"நியூ சூப்பர் டான்ஸர் சாந்தனு!" பிரபுதேவாவின் ‘பளீர்’ பாராட்டு!!

Saturday, December 31, 2016

" 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் நான் ரொம்ப ஸ்பெஷலா தெரியுறேன்னா, அதுக்கு மூன்று பேர் காரணம். படத்தோட கேப்டன் பார்த்திபன் சார், இந்தப் படத்துல நான் முற்றிலும் புதிய ஆளாக மாறணும்னு விரும்பினார். அதற்காக, என்னை ஷேவ் பண்ண வச்சி, மூக்குக்கண்ணாடி கொடுத்து, நியூ ஹேர்ஸ்டைல் செட் பண்ணார். அவரோட கிரியேட்டிவிட்டியை செயல்படுத்தியது தேவ் என்கிற ஹேர் ஸ்டைலிஸ்ட். அதற்குப் பிறகு, படத்தோட ஒளிப்பதிவாளர் பற்றி சொல்லியாகணும்.

படத்தில் என்னை ’ஃபிரேம் டு ஃபிரேம்’ அழகாக காட்டியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு!" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் சாந்தனு. 'வாய்மை' பட வெற்றியைத் தொடர்ந்து, 'கோடிட்ட இடங்களை நிரப்புக' மூலம் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் அவரிடம் பேசினோம். 

"ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்த்து பார்த்திபன் சார் படத்துக்கு வருவாங்களோ, அதெல்லாம் இந்தப் படத்துல இருக்க்கு. எனவே, நம்பிக்கையோட எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கலாம். அதை நூறு சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியும். இதையே ஆரம்பத்துல கேட்டீங்கன்னா, என்னால சொல்லியிருக்க முடியாது. ஏன்னா, கதையே கேட்காமல்தான் இந்தப் படத்துக்குள்ள நடிக்க வந்தேன். பார்த்திபன் சார் ஓகே பண்ணிய மூன்றாவது நாளே, நான் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போதுதான், "என்ன சார், கதையே சொல்லாம கூட்டிட்டு வந்துட்டீங்களே?"ன்னு கேட்டேன். "கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தோட டீசர் பார்த்தீங்களா?"னு கேட்டாரு. "பார்த்தேன் சார். யூடியூப்ல வைரலா போயிட்டிருக்கு" என்றேன். "அந்தப் படத்தினுடைய நாயகன் நீதான். அந்தப் படத்தைத்தான் இப்போ எடுக்கிறோம்" என்று ஷாக் கொடுத்தார். என்னுடைய திரைப் பயணத்தில், இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்!" என்கிறார் சாந்தனு. 

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியாகியிருக்கிறது; அதற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, இந்தப்படத்தில் ரொமான்ஸ் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இதற்குக் காரணம், இதன் நாயகியாக நடித்திருக்கும் பார்வதி நாயர். "பார்வதி நாயர், ஒரு நல்ல நடிகை. எங்களுக்குள்ளே எந்த கெமிஸ்ட்ரி, பயாலஜியும் கிடையாது. இந்தப் படத்துல வர்ற கதாபாத்திரத்தில் யாரு நடிச்சிருந்தாலும், நிச்சயமாக ஸ்கீரின்ல அவங்க ப்ரெஷ்ஷாக தான் தெரிஞ்சிருப்பாங்க. காரணம், பார்த்திபன் சாரோட தேர்வு ஒருபோதும் தோற்றதில்லை. அதனால, எங்க ஜோடி சிறப்பா தெரியுதுன்னா, அந்த கிரெடிட் முழுக்க இயக்குநருக்குதான் போய்ச்சேரும்" என்றவர், மெல்ல தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார். 

"ஒரு நல்ல நடிகனாக மாறுவதற்கு, இன்றுவரை நான் போராடிக்கிட்டு தான் வர்றேன். உலகம் முழுக்க எங்கே போனாலும், ’பாக்யராஜ் சார் பையன்’ என்கிற பிராண்ட் என்மேல விழுந்துகிட்டுதான் இருக்கு. அது எனக்கு பெரும்பாலும் பலமாகதான் இருந்திருக்கிறதே தவிர, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதையெல்லாம் தாண்டி, நமக்கான நேரமும் சூழலும் கதைக்களமும் அமைஞ்சா போதும்; சரியான இடத்துல போய் நிக்க முடியும். 

ஆலமரத்துக்கு கீழே இருக்கிற செடியை பிடுங்கிக் கொண்டுபோய், பக்கத்துல நட்டு வச்சா நிச்சயம் நல்லாத்தான் வளரும். ஏன்னா, நல்ல நடிகன் சாந்தனு என்கிற கோணத்தில் ஆடியன்ஸ் பார்க்கிறதுக்கு அது உதவும். அப்படித்தான், வேறொரு பரிமாணத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கார் பார்த்திபன் சார்" என்றார்.

இந்தப்படத்தில் டி.ராஜேந்தர் பாடிய ’டமுக்குட்லான் டுமுக்குட்லா’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் சாந்தனு. இதற்கு கொரியோகிராபி செய்திருப்பவர் பிரபுதேவா. "ஒரு நடிகன்கிட்ட இருந்து சிறப்பான நடனத்தை, பிரபுதேவா மாஸ்டரால கொண்டு வந்துவிட முடியும். இந்தப் படத்துல அவர் கமிட் ஆனதும், நான்கு நாட்கள் டான்ஸ் பிராக்டீஸ் கொடுத்து பென்டை நிமித்திட்டாரு. அதனால, என்னோட டான்ஸ் சிறப்பா வந்திருக்கு. அதைப் பார்த்துட்டு விஷால், ஆர்யா, சிபி, ராதிகா மேடம்னு நிறைய பேர் ஆன்லைன்ல பாராட்டியிருந்தாங்க. 

குறிப்பாக, பிரபுதேவா மாஸ்டர் ’தி நியூ சூப்பர் டான்ஸர் சாந்தனு’ன்னு டுவீட் பண்ணியிருந்தாரு. அதற்கு, "என்னுடைய பிறவிப் பயனை அடைந்தேன்" என பதில் சொன்னேன். அவருடைய கோரியோகிராபில, ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடணும்கிறது என்னோட கனவு. இப்போ அந்த கனவும் நிறைவேறிடுச்சு, அவரோட பாராட்டையும் வாங்கிட்டேன். இதைவிட வேறென்ன விருது வேண்டும், சொல்லுங்க?" என்று சொல்லும் சாந்தனுவின் கண்களில் ஆச்சர்யம் நிரம்பி வழிகிறது. 

'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம், சாந்தனுவுக்கு ஒரு ஊற்றுக்கண்ணாக அமைய வாழ்த்தி விடைபெற்றோம்..!

- கிராபியென்  பிளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles