மிஸ்டர் அண்ட் மிஸஸ் வார்!  'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' பற்றிச் சொல்கிறார் அஜய் ராஜ்

Monday, October 31, 2016

"பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்துல இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆறு, ஏழு கேரவன் நிக்கும். எங்களுக்கே மூணு கேரவன் கொடுத்தாரு வி.பி. சார். ஆனா, நாங்க எல்லோரும் ஒரே கேரவனில் தான் இருந்தோம். ஆக்சுவலா அதை இப்போ சர்வீஸுக்கு கொடுத்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அப்படின்னா, எவ்வளவு லூட்டி அடிச்சிருப்போம்னு நீங்களே யோசிச்சுக்குங்க.." என்று எடுத்த எடுப்பிலேயே கலகலப்பாக ஆரம்பிக்கிறார் நடிகர் அஜய் ராஜ். செகண்ட் இன்னிங்ஸிலும் தன்னுடைய முத்திரியைப் பதித்திருப்பவரிடம் பேசியபோது...

படத்தில் உங்களுடைய பாத்திரம் குறித்து சொல்ல முடியுமா?

"இந்தப் படத்துல என்னுடைய பாத்திரம் பற்றி சொல்லியே ஆகணும். வழக்கமாக, வீட்டுல சண்டைன்னா முதல்ல பாத்திரம் தான் உடையும். சில நேரங்களில், அது நம்மை தலையை நோக்கி கூட வந்து விழும். அந்த மாதிரியான காட்சிகள் இந்தப் படத்திலும் நிறைய இருக்கு. எல்லோருடைய வீட்டுலயும் நடக்கிறதுதான். ஆனா, இந்தப் படத்துல கொஞ்சம் அதிகமாக இருக்கும். திருமணமான ஒவ்வொருத்தரும் எந்தெந்தப் பிரச்னைகளை எல்லாம் சந்திப்பாங்களோ, அதையே இந்தப் படத்துல நானும் சந்திச்சிருக்கேன். 'சென்னை 28' படத்தோட முதல் பாகம் வந்தப்போ நீங்களும் நானும் இளைஞர்களாக இருந்தோம். கடந்த பத்து வருஷத்துல எல்லாமே மாறியிருக்கு இல்லையா? அந்த அழகான மாற்றங்களை இந்தப் படத்துல நீங்க பார்க்கலாம். செகண்ட் இன்னிங்ஸ் மிஸ்டர் அன்ட் மிஸஸ் வார்தான்!"

 

இந்தப் படத்திலுள்ள நண்பர்கள், மனைவி இருவரில் யாருடைய டார்ச்சர் அதிகமாக இருந்தது?

"இந்தப் படத்துல, எனக்கு மனைவியா மகேஸ்வரி நடிச்சிருக்காங்க. அவங்களைப் பற்றி சொல்லவே வேணாம். உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். ஒரு கையில கத்தியும், மற்றொரு கையில சூலமும் வச்சிக்கிட்டிருப்பாங்க. பின்னாடி இன்னொரு நாலு கைகள் இருக்கும். இப்படி நீங்க நினைக்கிற மாதிரியான மகேஸ்வரியா, இதுல அவங்க இருக்க மாட்டாங்க. டீஸர்லயே பார்த்திருப்பீங்க. கேமிரா எங்க வீட்டுக்குள்ள நுழையும்போது மட்டும், அப்படியே பேக் அடிச்சிருக்கும். அப்படீன்னா பார்த்துக்குங்க, எங்க பேமிலி எப்படின்னு? இப்படியே போனா மொத்தக் கதையையும் சொல்லிடுவேன், விட்டுருங்க!"

 

உங்களுடைய ஆம்புலன்ஸ் எந்த நிலையில் இருக்கிறது?

"முதல் பாகத்தில் நடிச்ச எல்லோருக்குமே செகண்ட் இன்னிங்ஸில் நிறைய மாற்றம் இருக்கு. கடந்த பத்து வருஷத்துல எங்க வாழ்க்கை என்னவாக மாறியிருக்கு என்பதைப் பார்ப்பீங்க. என்னுடைய ஆம்புலன்சும் இந்தப் படத்துல வருது. கதைப்படி, நான் இப்போ டிராவல்ஸ் கம்பெனி நடத்திகிட்டிருக்கேன்!" 

 

கிரிக்கெட் ஆடுவதற்காக, மனைவியை ஏமாற்றுனீர்களா?

"மனைவியே அனுமதிச்சாலும், என்னால கிரிக்கெட் ஆட முடியுமா என்பதுதான் சந்தேகம். அதை இந்தப் படத்தோட முதல் மேட்ச்சிலேயே நீங்க பார்த்து தெரிஞ்சிப்பீங்க!" 

 

உங்க டீமில் யாரோட வீட்டுல சண்டை அதிகம்?

" 'சென்னை 28' படத்தோட முதல் பாகத்துல, பழனிக்கு பேசவே தெரியாத ஒரு தங்கச்சி இருந்துச்சு. அந்தப் படத்துல, நாலே நாலு டயலாக்குதான் அந்தப் பொண்ணு பேசியிருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க நிறைய பேசுறாங்க, பேசிக்கிட்டே இருக்காங்க. "இப்படியொரு வாயாடி பொண்ணா?"ன்னு நீங்க வாயடைச்சுப் போகிற அளவுக்கு அது இருக்கு. ஆக, விஜயலட்சுமி வீட்டுலதான் சண்டை அதிகம். பழனி தங்கச்சிக்கிட்ட மாட்டிக்கிட்டு சிவா எவ்வளவு கஷ்டப்படுறாருன்னு பார்த்தா, உங்களுக்கே கண்ணுல தண்ணீர் தானா வரும்!"

 

அடுத்தப் பாகமும் எடுத்தா, நடிக்கிற ஐடியா இருக்கா?

"பொதுவாக, ஹாலிவுட்டில் அந்த மாதிரி பண்றாங்க. ஒரு படத்தோட அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வந்துகிட்டே இருக்கும். அது நல்லாவும் இருக்கும். 'சென்னை 28' படத்தைப் பொறுத்தவரைக்கும், மூன்றாவது பாகம் எடுத்தாலும் நான் நடிப்பேன். அதே சமயத்துல வெங்கட் பிரபு சாருக்கு மூன்றாவது பாகத்தை விட, 'சென்னை 28 ஒன் பாயின்ட் பைவ்' எடுக்கிற ஐடியா இருக்கு. ஆக, அதிலும் நான் கண்டிப்பாக நடிப்பேன்!"

சினிமாவின் நுட்பங்கள் தெரிந்தவர் என்பதால், அஜய்ராஜின் ஒவ்வொரு வார்த்தையிலும் யதார்த்தம் தெறிக்கிறது. ’செகண்ட் இன்னிங்ஸ்’ பற்றிய எதிர்பார்ப்பைச் சரியான அளவில் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமென்ற அக்கறை அவரது பதில்களில் தெரிகிறது. 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles