நல்ல கதைசொல்லிதான் சிறந்த இயக்குநராக இருக்க முடியும் - எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார்

Friday, July 29, 2016

“தொடர்ந்து சினிமா பார்ப்பதன் வழியே, ஒருத்தர் சிறந்த கதாசிரியராக உருவாக முடியாது. சினிமா என்பதே ஒரு பயிற்சிதான். நிறைய திரைப்படங்களை இயக்கியும் நிறைய படங்களுக்குத் திரைக்கதை எழுதியும்கூட, இன்னமும் பல பேரால சிறந்த திரைக்கதைக்கான இலக்கணத்தை புரிஞ்சுக்க முடியலை. காரணம், சினிமா என்பது ஒரு ஆர்ட் ஃபார்ம். அதுக்குக் கூடுதலான திறமை தேவைப்படுது. இன்றும்கூட சினிமாவில் எதைச் சொல்லணும், எதைத் தவிர்க்கணும்னு பலருக்குத் தெரியலை” என்று சினிமா குறித்த புரிதலோடு பேச ஆரம்பிக்கிறார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார்.

இவர் எழுதிய ‘கானகன்’ நாவலுக்கு, சமீபத்தில் சாகித்திய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இலக்கியம், சினிமா, திரைக்கதை சார்ந்து வெவ்வேறு களம் பற்றி, அவரிடம் பேசினோம்.

 

“மூணு வருஷத்துக்கு முன்னாடி ‘உப்பு நாய்கள்’ நாவலை யுவபுரஸ்கார் விருதுக்கு அனுப்பியிருந்தேன். அப்போ விருது கிடைச்சிருந்தா, சரியான அங்கீகாரமாக இருந்திருக்கும். இன்னும் பெருசா சந்தோஷப்பட்டிருப்பேன். ஏன்னா, அந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டமும் அந்த நாவல் பேசின விஷயமும் ரொம்ப முக்கியமானது. இப்போ ‘கானகன்’ நாவலுக்கு விருது அளிக்கப்பட்டிருப்பதன் மூலமா, என்னுடைய மற்ற படைப்புகளும் கவனத்துக்கு உள்ளாகியிருக்கு. மற்றபடி, விருது கிடைச்சதால பெரிசா எந்த மாற்றமும் உருவாகலை. இப்போ என் மேல சிறு வெளிச்சம் படர்ந்திருக்கு, அவ்வளவுதான்” என்று தனது படைப்புகள் குறித்து பேசுபவர், அவற்றுக்கு இடையே இருக்கும் பிணைப்பையும் விவரிக்கிறார். 

 

“ ‘உப்புநாய்களு’க்கும் ‘கானகனு’க்கும் இடையே ஒரு இன்டர்லிங்க் இருக்குதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, ‘உப்புநாய்கள்’ நாவல் முடிகிற இடத்திலதான் ‘கானகன்’ நாவல் ஆரம்பிக்குது. ‘உப்புநாய்கள்’ நாவலின் கடைசி அத்தியாயத்தின் தலைப்பை இப்படி வச்சேன்... ‘வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகள் குறித்து அச்சமாய் இருங்கள்’. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் இருந்து எடுத்து, அதைச் சொன்னேன். அங்கேயிருந்துதான் ‘கானகன்’ நாவலின் பயணமும் ஆரம்பிச்சது. ஆனா, இந்த நாவல் சொல்கிற களம் வேறா இருக்கும்.

 

ரெண்டு நாவலின் கதைச் சூழலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. சென்னை நகரத்தினுடைய இருட்டுப் பக்கங்களை விலாவரியா பேசுறதுதான் ‘உப்பு நாய்கள்’. ஆனா, ‘கானகன்’ அப்படியல்ல. 80களில், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வசித்த பழங்குடி மக்களைப் பற்றியது. பாதிக்கப்பட்ட அல்லது சமூகத்தில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்ட மக்களைப் பத்திதான், இரு நாவல்களுமே பேசுது. இவை ரெண்டும் பேசுகிற அடிப்படை விஷயமும் ஆன்மாவும் ஒண்ணுதான். 

 

இன்று எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் சவாலான எழுத்தாளர்களாக இருக்காங்க. தமிழ்நதி, அகரமுதல்வன், ஆர்.அபிலாஷ், விநாயகமுருகன், சரவணன் சந்திரன் போன்றவர்களை அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நிறைய சிறுகதைகளும் நாவல்களும் தொடர்ச்சியா அவங்ககிட்டேயிருந்து வருவது, நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஆரோக்கியமான விஷயம். ‘பார்த்தீனியம்’ என்கிற தன்னோட படைப்புல, 80களில் இலங்கையில் இந்திய அமைதிப்படை என்னென்ன அட்டூழியங்களை செஞ்சுதுன்னு விரிவா எழுதியிருக்காங்க தமிழ்நதி. அது முதல்தடவையா தமிழ் இலக்கியத்துல பதிவு செய்யப்பட்டிருக்கு. இதுவரை யாருமே அவ்வளவு அழுத்தமா சொன்னது இல்ல. அந்தவகையில, கதைவெளியில் இயங்குவதற்கு நிறைய புது ஆட்கள் வந்திருக்காங்கன்னு சொல்லுவேன்! 

 

2007- ம் வருஷம் சென்னைக்குக் கிளம்பியது, பத்திரிகை அலுவலகத்துல வேலை பார்க்கத்தான். உடனே வேலை கிடைக்கலை. கொஞ்ச நாள் கழிச்சு, பத்திரிகையாளனாக ஒரு இடத்துல வேலைக்குச் சேர்ந்தேன். ‘இந்த வேலைக்கு நீ லாயக்கு இல்லை’ன்னு சொல்லி, அங்கிருந்து வெளியே அனுப்பிட்டாங்க. அதற்கப்புறம் கொஞ்சம் போராட்டங்களுக்குப் பிறகு, என்னுடைய படைப்புகள் வெளிவந்துச்சு.

 

ஒரு எழுத்தாளனா இந்த உலகத்துக்கு நான் தெரிய ஆரம்பிச்சப்போதான், ‘அங்காடித் தெரு’ படத்தை முடிச்சுட்டு அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார் இயக்குநர் வசந்தபாலன். அப்போ, அவரோட எழுத்தாளர் சு.வெங்கடேசனும் இருந்தார். தான் எடுக்கப்போற படத்தோட கதை பற்றி விவாதிக்க, இலக்கியம் தெரிஞ்ச ஒரு உதவி இயக்குநரை அவர் தேடியிருக்கார். அதற்கு என்னை சிபாரிசு பண்ணியிருந்தாரு வெங்கடேசன். அப்படித்தான் இயக்குநருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நடந்துச்சு.

 

‘ ‘காவல் கோட்டம்’ நாவல் படிச்சிருக்கீங்களா? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’ ’னு டைரக்டர் கேட்டாரு. பிடிக்கலைன்னு சொல்லி, ஒரு அரைமணி நேரம் அந்த நாவலை திட்டிதான் பேசினேன். பொறுமையா கேட்டுக்கிட்டு இருந்தவரு, ‘அந்த நாவலைத்தான் ‘அரவான்’கிற பேர்ல படமா இயக்கப்போறேன்’னு சொன்னாரு. எனக்கு சிரிப்பு வந்திடுச்சு. ‘சரி, இன்னைக்குப் போயிட்டு நாளைக்கு வாங்க’ன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு. அதன்பிறகு, அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ஆரம்பத்துல ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரிதான் இருந்தோம். அதற்கப்புறம்தான், நெருக்கமும் நிறைய உரையாடலும் எங்களுக்கிடையே நடந்துச்சு.

 

ஒரு எழுத்தாளரோ, இயக்குநரோ யாராக இருந்தாலும் கதை சொல்றதுக்கோ, ஏதோ ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கறதுக்கோ சக மனுஷன் தேவைப்படுறான். அப்படிப் பார்க்கும்போது, ஒரு நல்ல கதைசொல்லிதான் சிறந்த இயக்குநராக இருக்க முடியும்னு உறுதியா நம்புறேன். இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, சினிமா என்பது வேறொரு கிராஃப்ட். முழுக்க முழுக்க அது வேறொரு உலகம். அதுக்குள்ள வரும்போது நிறைய பயிற்சியும் உழைப்பும் தேவைப்படும். இதற்கு உடல் ரீதியாகவோ, மனோரீதியாகவோ நிறைய எழுத்தாளர்கள் தயாரா இல்லைங்கிறது ஒரு துயரமான விஷயம்தான். 

 

சினிமாவுக்குள்ளே வரும்போது சினிமாவுக்கான ஆளா இருக்கணும்ங்கிற ஒரு தேவை இருக்கு. அப்படியில்லாதபோது, இலக்கியத்திலும் சினிமாவிலும் தோற்றுப்போய் நிற்கிற நிலைமைதான் ஏற்படும்!

 

ஒரு நாவல் எழுதும்போது, எனக்கு முழு சுதந்திரம் இருக்கு. ஒரு காட்சியை எத்தனை பக்கத்துக்கு வேணாலும் எழுதலாம். அதே சமயத்துல, எனக்கு வார்த்தை சிக்கனமும் கிடையாது. ஒரு குதிரை ஓடுதுன்னு சொல்றதுக்கு நான் 15 பக்கத்தை எடுத்துக்கலாம். ஆனா, திரைக்கதையில அப்படிச் செய்ய முடியாது. ஒரு திரைக்கதை ஆசிரியருக்குக் காலம் குறித்த பிரக்ஞை ரொம்ப முக்கியம்.

 

நேரம் என்பது சினிமாவுல மிக மிக கவனிக்கப்பட வேண்டிய அம்சம். 15 பக்கத்துல நாவலில் எழுதப்பட்ட ஒரு காட்சியை, ஒரு செகண்டில் சினிமாவில் காட்சிப்படுத்திவிட முடியும். ஒரு நாவலாசிரியர் திரைக்கதை எழுதும்போது, தேவையில்லாத எல்லா ஆணிகளையும் பிடுங்கிடுவார். அதுதான் எடிட்டிங் சென்ஸ். ஒருத்தர் சினிமாவுல இயக்குநரா ஆக ஆசைப்பட்டா, அவர் முதலில் செய்ய வேண்டியது இதுதான். ஆறு மாசம் நல்ல எடிட்டர் ஒருத்தர்கிட்ட எடிட்டிங் கத்துக்கணும். சினிமா எப்படி எடிட் செய்யப்பட வேண்டும் என தெரிஞ்சுக்கிட்டு வந்தா, அவர் சிறந்த திரைக்கதை ஆசிரியரா உருவெடுக்க முடியும்” என்கிறார் ஆணித்தரமாக.

 

பத்திரிகை, சினிமா, இலக்கியம் என்று வெவ்வேறு களங்களின் தன்மையை பரிசோதித்துப்பார்த்த லஷ்மி சரவணக்குமாரின் பயணம், தற்போது புதிய திசை நோக்கிச் செல்வதையே இவரது பேச்சு புலப்படுத்துகிறது. கதைசொல்லி கொண்டுவரவிருக்கும் கதைகளுக்கும் கலைகளுக்கும் காத்திருப்போம்! 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles