 2017

தமிழ் சினிமாவில் அரிதாக சமூக அக்கறையுள்ள படங்களை எடுக்கும் இயக்குநர்கள் உருவாகிறார்கள். மறைந்த இயக்குநர் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா, சேரன், எஸ்.பி.ஜனநாதன், பா.ரஞ்சித் உள்ளிட்டோரை அந்த வரிசையில் நாம் நிறுத்தலாம்.

அதன் பாதையில் தற்போது அடையாளம் காணப்பட்டிருப்பவர் ந.கோபி நயினார். 'அறம்' படத்தின் மூலமாக கோலிவுட்டுக்குள் டைரக்டராக புரமோஷன் ஆகியிருப்பவர். இந்தப் படத்தின் நாயகி நயன்தாரா, தயாரிப்பாளரும் அவரே தான் என்பது கூடுதல் சிறப்பு!

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, "என்னுடைய பத்தொன்பது வயதிலேயே 'வணக்கத்துக்கு உரியவர்கள்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றேன். என்னுடைய தயாரிப்பாளர் வேலூரில் இருந்தார். அவரைப் பார்க்க அடிக்கடி போவேன். அப்படி போகும்போதுதான் சில சமூக பிரச்சினைகளை நான் பார்க்க நேரிட்டது. பிறகு, படம் இயக்குவதை நிறுத்திவிட்டு, களப்பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். சில வருடங்களுக்குப் பிறகு களத்தில் நின்று கற்றுக்கொண்டதை கலையாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதன் நீண்ட பயணம்தான் இப்போது உங்கள் முன்னால் ஒரு இயக்குநராக உட்கார்ந்து விவாதிக்க வைத்திருக்கிறது.

நயன்தாராவை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் இயக்குநர் சற்குணம்தான். அவரின் எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசரான சௌந்தரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு, சௌந்தரின் மூலமாக 'அறம்' படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு கிடைத்தனர். இந்தப் படத்தின் கதையை நயன்தாரா மேடத்திடம் சொன்ன ஐந்தாவது நிமிடமே இந்தக் கதையை தான்தான் தயாரிக்க வேண்டுமென்று 
அவர் முடிவு பண்ணிவிட்டார். அதற்குப் பிறகு, அந்தக் கதை, திரைப்படமாவதற்கான எல்லா விஷயங்கள் குறித்தும், என்னோடு விவாதித்தார். அப்படித்தான் இந்த முழுப் படமும் உருவானது. 

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஆப்பனூரில் தான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்தின் கதைக்கு கடும் வறட்சி நிலவும் ஒரு ஊரே தேவைப்பட்டது. ஏனெனில் இந்தக் கதை தண்ணீரோடு சம்பந்தப்பட்டது. அதுமட்டுமல்ல; தண்ணீர் என்பது பல்வேறு சமூக பிரச்னைகளோடு இன்று சம்பந்தப்பட்டிருக்கு. தண்ணீர் என்பது வெறும் தாகம் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமன்று. அது ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. அதேபோல அந்த நாட்டில் வாழும் மனிதர்களின் உறவுகளோடும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தோடும் சம்பந்தப்பட்டதுதான் தண்ணீர். இங்குள்ள அனைத்து உயிர்களின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது அது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை வெறும் விவசாயத்தோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. தண்ணீர் என்பது வெள்ளை ரத்தம். அது இல்லாமல் ஒரு அடி கூட நாம் எடுத்து வைக்க முடியாது. ஆனால், நாம் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

'அறம்' படத்தின் படப்பிடிப்பின்போது நிறைய பேர் மயக்கம் போட்டு விழுவார்கள். அவர்களை ஒருபக்கம் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போய் மருத்துவம் பார்ப்போம். ஒருமுறை நானே மயக்கம் போட்டு விழுந்திருக்கிறேன். உண்மையில் இந்தப் படத்தில் நான் நன்றி சொல்ல விரும்புவது துணை நடிகர், நடிகைகளுக்குதான். சுட்டெரிக்கும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் கட் சொன்னாலும் கூட அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அப்படியே அதே இடத்தில் நின்று கொண்டிருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. கிட்டத்தட்ட அவர்கள் ஒரு விவசாயி மாதிரியே இருந்தார்கள். படத்தை முடித்த பிறகு, துணை நடிகர்கள் மீது எனக்கு பெரிய மரியாதையே ஏற்பட்டது.

படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் நயன்தாரா மேடம், ஒரு உதவி இயக்குநர் போல வேலைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். கேரவேனுக்கு கூட போக மாட்டார். அதை முழுவதுமாக தவிர்த்துவிடுவார். தான் ஒரு பெரிய ஸ்டார் என்பதற்கான எந்த அலங்காரமும் இன்றி, எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பார். இந்தப் படத்தில் அவருடைய பாத்திரம் அனைவராலும் பேசப்படும். தன் பாத்திரத்தை முழுவதுமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். படத்தை பார்த்தால் அதை நீங்களே கண்டுகொள்வீர்கள்!" என்று சிரித்துக்கொண்டே விடைபெற்றார் இயக்குநர் ந.கோபி நயினார்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles