'ஆக்‌ஷன்' சொன்னாலும் அடிச்சுக்க மாட்டாங்க! - சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம்!

Tuesday, November 15, 2016

"அடிப்படையில் நான் ஒரு மல்டிமீடியா ஆளு. ஒரு ஆர்வத்துல ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டேன். அதுதான் என்னைக் கொண்டுபோய் ஸ்டண்டுல விட்டுடுச்சு. எங்க வீட்டுல அப்பா, அண்ணன் இரண்டு பேருமே ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் தான். அதனால, நானும் சாப்ட்வேர்ல இருந்து ஹார்டுவேருக்கு மாறினப்போ யாரும் தடுக்கலை. என்னுடைய நண்பர்கள் எல்லோருமே, என்னை ’மேன் ஆப் த ஸ்டீல்’னு சொல்லுவாங்க.

அதற்குக் காரணம் இருக்கு. என்னுடைய உடம்பு முழுக்க பல்வேறு இடங்களில் மெட்டல் வச்சுதான் தைச்சிருக்காங்க. எல்லாமே சண்டைப்பயிற்சிக்கான வெகுமதிகள்!" என்று மனதில் எந்த வலியும் இன்றி சந்தோஷமாகப் பேசுகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன்னர் சாம். 'சென்னை 28' செகண்ட் இன்னிங்ஸின் அடிதடிக்குச் சொந்தக்காரர். அவரிடம் உரையாடினோம். 

 

முதல் பட வாய்ப்பு..?

"சண்டைப் பயிற்சி இயக்குநர் ராஜசேகர் சார்கிட்டதான் தொழில் கத்துக்கிட்டேன். பிறகு, பொன்னம்பலம் சார் ஹீரோவாக நடித்த "அம்மையப்பன்" படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானேன். அந்தப் படத்தில் ஒரு கிளாஸ் உடைக்கிற ஆக்‌ஷன் காட்சியில், ஒரிஜினல் கிளாஸை வைத்து ஷூட் பண்ணினேன். அதுல பொன்னம்பலம் சாருக்கு டூப்பாக நடித்தேன். அந்தக் காட்சியில பயங்கரமாக காலில் அடிபட்டு, இருபத்திரெண்டு தையல் போட்டாங்க. முதல் படத்திலேயே பெரிய ரிஸ்க். அந்தப் படத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலயும் ஏதாவது அடிபடத்தான் செய்யும். அதையெல்லாம் பார்த்தால் மாஸ்டராக இருக்க முடியாது!"

 

செகண்ட் இன்னிங்ஸில் சண்டைக்காட்சி அமைப்பதற்காக பெரிதாக மெனக்கெட்டீர்களா?

"இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், எல்லா ஹீரோக்களுமே அடிப்படையில் ஆக்‌ஷன் படங்களிலும் நடித்திருக்காங்க. அதனால, சண்டைக்காட்சி அமைக்கும்போது ஈஸியா இருந்துச்சு. ஷூட்டிங் ஸ்பாட்டுல எந்த ஹீரோவை கூப்பிட்டாலும், உடனே வந்து நின்னுடுவாங்க. அவங்களுக்கு ஸ்டண்ட் சொல்லிக்கொடுத்தோம்னா, அதை ஒரே டேக்கில முடிச்சுக் கொடுத்துட்டு நகர்ந்துடுவாங்க. எல்லா ஹீரோவும் ஈகோ இல்லாம நடிச்சாங்க."

 

சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸில் சண்டைக்காட்சிக்கான வாய்ப்பு இருக்கிறதா?

"படத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. செகண்ட் இன்னிங்ஸில் நடித்த பெரும்பாலானவர்கள் சோலோ ஹீரோக்கள் தான். அதனால, ஸ்டண்ட் அமைக்கும்போது யதார்த்தமாக அமைத்தோம். இரண்டு கிரிக்கெட் டீமுக்குள்ளே சண்டை வந்தா என்ன நடக்குமோ, அதைத்தான் செய்தோம். இயல்பிலேயே இரண்டு பக்கமும் உள்ள ஹீரோக்கள், திக் பிரெண்ட்ஸ். நடிப்புக்காக சண்டை போடுங்கப்பான்னா கூட, அவங்க சண்டை போடமாட்டாங்க. அதற்குதான் கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாப் போச்சு. ரிகர்சல் பார்த்துட்டு, ’ஓகே.. ரெடி.. ஆக்‌ஷன்..’னு சொன்னாலும், யாராவது ஒருத்தர் சிரிச்சிக்கிட்டே நிப்பாங்க. ’சார் ஆக்‌ஷனை கண்டினியூ பண்ணுங்க’ன்னு சொன்னாதான், சண்டை போடுற மாதிரி நடிப்பாங்க. மற்றபடி 'சென்னை 28' செகண்ட் இன்னிங்ஸ் டீமோட வேலை பார்த்தது ஜாலியா இருந்துச்சு!"

 

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க என்ன செய்யணும்?

"தினசரி காலையிலோ, மாலையிலோ இருபது நிமிஷம் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. உங்க உடம்பு நீங்க சொல்றதைக் கேக்கும்!"

 

ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க, யாருக்கு ஆர்வம் அதிகம்? 

"சண்டைக் காட்சிகளில் முதல் ஆளாக முன்னால் வந்து நிற்பவர் பிரேம்ஜி சார்தான். ’ஆக்‌ஷன்’னு சொன்னாலே ரெடியாகிடுவாரு. ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்து சண்டை காட்சிகளில் நடிச்சிருக்காரு. சில நேரங்களில் அவருக்கு ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இல்லைன்னாலும், ’கொடுங்க, அந்த சீன்ல நான் சண்டை போடுறேன்’னு சொல்லிட்டு, களத்துல குதிச்சிடுவாரு. பிறகு, அவரைச் சமாளித்துவிட்டு அந்தக் காட்சியை எடுப்போம்!” (சொல்லிவிட்டு சிரிக்கிறார்)

 

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து?

" 'மழை' படத்துல வேலை பார்க்கும்போதே, இயக்குநர் வெங்கட் பிரபு சாரை எனக்குத் தெரியும். அப்போதே, ’சாம்... நான் ஒரு படம் இயக்கப் போறேன். அதுல உனக்கு ஒரு பாத்திரம் இருக்கு’ன்னு சொன்னாரு. அதேமாதிரி 'சென்னை 28' பார்ட் ஒன் ஆரம்பித்தவுடனே, என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. ஆனா, அப்போ 'சிவாஜி' படத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்ததால, அதுல நடிக்க முடியாமப் போச்சு. செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போது, சண்டை பயிற்சிக்கான வாய்ப்பைக் கொடுத்த வி.பி. சாருக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ந்தவாறே விடைபெற்றார் சாம். ’உண்மையான ரியல் ஹீரோக்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான்’ என்ற குரல் ஏனோ பலமாக மனதிற்குள் ஒலித்தது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles