பெட்ரூம் சீன்னா, ஒரு மாதிரி இருக்கும்! வெட்கப்படும் ’டப்பிங்’ ஐஸ்வர்யா!!

Thursday, September 15, 2016

"நான் நடிக்கத் தயார்" என்று எல்லா இயக்குனர்களுக்கும் செல்லமாக வேண்டுகோள் விடுக்கிறார் ஐஸ்வர்யா. லக்ஷ்மன் ஸ்ருதி குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் இவர், தமிழ் சினிமாவின் பிஸியான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ’நடிக்கிறதுக்கு வீட்ல க்ரீன் சிக்னல் கிடைச்சா போதும், உடனே மூட்டை முடிச்சைக் கட்டிட்டு வந்துடுவேன். யாராவது எங்க வீட்ல கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்களேன்’ என்று கொஞ்சலாய் கெஞ்சுகிறார் இவர்.

‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் பூனம் பஜ்வா, ‘சவுகார்பேட்டை’யில்  லட்சுமி ராய் என்று அரை டஜன் நாயகிகள் அழகாக வாயசைப்பதற்குக் காரணம் ஐஸ்வர்யாதான். 

 

நீங்கள் டப்பிங் துறைக்குள் கால் பதித்தது எப்படி ?

“எனக்கு சின்ன வயசுலேருந்து நடிப்பு மேல தனி ஈர்ப்பு. அதனால, எப்படியாவது சினிமாவுல நடிக்கணும்னு குறிக்கோளோட இருந்தேன். ஆனால், எங்க வீட்ல சினிமாவுல நடிக்க அனுமதி கொடுக்கலை. ஒருநாள், எங்க பாட்டியோட ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ராதாரவி அங்கிளைப் பார்த்தேன். அவர்கிட்ட, என்னோட ஆர்வத்தைச் சொன்னேன். அவர்தான், ’நடிக்கிறதைவிட, இப்போதைக்கு டப்பிங் பேசு. அப்படியே ஏதாவது நூலைப் பிடிச்சுட்டு நடிக்க வந்துடு’ன்னு ஆலோசனை சொன்னார். அப்படித்தான் இதில் நுழைந்தேன்”

 

உங்களுடைய முதல் படம் எது?

“ ‘காஞ்சனா’தான் என்னோட முதல் படம்னு, எல்லோருமே நினைச்சிட்டு இருக்காங்க. ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டா, நான் வெளியே தெரிஞ்சது என்னவோ ‘காஞ்சனா’ படத்துனாலதான். ஆனால் நான் டப்பிங் பேசிய  முதல் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப் படத்துல, நான் பார்வதிக்கு பின்னணி பேசினேன். அதுக்காக வாய்ஸ் டெஸ்டுக்குப் போன அன்னிக்கி, கமல் டப்பிங் தியேட்டர்ல இருந்தார். அவரைப் பார்த்ததும், எனக்கு உதறல் எடுத்துடுச்சு. சும்மா ஜாலியா பேசினேன். சின்ன சின்ன திருத்தங்கள் செஞ்சார், மதியமே பார்வதிக்குப் பின்ணணி பேச வந்துடுங்கன்னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இரண்டாவது படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதுல பூனம் பாஜ்வாக்கு டப்பிங் கொடுத்தேன். மூன்றாவது படம்தான் ‘காஞ்சனா’.

‘காஞ்சனா’ படத்துக்கு ஆடிஷன் கூப்பிட்டு, என்னோட வாய்சை டெஸ்ட் பண்ணாங்க. வழக்கமா ரெண்டு நாள்ல ரிசல்ட் சொல்லிடுவாங்க. ஆனா, அவங்ககிட்ட இருந்து போன் எதுவும் வரலைங்கறதால நானும் விட்டுட்டேன். பத்து நாள் கழிச்சு போன் பண்ணி, டப்பிங் பேசக் கூப்பிட்டாங்க. அதுக்கு அப்புறம், அவங்க என்னை ’ட்ரில்’ வாங்குனது வேற விஷயம். 

 

இனி வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு பின்னணி பேசியிருக்கீங்க?

“ ‘சிங்கம் 3’ படத்துக்காக ஸ்ருதிஹாசன், ‘கவலை வேண்டாம்’ படத்துல இன்னொரு ஸ்ருதி, ‘இரு முகன்’ல நித்யா மேனனுக்கு தமிழ், தெலுங்குன்னு இரு மொழிகள்ல பேசியிருக்கேன். அப்புறம், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்துல ப்ரனிதா சுபாஷ், ‘திரி’ல ஸ்வாதி, இப்போ ‘பொட்டு’ படத்துல இனியாவுக்கு டப்பிங் பண்ணிட்டு இருக்கேன்.” 

 

‘பொட்டு’ படத்துல பேய்க்கு டப்பிங் கொடுத்திருக்கீங்களா? 

“இயக்குனர் வடிவுடையான் டைரக்ஷன்ல, இது எனக்கு இரண்டாவது படம். ‘சவுக்கார்பேட்டை’ல லட்சுமி ராய்க்கு டப் பண்ணேன். ஒரே இயக்குனர், இரண்டு தடவை டப்பிங் பேசக் கூப்பிடமாட்டாங்க. வேற பிரெஷ் வாய்ஸை முயற்சி பண்ணுவாங்க. இதுவும் பேய் படம்தான். மலைவாழ் மக்களோட ஸ்லாங்கை, இந்தப் படத்துல பேசியிருக்கேன். இயக்குனர் மூலமா புது ஸ்லாங் கத்துக்கிட்டு பேசினது, ஒரு சவால் மற்றும் ஸ்பெஷல்னு சொல்லலாம்.

 

ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கு வசன உச்சரிப்பு எவ்வளவு முக்கியம்?

“இப்போ இருக்குற சூழல்ல, ஹீரோயினுக்கான டயலாக் ரொம்ப கம்மியாகிடுச்சு. சிரிக்க வேண்டிய இடத்துல கூட, பிஜிஎம் போட்டுர்றாங்க. எங்களுக்கான அங்கீகாரம் ரொம்ப கம்மியாயிருக்குங்கிறதுல, எங்களுக்கு ரொம்ப வருத்தம். எங்களுக்கான ஸ்கோப் கிராமத்துப் படங்கள்தான். அப்படித்தான், நான் ‘கத்துக்குட்டி’ல பின்னணி பேசியிருக்கேன். இந்தப் படத்துல தஞ்சாவூர் ஸ்லாங் பேசுனது ஒரு சவால். அதுக்காக, இயக்குனர் சரவணனுக்கு என்னோட நன்றிகளை சொல்லிக்கிறேன்.”

 

டப்பிங் பேசும்போது, எந்த சீனுக்கு நிறைய டேக் எடுத்துப்பீங்க?

“ரொமான்ஸ் சீன்தான். பெட் ரூம் சீனுக்கு டப்பிங் பேசும்போது, என்னைச் சுற்றி பத்து பேர் இருந்தாங்கன்னா ஒரு மாதிரி இருக்கும்.”

 

சமீபகாலத்தில் கிடைத்த பாராட்டுகளில், உங்களால் மறக்கமுடியாதது எது?

”காஞ்சனா படம் தான். அந்தப் படத்துல, நான் நித்யா மேனனுக்காக பேசினேன். நித்யா மேனன் எல்லா படத்துலயும் சொந்தக் குரல்லதான் பேசுவாங்க. இந்தப் படத்துல, அவங்களால பேச முடியலை. அப்போ, அவங்க கொஞ்சம் பிசியா இருந்தாங்க. அதனால, எனக்கு அந்த கோல்டன் சான்ஸ் கிடைச்சது. படம் பார்த்துட்டு, நித்யா மேனன் என்ன ரொம்பப் பாராட்டியிருந்தாங்க. அதுக்கப்புறம்தான், என்னை எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சுது.”

 

உங்களோட அழகான குரலைத் தக்க வச்சுக்க என்ன பண்றீங்க? 

“டிப்ஸ் சொல்ல, நான் சரியான ஆளு இல்லைங்க. எனக்கு தினம் ஐஸ்க்ரீம் வேணும். நிறையா கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவேன். தண்ணீர் கூட, எனக்கு ஐஸ் வாட்டரா தான் வேணும். ஆனால் வீட்டுல அதிமதுரம், சுக்கு தண்ணி எல்லாம் குடிக்கச் சொல்லுவாங்க. அதனால, தயவுசெஞ்சு என்கிட்ட டிப்ஸ் கேக்காதீங்க.

ஆனால், ஹாரர் படத்துக்குப் பேச நல்ல திடம் வேணும். அதுல ரொம்ப கத்த வேண்டியிருக்கும். அதுக்காக, நான் யோகாவும் மூச்சுப்பயிற்சியும் செய்வேன். ஆனாலும், நான் ரொம்ப மெனக்கெட மாட்டேன். இருந்த இடத்துல இருந்தே மூச்சுப்பயிற்சி செஞ்சுப்பேன்.”

 

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், யாருடன் நடிக்க ஆசை?

“கமல் படத்துல ஓரமா நிக்குற ரோல் கிடைச்சாலும், நான் நடிக்கத் தயார். அப்புறம், அஜித்னா ரொம்பப் பிடிக்கும். அவர் படத்துல ஹீரோயினா இல்லைங்க, வேலைக்காரியா நடிக்க வாய்ப்பு கிடைச்சாலும் நான் நடிக்கத் தயார்.” தனது ஆசைகளைச் சொல்லிமுடித்ததும், பளீரென்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது ஐஸ்க்ரீம் சிரிப்பில் கரைந்தோம்.

 

மேலும் படிக்க:

இருமுகனில் ஏறுமுகம் கண்ட விக்ரம்! 

'ரெமோ'ண்டிக் லுக்கில் கலக்கும் சீனா கானா..!

ஆண்டவன் கட்டளை ‘பேப்பர் மேரேஜ்’ கதையா..!?

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles