எனக்கு பன்ச் டயலாக்கே இல்லை.. பிரேம்ஜி வருத்தம்!

Monday, October 31, 2016

சென்னை 28 படம் வெளிவந்தபோது, பிரேம்ஜி அலை வீசியது என்றே சொல்லலாம். ‘என்ன கொடுமை சார் இது’ என்று சொல்லும் அளவுக்கு, அதில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவரிடம் இருந்து இப்படியொரு பெர்பார்மன்ஸ் வெளிவருமென்று ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.

இப்போது, அவர் ரொம்பவே பாப்புலர். அதனால், ’சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ படத்தில் பிரேம்ஜி என்ன செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. அதோடு, எந்த ஹீரோவின் பன்ச் டயலாக்கை இந்தப் படத்தில் பதம் பார்த்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளவும்(?!) ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இப்படியொரு சூழலில், பிரேம்ஜியைச் சந்தித்தோம். 

 

சென்னை 28 இன்னிங்ஸ் 2..!?

“சென்னை 28 பார்ட் 1 ல வந்த பசங்க, பத்து வருடம் கழிச்சு வாழ்க்கையில எப்படி இருக்காங்க அப்படீங்கிறதுதான் இதோட கான்செப்ட். ரியல் லைஃப் மாதிரி, இந்த படத்துலயும் எனக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகலை. என் நண்பர்கள் எல்லாரும் ஜோடியா என்ஜாய் பண்ணனும்னு, அவங்க குழந்தைகளை என்கிட்டே கொடுத்துட்டுப் போய்டுவாங்க. எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ணமாட்டோமான்னு, நானும் அந்தக் குழந்தைகளை ஜாக்கிரதையா பார்த்துப்பேன். இதை நீங்க திரையில பார்த்து ரசிப்பீங்க.

எங்க எல்லாரோட வளர்ச்சி பற்றியும், இந்தப் படத்துல சொல்லி இருக்காரு இயக்குனர். உதாரணத்துக்குச் சொல்லனும்னா, நான் பொட்டிக்கடை வச்சிருந்தேன், இதுல நான், சூப்பர் மார்க்கெட் ஓனர். சிவாவோட வளர்ச்சிதான் டாப். அவங்க அண்ணன் டான் இல்லையா, அதனால அவன் பெரிய பைனான்ஷியரா இருப்பான். கல்யாணம் ஆன குடும்பத்ததுல, நண்பர்களால கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிறைய சண்டை சச்சரவுகள் வரும். எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, படத்துலயும் சரி, நிஜத்துலயும் சரி. எப்போதும் போல பார்ட்டி பண்ணிட்டு ஜாலியா இருப்பேன்.”

 

பன்ச் டயலாக் ?

“ ‘என்ன கொடுமை ஸார் இது!’ன்னு  பார்ட் ஒண்ணுல சொல்லியிருப்பேன். அது பிரபு அங்கிள் ‘சந்திரமுகி’ படத்துல  சொன்னது, பெரிய ஹிட்டாச்சு. இந்தப் படத்துல அப்படி எந்த டயலாக்கும் இல்லை. ஏன்னா, யாரும் இப்போ பன்ச் பேசறதே இல்லை.”

 

நண்பர்களுடனான சண்டை பார்ட் 2விலும் உள்ளதா ? 

“இந்தப் படத்துல, எங்களுக்குள்ள இந்தப் பிரச்சினையும் இல்லை. நடிகர் வைபவ், இதுல எங்களுக்கு எதிர் டீமா களமிறங்கி இருக்காரு. அவரு கூடத்தான் எங்களுக்கு சண்டையே. நிஜத்துல நாங்க நல்ல நண்பர்கள்.”

 

தயாரிப்பாளர் வெங்கட் பிரபு ?

“என் அண்ணன் இறங்கினதுக்கு அப்புறம்தான், ஒரு படத்தயாரிப்புல எவ்ளோ கஷ்டம், டென்ஷன்னு தெரியுது. படப்பிடிப்பு வெளியூர்ல நடந்தாலும், எங்களுக்கு ஒரு குறையும் வச்சதில்லை. நல்ல ஹோட்டல், சாப்பாடு, ஆளுக்கு ஒரு கேரவன் இப்படி சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். நாங்க எல்லாரும் ஒண்ணா, ஒரே கேரவன்ல இருப்போம்கிறது வேற விஷயம். இதுல நடிக்கிற என் நண்பர்கள் எல்லாரும் பெரிய ஹீரோவாகி ரொம்ப பிசியா இருக்காங்க. எங்க அண்ணன் சென்னை 28 பார்ட் 2 எடுக்கப் போறாருன்னவுடனே டேட்ஸ் கொடுத்துட்டாங்க, கொடுத்துதான் ஆகணும். ஏன்னா! எங்க அண்ணனாலதான், நாங்க இந்த நிலைமையிலேயே இருக்கோம். கடவுள் ஆசீர்வாதத்துல இந்தப் படமும் ஹிட்டாகும்னு எதிர்பார்க்குறேன்.”

 

பார்ட் 2 விலயாவது கேட்ச் பிடிச்சிருக்கீங்களா? 

“ஆமாங்க, பார்ட் 1 ல எனக்கு கேட்ச்சே பிடிக்கத்தெரியாது. அதை முதல் சீன்கள்ல எஸ்டாபிளிஷ் பண்ணியிருப்பாங்க. கிளைமாக்ஸ்ல ஒரு கேட்ச் பிடிச்சிருப்பேன், அதுவும் நோ பால்ன்னு சொல்லி மொக்கையாக்கி இருப்பாங்க. பார்ட் 2 வில கேட்ச் பிடிக்கிற காட்சி ஒண்ணு இருக்கு, அது சஸ்பென்ஸ். அந்த சீனை, ரீரெக்கார்டிங்கோட தியேட்டர்ல வந்து பாருங்க.”

 

எந்த கிரிக்கெட் பிளேயர் உங்களுக்குப் பிடிக்கும்?

“உண்மையைச் சொல்லணும்னா, நான் கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன். சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்ததால்தான் பார்ப்பேன். நான் இந்தியன், நம்ம சென்னை அப்படீன்னு ஒரு ஸ்பிரிட் இருக்கும்.”

 

கிளப் 7..!?

“படப்பிடிப்புக்கு நாங்க எந்த வெளியூருக்கு போனாலும், என் ரூம்லதான் பார்ட்டி நடக்கும். பசங்க எல்லாரும், பார்ட்டி பண்ண ஜாலியா வந்திடுவாங்க. ‘சென்னை 28 பார்ட் 1’, ‘சரோஜா’ எல்லாம் லோக்கல்லியே முடிஞ்சுடுச்சு. முதன்முதலா ‘கோவா' படம்தான் வெளியூர்ல எடுத்தாங்க. அதாவது ஸ்ரீலங்கா, மலேசியா, கோவான்னு.. அப்போ எனக்குன்னு ஒரு ரூம் கொடுத்தாங்க. அங்கே நாங்க எல்லாரும் ஒண்ணு கூடிடுவோம். செம்ம பார்ட்டி நடக்கும். 

இந்தப் படத்துக்காக தென்காசியில படப்பிடிப்பு நடந்தப்போ, இசக்கி ரிஸார்ட்ஸ்ல தங்கியிருந்தோம்.  அந்த இடத்தைச் சுத்தி மலை, அவ்ளோ அழகா இருக்கும். அங்கே என் ரூம் நம்பர் 7. என் ரூம்லதான் லான் இருக்கும். பசங்க எல்லாரும் பிளான் பண்ணிட்டு, ஷூட் முடிஞ்சதும் என் ரூமுக்கு வந்துடுவாங்க. அந்த ரூம்தான் க்ளப் 7. விடிய விடிய பார்ட்டி தான். ஏன்னா, ப்ரேம்ஜின்னாலே பார்ட்டி தான்.”

 

சென்னை 28 படத்துக்கு 1.5 வெர்ஸன் வரப்போகுதாமே?

“2007ஆம் வருஷம், சென்னை 28 பார்ட் 1 வெளிவந்தது. பார்ட் 2, இப்பொ 2016ல வெளிவரப்போகுது. இதுக்கு இடையில, கிட்டத்தட்ட பத்து வருஷ இடைவெளி இருக்கு. அதுக்கு நடுவுல, எல்லாருக்கும் கல்யாண வயசு வந்திருக்கும், வேலை கிடைச்சிருக்கும், இப்படிப் பல மாற்றங்கள் நடந்திருக்கும். அந்த மாற்றங்கள் பார்ட் 1 வந்ததுல இருந்து 5 வருஷத்துல நடந்திருக்கும். இந்த இடைவெளியைச் சொல்றதுதான் சென்னை 28 1.5. இதைப்பற்றி, நாங்க வெங்கட் பிரபுகிட்டே சொன்னோம், “இது நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு. நீங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒல்லியா ஸ்மார்ட்டா எப்படி இருந்தீங்களோ அப்படி வாங்க. ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணலாம்னு சொல்லிட்டாரு. சென்னை 28 1.5 நடக்குமா, நடக்காதாங்கிறது நம்ம கையில இல்லை.”

 

இயக்குனராகும் எண்ணம் உண்டா? 

“அப்படியெல்லாம் எந்த எண்ணமும் எனக்கில்லை. ஸ்க்ரிப்ட் எழுதணும், மண்டையை பிச்சிக்கணும், நிறையா வேலை இருக்கும். நான்தான் எங்க அண்ணனை பார்க்குறேனே! அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் எடுத்துப்பேன். ஏன்னா, நாம வாழ்க்கையை நாம டிசைட் பண்றது இல்லை. இப்போதைக்கு, இசையமைக்குறதுல கான்சென்ட்ரேட் பண்ணிட்டு இருக்கேன்.”

 

சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸில் ரீரெக்கார்டிங் செஞ்சிருக்கீங்களா?

“சென்னை 28 பார்ட் 1ல, நான்தான் ரீரிக்கார்டிங் செஞ்சேன், ஏன்னா, அப்போ யுவன் வேற படத்துல பிசியா இருந்தாரு. இந்தப் படத்துல, அவருக்கு ரீரிக்கார்டிங்க்ல உதவியா இருக்கேன். அதோட ‘சொப்பன சுந்தரி' ன்னு ஒரு பாட்டு, அதுக்கு நான்தான் க்ளப் மிக்ஸ் பண்ணியிருக்கேன். சிங்கப்பூர்ல எல்லாம், நிறையா தமிழ் க்ளப்கள் இருக்கு, அங்கே இது நல்ல ஹிட்டாகும்.”

 

தயாரிப்பாளரான அண்ணனுக்கு, நீங்க செய்த உதவி என்ன?

“நேரத்துக்கு ஷூட்டிங் போய்டுவேன், ஏன்னா படப்பிடிப்பு எக்ஸ்டெண்ட் ஆச்சுன்னா, எக்ஸ்டரா பேட்டா தரணும். எங்க அண்ணனோட பிளாக் டிக்கெட் கம்பெனியில்லையா, அதனால ஒழுங்கா இருப்போம். பிளைட்ல பிசினஸ் க்ளாஸ் கேட்கமாட்டோம், பைவ் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் போடுன்னு கம்பெல் பண்ண மாட்டோம். இன்னும் நான் சம்பளம் கூட கேட்கல. அண்ணன்கிட்டே யாருமே கேட்கமாட்டாங்க. இன்பாக்ட் எங்க நண்பர்கள் கூட இந்தப்படத்துக்கு கேட்கலை. என்ன கொடுப்பீங்களோ குடுங்கன்னு சொல்லிட்டாங்க. எங்களால முடிஞ்ச உதவி இதுதாங்க.”

 

எப்போ கல்யாணம்?

“கூடிய சீக்கிரமா! எப்போ எனக்கு தமிழ் காலண்டர்ல நாம பார்க்குற மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு கிடைக்கிறாங்களோ, அப்போதான். அதுவும் தமிழ் கலாசாரத்தோட மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு எப்போ கிடைக்குறாங்களோ, அப்போதான் கல்யாணம்.”மியூச்சுவல் பண்ட் விளம்பரங்களைப் போலவே, படபடவென்று பேசி முடிக்கிறார் நடிகர் பிரேம்ஜி. செகண்ட் இன்னிங்ஸ், அவருக்கு மாபெரும் மாற்றங்களைத் தருமென்று நம்புவோம்!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles