கதைக்கேற்ற ஒளிப்பதிவே எப்போதும் தேவை! - ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா

Friday, March 31, 2017

தமிழ் சினிமாவின் நம்பிக்கையளிக்கும் ஒளிப்பதிவாளர்களில் பி.கே.வர்மா குறிப்பிடத்தகுந்தவர். கோலிவுட்டில் 'அட்டகத்தி', 'குக்கூ' படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். தொடர்ச்சியாக அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருப்பவர். கவித்துமான ஒளியமைப்பு இவரது ஸ்பெஷாலிட்டி. பரபரப்பான படப்பிடிப்பு இடைவேளைக்கு இடையே, அவரை மடக்கி பேசினோம்!

சினிமாவில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளராவோம் என நினைத்ததுண்டா?

"எங்கம்மா ரொம்ப அழகாக கதை சொல்வாங்க. அதுதான் முதலில் என்னை ஈர்த்தது. ஒரு அரை மணி நேரத்தில் அவங்க கதை சொல்றதை கேட்டுக்கிட்டே நானும் என் தம்பியும் தூங்கிவிடுவோம். எங்கம்மா சொன்ன கதைகள்தான் என்னுடைய அக மனசுக்குள்ளே பதிஞ்சுப்போயிருக்குன்னு நினைக்கிறேன். பிறகு, பனிரெண்டாம் வகுப்பு எல்லாம் படிக்கும்போது சுற்றி, நண்பர்களை உட்கார வைச்சுக்கிட்டு பாடுவேன். அதனால, டீச்சரிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். இப்படியாக எனக்கு ஃபிலிம் மேக்கிங் மேல, ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. 

ஸ்கூல் முடிச்சவுடனே என்னோட பயணம் சினிமாதான்னு முடிவு பண்ணி, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்துட்டேன். பி.சி.ஸ்ரீராம் சாரோட ஒளிப்பதிவில் வெளியான 'அக்னி நட்சத்திரம்' படமும், சந்தோஷ் சிவனின் கேமிரா கண்களில் உருவான 'ரோஜா' படமும் என்னை ரொம்பவும் பாதிச்சுது. அப்படியான தாக்கங்களின் வழியே தான் ஒரு ஒளிப்பதிவாளரா மாறினேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எப்போதும் நினைத்ததில்லை!"

 

உங்களுடைய ஒளிப்பதிவில் 'அட்டக்கத்தி' பரவலாக பேசப்பட்டதே?

"கதைக்கு உதவக்கூடிய ஒளிப்பதிவைத்தான் எப்பவுமே நான் நம்புறேன். போட்டோகிராஃபியில் அழகியல் இருக்கணும்; ஆனால் எல்லா நேரங்களிலும் அது அவசியம் இல்லை. ஒரு விஷயத்தை ரஃப்பாகத்தான் காட்டணும்னா, அப்படியேதான் காட்டணும். அதை அழகாக காட்டினால், அதிலுள்ள ஜீவன் போய்டும். அந்தவகையில் 'அட்டக்கத்தி' என் மனசுக்கு நெருக்கமான படம். இயக்குநர் பா.ரஞ்சித் அந்தப் படத்தினுடைய கதையை என்னிடம் சொன்னபோது, ஒரு வார்த்தையை மட்டும் அடிக்கடி சொல்வாரு. அது, "தலித் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யணும்!" என்பதுதான். அந்தப் படத்தின் கதைக்கு அழகியலுக்கு முக்கியவத்தும் கொடுத்திருந்தா, அதன் யதார்த்தம் பார்வையாளர்களிடம் போய் சேர்ந்திருக்காது!"

 

'குக்கூ' தனித்துவமாக தெரிந்ததின் ரகசியம் என்ன?

"ஒளிப்பதிவில் எனக்கொரு அடையாளம் கிடைச்சிருக்குன்னா அதற்கு முக்கிய காரணம், நான் பணிபுரிந்த இயக்குநர்களுடைய கதைகள் தான். அந்தக் கதைகளை சிதைக்காத ஒளிப்பதிவை, அந்தப் படங்களில் கையாண்டிருக்கிறேன். எப்போதுமே ஒளிப்பதிவு, ஸ்கிரிப்ட்டை மீறிவிடக்கூடாதுன்னு நினைப்பேன். 'குக்கூ' கதையை ராஜுமுருகன் சார் சொல்லும்போது, 'பொதுவாக கண் தெரியாதவன்னா இந்த உலகம் அவனை பரிதாபமாக பார்க்கும். அப்படியாக இந்தப் படம் இருக்கக் கூடாது" என்றார். அதனால், படத்தை ரொம்ப கலர்புல்லாக இல்லாமலும், அதே சமயத்தில் அதிகமாக பேண்டஸி கலக்காமலும், இவை இரண்டுக்கும் இடையிலான ஒளிப்பதிவை கொண்டு வந்தோம். இப்படித்தான் ஒவ்வொரு கதைக்குமான ட்ரீட்மெண்ட் சினிமாட்டோகிராஃபியில் மாறி வரும்!"

 

உங்களுடைய ஒளிப்பதிவில் அறிமுகமான இயக்குநர்கள், பெரிய அளவில் வளர்ந்துள்ளார்களே?

"நான் ஒளிப்பதிவு செய்கிற பெரும்பான்மையான படங்களின் இயக்குநர்கள் புதுமுகங்கள்தான். பா.ரஞ்சித் சார் அவ்வளவு பெரிய இடத்தை தொட்டு இருக்காருன்னா அது அவருடைய கடுமையான உழைப்புதான். ராஜுமுருகனுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து உருவாகியிருக்குன்னா அவருடைய திறமைதான். அப்படியான இயக்குநர்களின் படங்களில் நான் பணியாற்றியிருக்கிறேன் என்பது என்னுடைய அதிர்ஷ்டம்தான்!"

 

உங்களுக்கு என்று விதிகள் ஏதேனும் உண்டா?

"நல்ல கதைகளுக்கு மட்டும் தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிவேன். ஏன்னா, ஒளியை உணர்வுபூர்வமாக நேசிக்கிறேன். அதனால நூறு சதவீதம், அப்படியான படங்களின் இயக்குநர்களோடு தான் கைகோர்ப்பேன். 'அட்டக்கத்தி' படத்தின் கதையை படிக்கும்போது அதில் ஒரு வாழ்க்கை இருந்தது. திரைக்கதையை படித்துவிட்டு, ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, "அம்மா... என் ஜட்டியை காணோம்..." என்று தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான அறிமுகக் காட்சியை வைக்க பெரிய தைரியம் வேண்டும். இதை கமர்ஷியல் சினிமாவில் எந்த ஹீரோவுக்கும் வைக்க மாட்டார்கள். ஆக, அப்படியான இயக்குநர்களோடு பணிபுரியவே ஆசை!" 

 

தற்போது நீங்கள் ஒளிப்பதிவு செய்துள்ள படங்கள் பற்றி?

"தம்பி ராமையாவின் மகன் நடித்திருக்கும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே', தினேஷ் நடித்துள்ள 'உள்குத்து', இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ள 'கூட்டத்தில் ஒருத்தன்' ஆகிய மூன்று படங்களும் தயார் நிலையில் இருக்கு. விரைவில் இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்னு எதிர்பார்க்கிறேன். இது மட்டுமின்றி, 'சர்வர் சுந்தரம்', 'அடங்காதே' படங்களும் பட்டியலில் இருக்கு!"- என்றவருக்கு, ஷாட் ரெடியாகவே விடைபெற்று சென்றார்.

- கிராபியென் ப்ளாக்

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles