‘‘போலி பெருமிதமும் சாதியும்தான் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை!’’ - சரவணன் சந்திரன் பொளேர்

Saturday, July 30, 2016

தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களில் சரவணன் சந்திரனும் ஒருவர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானவர்கள், சினிமாவைத் தங்கள் வாழ்வின் முதல் அடியாக எடுத்து வைக்கிறார்கள். ஆனால், காலமும் சூழலும் அவர்களை என்னவாய் மாற்றுகிறது என்பதுதான் வாழ்வின் விசித்திரம்.

பத்திரிகை உலகில் வெற்றியாளராகத் திகழ்ந்த சரவணன் சந்திரன், தற்போது ஒரு பரபரப்பான தொழில்முனைவர். சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் ‘ஃபிஷ் இன்’ மீன் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரஜினிகாந்த், விஜய், த்ரிஷா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் குட் புக்கில் ‘ஃபிஷ் இன்’னுக்கு இடமுண்டு. 

 

மீன் விற்பனைக்கு இடையே, சரவணன் சந்திரன் தொடர்ந்து நாவல்கள் எழுதிவருகிறார். இவரது கைவண்ணத்தில் ‘ஐந்து முதலைகளின் கதை’, ‘ரோலக்ஸ் வாட்ச்’, ‘வெண்ணிற ஆடை’ ஆகிய நாவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இயக்குநரான இவர், அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய நூல்தான், ‘வெண்ணிற ஆடை’. 

 

சினிமாவுக்காக வாழ்க்கையைத் தொலைக்காமல், தனக்கான அடையாளத்தைத் தேடிக்கொள்ளும் இளைஞர்களின் வரிசையில் சரவணன் சந்திரனும் ஒருவர். தங்களுடைய தலைமுறையில் முதன்முதலாக வெற்றிக்கனியைப் பறிப்பவர்கள் உண்மையான தமிழ்மகன்கள். சரவணனும் அந்த ரகம்தான்! இதுவரையிலான தனது பயணத்தை, அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

 

“எனக்குச் சொந்த ஊர் தேனி. பிறந்த ஊர் மதுரை. தங்கம் திரையரங்கத்துக்குப் பின்னால் உள்ள காக்காதோப்பில்தான் பிறந்தேன். அப்பாவின் தொழில்நிமித்தமாக, நாங்கள் குடியேறிய ஊர் கோவில்பட்டி. அடிப்படையில், நான் ஒரு ஹாக்கி விளையாட்டு வீரன். மாநில அளவில் விளையாடியிருக்கிறேன். திருநெல்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் படித்தேன். பிறகு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, கல்லூரியில் ‘வனம்’ என்ற இலக்கிய அமைப்பு இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் இந்த அமைப்பில், மாணவர்களும்
பேராசிரியர்களும் தாங்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டுவந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்.

 

கல்லூரியில் ராமசுப்பு(இயக்குநர் ராம்), என்னுடைய சீனியர். அந்தச் சமயத்தில், ராமசுப்பு அண்ணனோடு காரில் போகும்போது ஒரு சின்ன விபத்தில் சிக்கிக்கொண்டேன். அதனால், இனி என்னால் ஹாக்கி போட்டியில் விளையாட முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. பிறகு ஹாக்கிமட்டையை தூக்கிப்போட்டுவிட்டு, கவிதையைக் கையில் எடுத்தேன். அப்போது நா.முத்துக்குமார், பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவரும் ‘வனம்’ அமைப்புக்கு வருவார். என்னுடைய கவிதைகளைப் படித்துவிட்டு, ராமும் முத்துக்குமாரும் பாராட்டுவார்கள். அப்போது, ‘கோவில்பட்டி சரவணக்குமார்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதினேன். 

 

கல்லூரியில் படிப்பை முடித்ததும், ‘ஆறாம்திணை’ என்கிற இணைய இதழில் வேலை கிடைத்தது. அப்போது, அப்பணசாமி சார் அதன் எடிட்டராக இருந்தார். நான் பார்த்த முதல் வேலை, பிழை திருத்துவது. அந்தச் சமயத்தில், எந்த வேலை கொடுத்தாலும் அதைப் பார்க்கக்கூடிய மனநிலையில் இருந்தேன். ஏற்கனவே, எழுத வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்துக்கு, அது நல்ல தீனியாக இருந்தது. எனவே நிறைய எழுதினேன். ஆனால், எனக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேயிருந்தது.

 

அப்போது என் நண்பர்கள் எழுதுவது எல்லாம், ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’ இதழ்களில் வெளிவரும். ஆனால், நாங்கள் ‘ஆறாம்திணை’யில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியதை ஒருவரும் படிக்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருப்போம். இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய இதழ்கள் ரொம்பவே பிரபலம். அப்போது, ‘ஆறாம்திணை’ என்று சொன்னால், ‘அது எந்த புக்குல வரும்? எந்த டிவியில காட்டுவாங்க?’ என்று கேட்பார்கள். அவர்களுக்கு, ‘இது இணையத்துல வரும்’ என்று விளக்குவோம். என்றாலும், ‘ஆறாம்திணை’ இணைய இதழ் எழுத்து வட்டத்தில் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது.

 

என் வாழ்க்கையில் இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா அல்லது அதுவாகவோ நடந்ததா என்று தெரியவில்லை. ‘குற்றம் & நடந்தது என்ன?’, ‘நியாயம் என்றும் சொல்வேன்’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் வேலைபார்த்தேன். ‘மின்தமிழ்’ இணைய இதழிலும்(சிடி மேகஸின்), ‘இந்தியா டுடே’யிலும் தீவிர அரசியல் நிருபராகப் பணியாற்றினேன். சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதுகிறவனாகவும் இருந்தேன். 

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி தொடர்தான். ‘இந்த நிகழ்ச்சியில் என்ன புதுசா சொல்லப் போறோம்’ என்று யோசித்தேன். அதற்காக, நிறைய புதுப்புது உத்திகளை எல்லாம் பயன்படுத்தினேன். ‘சித்தி’ தொடருக்குப் பிறகு, தமிழகம் முழுக்க எட்டு மணியில் இருந்து ஒன்பதரை மணி வரை மக்களை கட்டிப்போட்டது இந்த நிகழ்ச்சி. ஆனால், எனக்குள் ஒரு மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. நிறைய கட்டுரைகள் எழுதினாலும், என் பெயரில் ஒரு புத்தகம்கூட வெளியாகவில்லை என்பதுதான் அது!

 

‘காலச்சுவடு’ இதழில் வேலைசெய்தபோது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அறிமுகம் உண்டு. ‘நீ எடுக்கும் ஆயிரம் எபிசோடுகள் காற்றில் கரைந்துவிடும். ஒருநாள் நீ திரும்பிப் பார்க்கும்போது, ஒன்றுகூட உன்னுடன் இருக்காது. உன் பெயரில் ஒரு புத்தகம் வெளிவருவதுதான் முக்கியமான விஷயம்’ என்று அவர்தான் சொன்னார். எனவே, நாவல் வடிவத்தைக் கையில் எடுத்தேன். அப்படி எழுதியதுதான் ‘ஐந்து முதலைகளின் கதை’. இப்போது ‘நாடோடிகளும் சூதாடிகளும்’. இந்த நாவலை மடியில்வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து கொஞ்சுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘ரோலக்ஸ் வாட்ச்’ என்னுடைய இரண்டாவது நாவல். தமிழ் இலக்கிய உலகுக்கு, இது ஒரு புதிய வடிவம்.

 

பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதுதான், கிராமப்புறத்தில் இருந்து நகரம் நோக்கி வந்த என்னைப்போன்ற இளைஞர்களின் முதன்மையான குறிக்கோளாக இருந்தது. காரணம், இந்தப் பொருளாதாரம் இல்லாததினால்தான், எங்களுடைய கனவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. கல்லூரி முடித்தவுடன் எங்கள் கனவை நோக்கி கால்வைக்க முடியாமல் தடுத்த ஒரே விஷயம், ‘அடுத்தவேளை சாப்பாட்டுக்காக இன்னைக்கே உழைக்கணும்’ என்பதுதான்.

 

எனவே, விஷுவல் மீடியாவில் வேலைபார்க்கும்போதே, பொருளாதார பலம் வேண்டும் என சிறு தொழில்களில் ஈடுபட்டேன். அப்போது பலர் எனக்கு உதவினார்கள், சிலர் மறைமுகமாகத் தொந்தரவு கொடுத்தார்கள். என் நேர்மைகூட, சந்தேகத்துக்கு இடமானது. ‘ஆஃபீஸ்ல  வேலைபார்த்துகிட்டே நீ பிசினஸ் பண்றியா?’ என்றார்கள். அப்போது அப்படிப் பேசியவர்கள் எல்லாரும், இன்று என் தொழில் முன்னேற்றத்தைப் பார்த்துப் பாராட்டுறார்கள்” என்று சொன்ன சரவணன் சந்திரன், தான் தொழில் உலகில் நுழைந்தவிதம் குறித்தும் பேசினார்.

 

‘‘என் கல்லூரிக் காலத்தில் இருந்து மீனவ நண்பர்கள் எனக்கு அதிகம். கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம்துறை, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கியிருக்கிறேன். அப்படித் தங்கும்போது, மீன்கள் பற்றிய புரிதலும் தெளிவும் எனக்குக் கிடைத்தது.

 

பொருளாதார ரீதியாக நாம் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது, முதலில் நான் செய்த தொழில் பி.பீ.ஓ. அந்தத் தொழில் மிகச் சிறப்பாக இருந்தது. அப்போது, இந்த மீன்கள் விஷயத்தில் புதிதாக ஏதாவது பண்ணலாம் என்று முயற்சித்தேன். அப்படியான முயற்சியின் ஒரு பகுதியாக, ‘மீன்களை ஆன்லைன் மூலமாக ஃப்ரீ டெலிவரி செய்தால் என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வி, இப்போது உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இதைச் சொன்னபோது, அனைத்து மீன்கடைக்காரர்களும் எதிர்த்தார்கள். ‘இதுல என்ன புதுசா செய்யப்போறான்?’ என்றார்கள்.

 

‘மீன் கடையை நவநாகரிகமா உருவாக்குறேன். கடைக்குள்ள உட்கார்ந்து நீங்க சாப்பிடற அளவுக்கு அது சுத்தமா இருக்கும்’ என்று சொன்னேன். ‘இவன் என்ன பைத்தியக்காரத்தனமா பேசிட்டிருக்கான்’ என்றார்கள். என்னுடைய போட்டியாளர்கள் சிலர், ‘இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகும்னு தெரியல’ என்றார்கள். எல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் நினைத்தது நடந்தது. இதில் முக்கியமானது, ‘இன்னும் 10 வருடங்கள் கழித்து ஹோம் டெலிவரிதான் வொர்க் அவுட் ஆகும்’ என்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்ததுதான்!

 

‘ஃபிஷ் இன்’ தொடங்கிய காலகட்டத்தில், போராட்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்தோம். மீன்களை வாங்கிச்சென்ற வாடிக்கையாளர்கள், அவை வீணாகிவிட்டதாகக் கூறி திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு 10 ஆர்டர் கிடைத்தால், எட்டு ஆர்டர்கள் திரும்பி வந்துவிடும். ‘போட்ட காசெல்லாம் இப்படி ஆயிடுச்சே’ என்று யோசிக்கும்போது, கண்ணீர் வரும். ஆனால் மனம் தளராமல், அந்த மீன்களை எடுத்துச்சென்று எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு பயிற்றுவித்தோம். அப்படித்தான் ‘ஃபிஷ் இன்’ இன்று வளர்ந்து நிற்கிறது. இன்று, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மீன்களை மொத்தமாக சப்ளை செய்கிறோம். ஆல்டோ காரிலிருந்து பிஎம்டபுள்யூ கார் வரை வந்துபோகிற நிறுவனமாக ‘ஃபிஷ் இன்’ வளர்ந்திருக்கிறது. ‘ஃபிஷ் இன்’னுக்காக விளம்பரங்கள் ஏதும் செய்ததில்லை. வாடிக்கையாளர்களின் ‘மவுத் டாக்’தான் எங்களின் வெற்றி.

 

ஆசிய கண்டத்தில் ஏழு, எட்டு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாகப் பயணித்திருக்கிறேன். அதில் எனக்கு ரொம்பவும் பிடித்தது, கிழக்கு தைமூர். இந்தோனியாசியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அங்குயிருக்கிற மக்கள் குப்பையில் இருக்கிற கீரைகளையும், உடைந்துபோன அரிசியையும்தான் சாப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு, அங்கே வறுமை இருக்கிறது. ஆனால், இவ்வளவு கொடுமையான வறுமையிலும் தங்கள் நாடு முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு இருக்கிறார்கள் அந்த மக்கள். கிழிந்த ஆடைகள்தான். ஆனால், அதனைத் துவைத்து, சுத்தமாக அணிகிறார்கள். இது அந்த நாட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்தது.

 

அடிப்படையில், சக மனிதனை மதிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தது அந்த நாடுதான். சென்னையைவிட பெரிய நிலப்பரப்புதான் கிழக்கு தைமூர். அங்கு இருக்கிற பரபரப்பான சாலையின் நடுவே ஒரு வயதான கிழவி நடந்துபோனால், அனைத்து வண்டிகளும் அவள் சாலையைக் கடக்கும் வரை அப்படியே நிற்கும். அங்கு யாரும் பிச்சை எடுத்து, நான் பார்த்ததில்லை. அவர்கள் செய்யும் வேலைக்கு குறைவாகத்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அம்மக்களுக்கு சிகரெட், குடி உள்ளிட்ட பழக்கங்கள் உண்டு. ஆனாலும், அங்கு ஒரு பிச்சைக்காரன்கூட இல்லை.

 

தமிழர்களும் சீனர்களும், வியாபாரம் சார்ந்து உலகம் முழுக்கப் பரவியிருக்கிறார்கள். ஆனால், சீனா அடைந்திருக்கும் உயரம் மிகப் பெரியது. தமிழர்கள் ஏன் அந்த இடத்தை அடையவில்லை என்றால், அவர்கள் தங்களுடைய அடிப்படை நேர்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். ‘மலாய்’, ‘கடாரம்’ பகுதிகளுக்கு ராஜராஜசோழன் செல்லும்போது, அங்கே சீனர்கள் வியாபாரம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று உலகம் முழுக்க சீனர்கள் பெரிய அளவுக்கு தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அதனை அடையவில்லை? தமிழர்களுடைய போலிப் பெருமிதமும் சாதி உணர்வும்தான் அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்வேன்.

 

தமிழனிடம் மட்டும், நீங்கள் தொழில் சார்ந்து பேச முடியாது. எல்லாவற்றையும் அவர்கள் பர்சனலாக எடுத்துக்கொள்வார்கள். உணர்ச்சிவசப்படுவார்கள். ஒரு பொருளின் விலை கட்டுப்படியாகவில்லை என்றால்,
‘நோ தாங்க்ஸ்’ என்று சொல்லி கைக்குலுக்கிவிட்டுப் போகலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு அந்தக் கடைக்காரரின் ஊர், பேர், சாதி, மதம், வட்டம் என்று வசைபாடுவதை தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தமாய் சுற்றியதில், எனக்குக் கிடைத்த அனுபவம் இதுதான். வணிகத்தில் தமிழ்நாடும், தமிழனும் இன்னும் பல படிகள் முன்னேறி வர வேண்டியிருக்கிறது!’’

 

பெருமூச்சுவிடுகிறார்.

 

‘அஜூவா’ என்ற நாவலை தற்போது எழுதிவரும் சரவணன் சந்திரன், விவசாயத்திலும் தன் பாதங்களைப் பதித்திருக்கிறார். தனது கள அனுபவத்தின் மூலமாக, வெவ்வேறு பரிமாணங்களைத் தாங்கி வருகிறார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles