ஹிட்சாக் படங்களை பார்த்து வளர்ந்தேன் - இயக்குநர் அறிவழகன்

Thursday, September 15, 2016

“சின்ன வயசுல இருந்தே எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவல்களைத் தொடர்ச்சியா படித்து வந்தேன். பிளஸ்டூவுக்குப் பிறகு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அதற்குப்பிறகு, கொஞ்ச நாட்கள் அவருடைய நாவல்களைப் படிக்க நேரமில்லாம போச்சு. ஆனாலும், அவருடைய நாவல்களின் பாத்திரங்கள் என்னைப் பாதிச்சது. மெடிக்கல் கிரைம் திரில்லர் வகை படம் எடுக்கணும்னு முடிவு பண்ணினதும், நேராகச் சென்று அவரைச் சந்தித்தேன்.

பத்து நாவல்களை தேர்வு செஞ்சு கொடுத்தார். அதில் ஒரு நாவலின் கருவை மையமாக வச்சுக்கிட்டுதான் ‘குற்றம் 23’ படத்தை எடுத்திருக்கேன்” என்று வெகு நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் அறிவழகன். ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ உள்ளிட்ட படங்களின் மூலமாகத் தமிழ் சினிமாவின் தரம் உயர்த்தியவர். ‘குற்றம் 23’ பற்றி, அவருடன் கொஞ்சம் உரையாடினோம்!

 

‘குற்றம் 23’ என்ற தலைப்பே ஈர்க்கிறதே?

“எனக்கு திரில்லர் படங்களை ரொம்பப் பிடிக்கும். சூப்பர் நேச்சுரல் திரில்லர் படம்தான் ‘ஈரம்’. அதேபோல எனக்கு ஒரு மெடிக்கல் பேஸ்டு திரில்லர் படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. கோலிவுட்டுல, அந்த வகையிலான படம் இதுக்கு முன்னாடி வந்தது கிடையாது. அதனால மருத்துவத்துறையை மையமாக வச்சிக்கிட்டு ஒரு திரைக்கதையை எழுதலாம்னு முடிவெடுத்தேன். மெடிக்கல் ஆக்ஷன் திரில்லர் ஸ்டோரி எழுதணும்னா, அதற்கு நிறைய ஹோம்வொர்க் பண்ணணும். சின்ன வயசுல இருந்தே எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் நாவல்களை விரும்பிப் படிப்பேன். அப்படிப் படிக்கும்போது ராஜேஷ் சாரோட ஒரு திரில்லர் நாவல் ரொம்ப பிடிச்சிருந்தது. அதுல இருந்த ஒரு கருவை எடுத்துக்கிட்டுதான் ‘குற்றம் 23’ படத்தின் கதையை எழுதினேன்.”

 

தொடர்ந்து த்ரில்லர் படங்களையே இயக்குவதேன்?

“என்னுடைய படங்களில் வரும் கதையின் நாயகன், எப்போதுமே எதையாவது ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்கிற மாதிரியான காட்சிகளை அமைச்சிருப்பேன். அப்படிப் பாத்திரங்களை அமைக்கும்போது, அவன் ஒரு சாதாரண மனிதனா இருந்தா எபெக்டிவா இருக்காது. அது ஆடியன்சுக்கும் பிடிக்காமல் போகும். அதனாலதான் ஹீரோ பாத்திரத்தை ஒரு போலீஸ் அதிகாரியாவோ அல்லது அதிகாரம் உள்ள ஒருத்தராவோ காட்ட வேண்டியிருக்கு. எனக்கு இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்சாக்கை ரொம்பப் பிடிக்கும். அவருடைய படங்களை அதிகமாகப் பார்த்து வளர்ந்தேன். அதனாலதானோ என்னவோ, நானும் திரில்லர் படங்களை தொடர்ச்சியாக இயக்குறேன்னு நினைக்கிறேன்.”

 

உங்களுடைய படங்களில் நடிக்கும்போது, நாயகர்கள் தனித்துத் தெரிகிறார்களே?

“என்னுடைய படங்களில் அழகியல் இருக்கிறமாதிரி பார்த்துப்பேன். ஒரு படத்தினுடைய வெற்றிக்கு நிறைய விஷயங்கள் தேவைப்படும். அதுல, படத்தை எப்படி நாம ஆடியன்சுக்கு கொடுக்கிறோம் என்பதும் பொருந்தும். என்னுடைய படங்களில் பிரசன்டேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். கேமரா வொர்க், பிராப்ஸ், காஸ்ட்யூம்ஸ், ஆர்ட்டிஸ்ட் மட்டும் இல்லை. நாம உருவாக்கிற ஒவ்வொண்ணுமே அழகியல் தன்மையோட இருக்கணும். என் படங்களோட நாயகனை ஸ்கீரின்ல பார்க்கும்போது, எனக்கு அவரைப் பிடிக்கும்னு எதிர்பார்ப்பேன். ஆதி, நகுல், அருள்நிதி, அருண்விஜய் என்று எல்லோரையுமே படத்துக்கான நாயகர்களாகத் தேர்வு செய்யும்போதே, இதுக்கு முன்னாடி அவங்க நடிச்ச படத்தில இருந்து முற்றிலும் வேறொரு லெவலுக்கு மாற்றுவதற்கான விஷயங்களைத் திட்டமிடுவேன். அதனாலதான் ஸ்கிரீன்ல அவங்க ஸ்பெஷலா தெரியுறாங்க!”

 

‘குற்றம் 23’ படத்தின் ஒரு காட்சிக்காக, ஐந்து மாதங்கள் வரை காத்திருந்தீர்களாமே?

“இந்தப் படத்தோட ஓபனிங் சீன்ல ஒரு தேவாலயம் வரும். அந்த தேவலாயத்தோட புகைப்படத்தை முதலில் பார்த்த உடனேயே பிடிச்சிடுச்சு. பிறகு, அந்த இடத்தை நேரில் போய் பார்த்தேன். நான் யோசித்து வைத்திருந்த காட்சிக்கு மிகவும் சரியானதா இருந்துச்சு. அந்த தேவாலயம் 150 ஆண்டுகள் பழமையானது. ரோம்ல இருக்கிற தேவாலயம் மாதிரியான கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்தியாவிலேயே இந்த ஒண்ணு மட்டும்தான் அப்படியான வடிவமைப்பில் இருக்கு. ஆரம்பத்துல அதில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கல. பிறகு, மற்ற காட்சிகளை எல்லாம் ஷூட் பண்ணினோம். கடைசியாத்தான் அந்த சர்ச் சீனை எடுத்தோம்!”

 

நாயகிகள் மகிமா நம்பியார், அபிநயா இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்களாமே?

“பிளே ஸ்கூல் டீச்சரா மகிமா வர்றாங்க. போலீஸ்கிட்டே கூட தைரியமா பேசுற, ரொம்ப போல்டான பொண்ணு. ஆடியன்சுக்கு மகிமா கேரக்டரை கண்டிப்பாகப் பிடிக்கும். பேமிலி பாண்டிங் உள்ள எமோஷனலான கேரக்டரா அபிநயாவை உருவாக்கியிருக்கேன். டிரைலர்ல பார்க்காத அபிநயாவோட மேக்ஸிமம் போர்ஷன் படத்துல இருக்கு. இரண்டு பேருமே எனக்கு திருப்தி தரும் வகையில் நடிச்சிருக்காங்க!”

நல்ல கதையோடு தொழில்நுட்பம் கைகோர்க்கும்போது, அற்புதமான சினிமா பிறக்கும். தனது படங்களுக்கான காட்சியமைப்பில் முக்கியத்துவம் கொடுக்கும் அறிவழகன், ‘குற்றம் 23’ பற்றி அதீத நம்பிக்கையுடன்  பேசினார். அவரது கனவு மெய்ப்படட்டும்!

 

மேலும் படிக்க:

'ரெமோ'ண்டிக் லுக்கில் கலக்கும் சீனா கானா..!

ஆண்டவன் கட்டளை ‘பேப்பர் மேரேஜ்’ கதையா..!?

இருமுகனில் ஏறுமுகம் கண்ட விக்ரம்! 

 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles