சாத்தான் ‘சைத்தான்’ ஆன கதை! - இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘ஓபன் டாக்’!!

Friday, September 30, 2016

“படத்தின் கதாநாயகனே ஒரு இசையமைப்பாளரா இருக்கறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்தான். ஏன்னா, ஒரு கதையை எழுதி, அந்தக் கதாபாத்திரத்தை படம்பிடித்து, படத்தொகுப்பு செஞ்சிட்டு, அடுத்து இசையமைக்கும்போது அந்தப் பாத்திரத்துல நடித்தவரே அதைச் செய்யும்போது, அதோட வேல்யூ இன்னும் மேலே போயிடுது. ‘சைத்தான்’ படத்துல அதைப் பார்க்கலாம்!” என்று சரவெடியாகப் பேசத் தொடங்குகிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ‘சைத்தான்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் தடம்பதிக்க வரும் புதியவர்.

முதல் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு முந்திய கணம் முதல் இந்தக் கணம் வரை, அனைத்தையும் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசினார் பிரதீப்.

 

“இயக்குநர் வெற்றிமாறனிடம், ‘ஆடுகளம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற டாகுமெண்டரி தொடரை இயக்கினேன். விளிம்பு நிலை மனிதர்களின் ஒருநாள் வாழ்க்கையை, அந்தத் தொடரில் பதிவு செய்தேன். பொம்மலாட்டம், சூத்ரதாரி, மீனவர்கள், பட்டு நெசவாளிகள், வர்மக்கலை என நிறைய தலைப்புகளை எடுத்துக்கிட்டு, ‘டாகுபிக்ஷனா’க அந்தத் தொடரை உருவாக்கினேன். அப்போதான், எடிட்டர் விஜயசாரதி சார், “கதை ஏதாவது ரெடி பண்ணியிருக்கியா?”ன்னு கேட்டாரு. அப்போ, ஒரு கதையை எழுதி முடிச்சிருந்தேன். அதைத்தான் சாரதி சார்ட்ட சொன்னேன். “கதை நல்லாயிருக்கு”ன்னு சொன்னாரு. அப்புறம் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, “விஜய் ஆண்டனிகிட்டே கதை சொல்லிட்டேன். அவருக்கும் பிடிச்சிருக்கு, போய்ப்பாரு”ன்னு சொல்லி ஷாக் கொடுத்தாரு. 

 

விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்தேன். அது வழக்கமான சந்திப்பாதான் இருந்துச்சு. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு, அவரே போன் பண்ணினார். கதை சொல்ல கூப்பிட்டார். அவருடைய அலுவலகத்துக்குப்போய் ரெண்டு மணி நேரத்துக்கு மேலே கதை சொன்னேன். ‘சைத்தான்’ கதையைச் சொல்ல ஆரம்பிச்சதும், அப்படியே அதுல கரைஞ்சு போயிட்டாரு. இதுவரைக்கும் இப்படி யாரும் என்கிட்ட ஆர்வமா, ஈடுபாடா கதையைக் கேட்டதில்லை. நான் சிரிச்சா சிரிப்பாரு.. நான் கோபப்பட்டா, அவரும் கோபப்பட்டாரு. நான் கதையைச் சொல்லி முடிச்சதும், “முழுப்படத்தையும் மனசுக்குள்ளே ஓட்டிப் பார்த்துட்டேன். படத்தை ஆரம்பிச்சுடுலாம்”னு சொன்னார். அப்படித்தான் இந்தப் படம் டேக்ஆஃப் ஆச்சு. உண்மையில், இதுக்குப் பின்னாடி இருந்த விஜயசாரதி சாருக்குதான் நன்றி சொல்லணும்!” என்று படம் தொடங்கியவிதத்தை விவரித்தார். மெதுவாக, படத்தின் தலைப்பு ‘சைத்தான்’ என்றானதன் பின்னணியைப் பேசினார். 

 

”பட வேலைகள் ஆரம்பிச்சதுக்குப் பிறகு, “என்ன டைட்டில் வச்சிருக்கீங்க?”ன்னு விஜய் ஆண்டனி சார் கேட்டாரு. “யோசிச்சிட்டு இருக்கேன் சார். சரியான தலைப்பு கிடைக்கலை”ன்னு சொன்னேன். “டைட்டில் வச்சா அழுத்தமா வைக்கணும். அது அப்படியே, ரசிகர்கள் மத்தியில் பதிஞ்சு போயிடணும். அந்தமாதிரி டைட்டில் புடிங்க”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. படத்தலைப்புக்கு அவர் ரொம்பவே மெனக்கெடுவார் என்பதெல்லாம், அதுக்குப் பின்னாடிதான் தெரியும். ஒருநாள் கூப்பிட்டு, ”சாத்தான் எப்படியிருக்கு”ன்னு கேட்டாரு. ’நல்லாயிருக்கு, ஆனா, ’சைத்தான்’னு வச்சா சரியாக இருக்கும்”ன்னு சொன்னேன். அவரும் ஓ.கே. சொல்லிட்டாரு. அப்படித்தான் படத்தின் தலைப்பு அமைஞ்சது!

 

‘சைத்தான்’ படம் ஒரு முழுமையான கமர்ஷியல் படம். படத்தோட கதை ரொம்ப அழுத்தமா இருக்கும். சுவாரஸ்யமான திரைக்கதைல அதைச் சொல்றோம். அடுத்து என்ன நடக்கும்? என்பதை ரசிகர்கள் கண்டுபிடிக்காத மாதிரி ஸ்கீரின்பிளே அமைக்கப்பட்டிருக்கு. தினேஷ் என்கிற பாத்திரத்துல, படத்துல விஜய் ஆண்டனி சார் வர்றாரு. முழுக்கதையும், அந்த கேரக்டரோட பாயின்ட் ஆப் வியூவிலதான் நடக்கும். இந்தப் படத்தை சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லரா கொண்டு வந்திருக்கோம்” என்றவாறே, சிறிது இடைவெளி விட்டார் பிரதீப். அவரிடம், ‘சைத்தான் டிரெய்லரில் நாயகியைக் காணோமே?’ என்றோம். ஒரு புன்னைகையைச் சிந்திவிட்டு, ஒரு இயக்குனரின் பார்வையில் அதற்கான காரணத்தை விளக்கினார்.

 

”இந்தப் படத்துக்கு இன்னொரு பிளஸ் படத்தின் நாயகி அருந்ததி நாயர். படப்பிடிப்பு தொடங்கியபோது இருந்த அவரோட நடிப்பு, முடியும்போது வேற லெவலுக்கு போயிடுச்சு. சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டாகவே மாறிட்டாங்க. ஆனா, அவங்களோட பாத்திரத்தை சஸ்பென்ஸா வைத்திருக்கோம். அதனாலதான் டிரைலரில் கூட அவங்க முகத்தைக் காட்டலை!

 

படத்தோட ஸ்பெஷாலிட்டின்னு பார்த்தீங்கன்னா, விஜய் ஆண்டனி சாரோட ‘லுக்’குதான். ‘சைத்தான்’ படத்துல பல்வேறு முகத்தோற்றத்தை அவருக்குப் பொருத்தியிருக்கோம். ஆடியன்சுக்கும் படம் பிடிக்கும்னு நம்புறோம். படத்தோட கதைக்கு ஏற்ற மாதிரி பாடல்கள் அமைக்கணும்னுதான், கம்போஸிங்கிலேயே உட்கார்ந்தோம். படத்துக்கு என்ன தேவைப்படுமோ, அந்த மாதிரியான பாடல்கள் வந்திருக்கு. விஜய் ஆண்டனி சாரோட பேவரைட் “மக்காயலா..” பாடல் மாதிரியெல்லாம், இந்தப் படத்துல வைக்க முடியாது. கதைக்குள்ளே பாடலைத் திணிக்காம, அதன்போக்கிலேயே பாடல்களை அமைத்திருப்பதுதான் ‘சைத்தான்’ படத்தோட சிறப்பு!”என்று முடித்துக்கொண்டார். 

 

வித்தியாசமான டைட்டில், களம், பாத்திரங்கள், உருவாக்கம் என்று புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றனர் இன்றைய இளம் இயக்குனர்கள். அந்தவகையில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் ‘சைத்தான்’ படமும் அப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருமென்று நம்புவோம்!

- கிராபியென் ப்ளாக் 

 

மேலும் படிக்க:
சிம்பு என் அண்ணா! உணர்ச்சிவசப்படும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
நமீதா, ஷகீலா கூட நடிக்க முடியலை! மலையாள நடிகர் ஹிரேஷ் வருத்தம்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles