என் பேச்சுதான் எனக்கு சோறு போடுது! சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ!

Thursday, April 13, 2017

பெண்கள் வலிமையானவர்கள். இன்று எல்லாத்துறைகளிலும் அவர்கள் தங்களது முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களது பங்கும் முக்கியமானது. மென்பொருள் துறை மட்டுமின்றி, இலக்கியம், சினிமா, மீடியாக்களிலும் அவர்கள் அதிவேகமாக தங்களின் இருப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் மேடைப் பேச்சுகளில் புகழ் பெற்றவர் சுமதிஸ்ரீ.

ஆன்மிகம்,  இலக்கியம்,  என முழு நேர சொற்பொழிவாளராகவும் வலம் வருபவர். 

"என்னுடைய வாழ்க்கையில் முழு நேர ஆன்மிக சொற்பொழிவாளராக இருப்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆனால், பள்ளி நாட்களில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டு, வெற்றிப்பெற்றிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தில் யாரும் பேச்சாளர்களாக இருந்தில்லை. ஒரு பெண் மேடையேறி பேசுகிறாள் என்பதை என்னுடைய உறவினர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

திருச்சியில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, கலவரம் ஒன்று நடந்தது. இதனால், பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை விட்டுவிட்டனர். ஆனால், எனக்கு ரிக்ஷா மாலை தான் வரும் என்பதால், பள்ளியில் உள்ள ஆசிரியர் அறையிலேயே உட்கார்ந்துவிட்டேன். அப்போது அங்கே இருந்த பாரதியார் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அறைக்குள் வந்த ஆசிரியை ஒருவர் என்ன படித்துக்கொண்டிருந்தாய் என்று என்னிடம் கேட்டதும், "அச்சமில்லை... அச்சமில்லை... என்பது இல்லையே" என்று கூறி, நான் படித்த முழு கட்டுரையையும் அவர்களிடம் ஒப்பித்துவிட்டேன். 

இதை சற்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகு, அவர் என்னை பாராட்டிவிட்டு, நாளை வழிப்பாட்டு கூட்டத்தில் இதை பேசு என்று சொன்னார். அப்படியாக, என்னுடைய ஒன்பது வயதில் பள்ளியில்தான் என்னுடைய முதல் பேச்சு அரங்கேறியது. பிறகு, பல பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டேன். அவற்றில் வெற்றியும் பெற்றேன். அவற்றில் பல பிரபல தினசரிகளில் செய்தியாகவும் வெளிவந்துள்ளது!. அதேபோல, கல்லூரியில் படிக்கும்போதும் பல்கலைக் கழகங்களுக்கு எல்லாம் சென்று பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறேன்!. ஆனால், என்னுடைய பேச்சே, என்னுடைய வாழ்க்கையாகும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை!

பிறகு, கல்லூரி பேராசிரியை ஆகத்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. அப்போது, காதல் திருமணம் செய்துகொண்டேன். இதனால் உறவினர்களிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனது. மேடைப் பேச்சுக்காக என்னுடைய வேலையை உதறினேன். நிறைய வாய்ப்புகள் வந்தது. அதனால் தான் இப்போது முழு நேர பேச்சாளராக உள்ளேன். என்னுடைய கணவரின் முழு ஒத்துழைப்பால் அது சாத்தியமாகி உள்ளது. என் மீது விழுந்துள்ள வெளிச்சத்துக்கு காரணமும் அதுதான். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றி இருக்கிறேன். முன்பு என்னுடைய உறவினர்கள், "உனக்கு பேச்சா சோறு போடப் போகிறது?" என்று கேட்பார்கள். இன்று, எனக்கு சோறு போடுவது பேச்சுதான்!. மாதத்தில் ஒரு இருபது நாட்கள் நான் மேடைகளில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்!

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஸாம்பியா, உகாண்டாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் பேசியிருக்கிறேன். இங்கே சொற்பொழிவுக்காக அழைக்கப்பெற்ற முதல் பெண் பேச்சாளர் நான்தான். இதை நான் பெருமையாக கருதுகிறேன்!." என்று, அதே உற்சாகத்தோடு முடித்தார் சுமதிஸ்ரீ!. கடல்தாண்டியும் பெண்கள் பறந்து சென்று, தங்கள் ஆளுமையை பறைசாற்றுவது வரவேற்கத்தக்கதே!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles