என்னோட கேரக்டரை, வி.பி. சீக்ரட்டா வச்சுக்கச் சொல்லியிருக்காரு! நடிகர் அர்விந்த் ஆகாஷ் 

Monday, October 31, 2016

“பத்து வருஷத்துக்கு அப்புறம் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுறோம். அதுவும், வெங்கட் பிரபுவோட சொந்த பேனர்ல.. பிளாக் டிக்கெட் கம்பெனி எங்க கம்பெனி மாதிரி. இதுல நாங்க எல்லா நண்பர்களும் ஒண்ணு கூடுறோம், அதுவும் இவ்ளோ வருஷம் கழிச்சு. இது ரீயூனியன் மாதிரின்னும் சொல்லலாம்” என்று பேசத் தொடங்குகிறார் நடிகர் அரவிந்த் ஆகாஷ். நன்றாக நடனம் ஆடத்தெரிந்த நடிகர் என்பதோடு, டைரக்‌ஷன் மீதும் ஈர்ப்பு கொண்டவர் என்பது இவரது கூடுதல் சிறப்பு. 

’சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்ல உங்க கேரக்டர் எப்படி வந்திருக்கு’ என்று கேட்டதும், யோசித்தவாறே பதிலளித்தார் அரவிந்த். “சென்னை 28 பார்ட் 1ஐ ஹிட்டாக்கினதே ரசிகர்கள்தான். பார்ட் 2, இன்னும் நிறைய நடிகர்களோட ஒரு விஷுவல் ட்ரீட்டா அமையும். என்னோட கேரக்டர், இதுல சஸ்பென்ஸ். படம் வந்த உடனே எல்லாரும் இதைப்பற்றி நிறையா பேசுவாங்க, நிறையா கேள்விகளும் கேட்பாங்க. அப்போ, அதைப்பத்தி நாம பேசலாம்” என்றவாறே அடுத்த கேள்விக்குத் தாவினார். அவரிடம், நமது கேள்விகளைத் தொடுத்தோம். 

 

சென்னை 28ல டூயட் இருந்தமாதிரி, இந்த பார்ட்ல ஏதாவது சமாச்சாரம் இருக்கா?

“அது சஸ்பென்ஸ்! படத்தை வந்து பாருங்க, நீங்களே தெரிஞ்சுப்பீங்க.”

 

இந்தப்படத்துல என்ன ஸ்பெஷல்?

பார்ட் ஒண்ணுல ஒர்க் பண்ண அதே டெக்னீஷியன்ஸ்தான், பார்ட் 2லயும் இருக்காங்க. இதுக்கு, நான் வெங்கட் பிரபுவைத்தான் காரணமா சொல்லுவேன். அவரு மேல எங்களுக்கு இருக்குற அபிமானம் தான், அவரோட திரும்பத்திரும்ப பணியாற்றச் சொல்லுது. அதனால, சென்னை 28 பார்ட் 2 ஒரு வெற்றிப்படமா இருக்கும்னு நம்புறோம். இதுக்கு மேல ஏதாவது பேசி, என்கிட்ட கதையை மட்டும் வாங்கிடலாம்னு நினைக்காதீங்க. அது சீக்ரெட். ” 

 

இந்தப் படத்துல, மனைவியால அதிகம் டார்ச்சர் ஆகுறது யாரு? 

“அதை டார்ச்சர்னு சொல்ல முடியாது. ஒரு விதமான பொஸஸிவ்னஸ்னுதான் சொல்லணும். கல்யாணம் ஆகிட்டாலே, பொண்டாடியா இல்ல நண்பனான்னு சாய்ஸ் வந்துடுது. பசங்க மாட்டிட்டு முழிக்குறாங்க. சின்ன வயசுலயிருந்து க்ளோஸா இருக்குறவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. மனைவி பேச்சையும் தட்ட முடியாது. கிரிக்கெட், நண்பர்கள்னு சுத்திகிட்டு இருந்தவங்களுக்குத் திருமணமாகி, ரெண்டு பக்கமும் அடிவாங்குறது எல்லா இடத்துலயும் நடக்குற ஒரு விஷயம். அந்த யதார்த்தம்தான் சென்னை 28 இன்னிங்ஸ் 2.”

 

சென்னை 28 பார்ட் 2 மாதிரியே, 1.5 எடுக்குற ஐடியாவும் இருக்குதுன்னு சொல்றாங்களே?

“அப்படியொரு விஷயம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும். ஆனா, அதுக்காக டைரக்டர் எங்களையெல்லாம் உடல் எடையைக் குறைச்சிட்டு வரச்சொல்லுவாரே. அது கொஞ்சம் கஷ்டமாச்சே. ஏன்னா, சென்னை 28 பார்ட் ஒண்ணுக்கும் பார்ட் டூவுக்கும் இடையில நடக்கிறதுதான், சென்னை 28 1.5ஆக இருக்க முடியும். அதனால, அதுக்கு ஏத்த மாதிரி உடம்பு இருக்கணும்.”

 

கடைசி நாள் படப்பிடிப்பை நினைக்கும்போது எப்படி இருக்கு?

“ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்ளோ நாள் ஒண்ணாவே இருந்துட்டு, இனிமே எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்கப் போய்டுவோம். சாதாரணமா, அஞ்சுல இருந்து ஆறு மணி நேரம் மீட் பண்ணலாம். ஆனால், நாங்க இருபத்தி நான்கு மணி நேரம் ஒண்ணாவே இருந்தோம். இதையெல்லாம் மிஸ் பண்ணுவோம். பிளாக் டிக்கெட், எங்க வெங்கட் கம்பெனிதான். அதனால, சென்னை 28 1.5 எடுக்கலேன்னாலும், எங்க எல்லாரையும் வச்சு கண்டிப்பா வேற ஒரு ப்ராஜெக்ட் பண்ணுவாரு. பண்ணித்தான் ஆகணும்.” அரவிந்த் ஆகாஷின் குரலில் செல்லமான மிரட்டல் தொனி தென்படுகிறது. இதுபோன்ற நண்பர்களைப் பெற்றிருப்பதுதான், இயக்குனர் வெங்கட்பிரபுவின் கூடுதல் பலம்.

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles