இப்போ வெளிநாடுகள்லயும் கிரிக்கெட் கமெண்ட்ரி பண்றேன்! ’சென்னை 28’ பெருமை பேசும் படவா கோபி

Monday, October 31, 2016

சென்னை 28 படம் வந்தபிறகு, தமிழ்நாட்டிலுள்ள எல்லா மைதானங்களும் கிரிக்கெட்டால் நிரம்பியது. டிவி சேனல்களில், கிரிக்கெட் வர்ணனை தமிழில் இடம்பெற ஆரம்பித்தது. சிறிய அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் கூட, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதற்குக் காரணம், லோக்கல் கிரிக்கெட்டை லைவ்வாகக் காட்டிய சென்னை 28 திரைப்படம் மற்றும் இந்தப்படத்தில் வர்ணனையாளராக நடித்த படவா கோபி.

சென்னை 28 பார்ட் ஒன்னில் நடித்தது போலவே, செகண்ட் இன்னிங்ஸிலும் கமெண்ட்ரி மழை பொழியப்போகிறார் இவர். இதுபற்றிக் கேட்டபோது, தனது அனுபவம் பற்றி லைவ் கமெண்ட்ரி தந்தார் படவா கோபி. 

 

சென்னை 28 பார்ட் 1ல் பணியாற்றிய அனுபவம்?

“நான் முதன்முதலாக அறிமுகமானது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் ‘பொய்' படத்துலதான். அது ரொம்ப நேர்த்தியான படம். படப்பிடிப்பும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா நடக்கும். அவ்ளோ பர்பெக்ஷன் இருக்குற படம். வியாபார ரீதியா பெருசா போகலேன்னாலும், இயக்குனர் சிகரம் படத்துல நடிச்சதுல நிறையா கத்துக்கிட்டேன். 

அதுக்கப்புறம் ‘சென்னை 28’ பார்ட் 1 ஸ்க்ரிப்டை வெங்கட் பிரபு ரெடி பண்ணிட்டு, என்கிட்டே வந்து சொன்னாரு. இந்தப் படத்துல நீங்க கிரிக்கெட் கமென்டேட்டரா நடிச்சீங்கன்னா நல்லா இருக்கும்னு சொன்னாரு. எனக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டு கிரிக்கெட். அந்த விளையாட்டை ஜாலியா விமர்சனம் செய்ற மாதிரி கேரக்டரை, வெங்கட் பிரபு சென்னை 28 பார்ட் 1 மூலமா கொடுத்திருக்காரு. 

அந்தப்படத்துல நடிக்கும்போது, டயலாக் டெலிவரியில முழு சுதந்திரம் கொடுத்தாரு வெங்கட். அப்படி நான் பேசுன வசனம்தான்,  ‘பந்தை அவர் பிடிக்கவில்லை! பந்துதான் அவரைப் பிடித்தது'. ஒரு தடவை நான் வெளியே போனபோது, சின்ன பையன் ஒருத்தன் அந்த வசனத்தை எனக்குப் பின்னாடியே பேசிட்டு வந்தான். இந்த வசனம் எல்லா கிரிக்கெட் க்ரவுண்டிலும் ரொம்ப பேமஸ். 

கிரிக்கெட்டை வெறித்தனமா நேசிக்கிற நாடு நம்ப இந்தியா. நம்ம நாட்டுல லோக்கலா விளையாடுற கிரிக்கெட் கேமை யாருமே இவ்ளோ மிகைப்படுத்தி காட்டியிருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்” என்று சென்னை 28 படத்தின் பெருமையைப் பேசிய படவா கோபி, அதனால் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களையும் பட்டியலிட்டார். 

”சென்னை 28 பார்ட் 1 முடிச்சதும், ஒரு கமென்டேட்டரா மக்கள்கிட்ட ’ரீச்’ ஆகிட்டேன். இன்னும் சொல்லப்போனால், கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டிகளுக்கு  சென்னை 28 ஸ்டைல்ல கமென்டரி கொடுக்கக் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அது மட்டுமில்லாம, தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகள்ல நடக்குற லோக்கல் ரெசிடன்ஷியல் கிரிக்கெட்டுக்கு கமென்டரி கொடுக்க அங்கே போனேன். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, எனக்கு எந்த ஒரு முன் அனுபவமும் இல்லைங்கறது முக்கியமான விஷயம். 

சென்னை 28 படத்துல வந்த கமெண்டரிதான், எனக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல வேலை கிடைக்க வாய்ப்பா அமைஞ்சது. ஒரு நாட்டுக்காக விளையாடாத, கிரிக்கெட்ல எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ஒருத்தனுக்கு எப்படி அவ்ளோ பெரிய வாய்ப்பு அமையும். நடந்து முடிஞ்ச இந்திய - வெஸ்ட் இண்டீஸ் மேட்ச், டிஎன்பிஎல் மேட்ச், அதுக்கு அப்புறம் வரப்போகிற மேட்ச்னு எல்லாமே அமையக் காரணம் நம்ம சென்னை 28 தான். 

இந்த எட்டு வருஷத்துல, நான் இத்தனை தூரம் வளர்ந்திருக்கேன். அதனால ஆடியன்ஸோட எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவங்களோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யணும், அதோட மேட்ச் பார்க்குற சுவாரசியத்தையும் கெடுக்கக்கூடாது. இதுக்கும், எனக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்காரு வெங்கட் பிரபு. எங்கேயுமே, அவர் என்னைக் கட்டுப்படுத்தலை. நான் என்னவெல்லாம் சொல்ல நினைச்சேனோ, அதைச் சொல்ல அனுமதிச்சாரு. 

இது ஒரு மிகச்சிறந்த டீம். இந்தப் படத்துல வேலை பார்த்தது ஒரு ரீயூனியன்னுதான் சொல்லணும். ஏழு அல்லது எட்டு வருஷம் கழிச்சு, உங்க நண்பர்களையெல்லாம் நீங்க எப்படி உற்சாகமா சந்திப்பீங்களோ, அப்படித்தான் இந்தப் படம் பண்ணும்போது எனக்கும் இருந்துச்சு. சென்னை 28 பார்ட் 2 கண்டிப்பா, சென்னை 28 பார்ட் 1யை விட சூப்பரா இருக்கும். அதுல எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்று பேசி முடித்தார் படவா கோபி. சொல்லி முடிக்கும்போது, அவரது பார்வையிலும் அந்த உறுதி தெரிந்தது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles