கடைசி நேரத்துல வசனங்களை மாத்திடுவார் பார்த்திபன் சார்! - நடிகை பார்வதி நாயர் 

Saturday, December 31, 2016

“ ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ரொம்பவே வித்தியாசமான படம். நிறைய பேரை ஆடிஷன் செஞ்ச அப்புறம்தான், இந்தப் படத்துக்கு ஹீரோ, ஹீரோயினை செலக்ட் செஞ்சிருக்காரு பார்த்திபன். இதுல தேர்வானதே போதும். ஏன்னா, அவரு ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சு மூன்று வருஷமா அந்தக் கதைக்குப் பொருத்தமானவர்களைத் தேடிட்டு இருந்தாரு. அவரோட இந்தத் தேடல்ல நான் பொருந்தி இருக்கேன்னு நினைக்கும்பொழுது ரொம்ப பெருமையா இருக்கு” என்று வெகு உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை பார்வதி நாயர்.

‘என்னை அறிந்தால்’ படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் இவர். ஆனாலும், ஒரு நாயகியாக ரசிகர்களைச் சந்திக்கும் பதற்றமும் பரபரப்பும் அவரது இயல்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று தொடங்கியதுமே, விடாமல் பேசத் தொடங்குகிறார்.  

“ஷூட்டிங் தொடங்குறதுக்கு இரண்டு நாள் முன்னாடிதான், இந்தப் படத்துல கதாநாயகியாக தேர்வாகி இருக்கேங்கிற விஷயம் தெரிஞ்சது. தாய் மொழியில நடிக்கும் பொழுதே, டயலாக் மனப்பாடம் செஞ்சு பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கும். இது வேற ஒரு மொழிப்படம், அதுவும் பக்கம்பக்கமா வசனங்கள் இருக்கு; எப்படிடா நடிக்கப் போறோம்னு பயந்துட்டே இருந்தேன். எப்படியோ சமாளிச்சுட்டேன். அதுக்காக, பார்த்திபன் சாருக்கு தான் நன்றி சொல்லணும். 

நான் ரொம்ப விளையாட்டுத்தனமான பெண். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப கண்டிப்போட இருப்பார்  பார்த்திபன். அது ரொம்ப நல்ல விஷயம். ஏன்னா,  எனக்கு நடிப்பைக் கற்றுக்கொள்ள அது உதவியாக இருந்தது. கடைசி நேரத்துல, சில வசனங்களை கொஞ்சம் மாத்துவாரு. முதல் பதினைந்து நாள் ரொம்ப பயந்தேன். அப்புறம் அதுவே பழகிப்போச்சு. அதுக்கப்புறம் எந்த நேரத்துல எப்படி மாத்தினாலும், எவ்ளோ பெரிய வசனமாக இருந்தாலும் சமாளிச்சிடலாம்னு  தன்னம்பிக்கை வந்துச்சு. ஒரு நடிகையா, இது நல்ல வளர்ச்சியைக் கொடுத்திருக்கு.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தோட கேரக்டருக்கும் என்னோட ரியல் லைஃபுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படிப்பட்ட சிக்கல்களை எல்லாம் பெண்கள் சந்திக்குறாங்களான்னு நினைக்கும்போதே ஆச்சரியமா இருந்தது. முகத்தில் பாவங்களை வெளிப்படுத்த ரொம்ப கஷ்டமா இருந்தது. தொடர்ந்து பார்த்திபன் சார் கொடுத்த பயிற்சியால, என்னால சுலபமா நடிக்க முடிஞ்சது” என்று நன்றியோடு படப்பிடிப்புத் தருணங்களை நினைவுகூர்ந்தார் பார்வதி நாயர். 

 

சாந்தனு உடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?

“எங்க ரெண்டு பேருக்குமே இதுதான் முதல் ரொமான்டிக் படம். இதுக்கு முன்னாடி, சாந்தனு நடிச்ச படங்கள்ல இவ்ளோ ரொமான்ஸ் இருந்துதான்னு தெரியல. படத்தோட ட்ரைலர் பார்த்த என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோரும், “யாரு இந்த நடிகர், இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காரு?”ன்னு தான் கேட்டாங்க. என்னை கூட அவங்க ரொம்ப அப்ரிஷியேட் செய்யலை. சாந்தனுவைத்தான் குறிப்பிட்டுச் சொன்னாங்க. 

சாந்தனு சினிமா பின்னணி உள்ள குடும்பத்துல இருந்து வந்தவர். ஆனா, அதுமாதிரி எந்த பந்தாவும் அவர்கிட்ட கிடையாது. நல்ல நட்போட பழகக்கூடியவர். ரொம்ப நல்ல மனிதர்.”

 

படப்பிடிப்புத்தளத்தில் இயக்குனர் பார்த்திபன் எப்படியிருப்பார்?

“நடிப்புன்னு வந்துட்டா ரொம்ப கண்டிப்போட இருப்பாரு. கொடுத்த டயலாக்கை சரியா பேசணும். கையில மொபைல் வச்சுக்கிட்டு ஏதாவது யோசிச்சிட்டு இருந்தா, ரொம்ப கோபப்படுவாரு. மத்த நேரங்கள்ல பார்த்தீங்கன்னா, ஷாட் முடிச்சிட்டு ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பாரு, ஜோக்ஸ் சொல்லுவாரு, ரொம்ப ரகளையா இருப்பாரு. என்னைப் பொறுத்தவரைக்கும், நடிப்பை சின்சியரா கத்துக்கணும்னா பார்த்திபன் சார்கிட்ட கத்துக்கலாம். என்னை மாதிரி புதுசா வர்றவங்களுக்கு, அவர் படங்கள்ல நடிக்கறது ரொம்ப உபயோகமாக இருக்கும்.”

 

படத்துல நீங்களே டப்பிங் பேசியிருக்கீங்களா?

“பார்த்திபன் சாருக்கு என்னை டப்பிங் பேச வைக்கணும்னு ஆசை. ஆனால், இந்தப் படத்துல என்னோட கேரக்டர் பேசுற ஸ்டைலே வித்தியாசமா இருக்கும். அபுதாபியில வளர்ந்ததால, எனக்கு அந்த ஆக்சென்ட் சரியா வரலை. 

ஆனால், என் குரலை திரையில கேக்குற ஆசை நிறையவே இருக்கு. அதுக்கான பயிற்சிகளை எடுத்துட்டு வர்றேன். கூடிய சீக்கிரம் அது நிறைவேறும்.”

 

நீங்கள் நடிப்பதற்கான கதையை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

“சவாலான பாத்திரங்களில் நடிப்பது ரொம்ப பிடிக்கும். ‘என்னை அறிந்தால்' படத்துல எனக்கு நெகட்டிவ் ரோல். அஜீத் சார் கூட நடிச்சிருக்கேன். ரொம்ப பெருமையான விஷயம் என்னன்னா, கவுதம் மேனன், அஜீத் சார் கூட நானும் நடிச்சிருக்கேன். அதுவும், சவாலான ரோலை என்னை நம்பி இயக்குனர் கொடுத்திருக்காரு.

இதேபோல, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்துல, எனக்கும் நடிகர் சாந்தனுவுக்கும் சமபங்குதான் இயக்குனர் பார்த்திபன் கொடுத்திருக்காரு. பார்வதி நடிப்புக்கு புதுசுன்னாலும், அவளால சவாலான பாத்திரங்களில் நடிக்க முடியும்னு எல்லோரும் நினைக்கிறதுல எனக்கு மகிழ்ச்சி.”

 

படப்பிடிப்பில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவம்?

“வெரைட்டியான உணவுகள் சாப்பிடுறதுன்னா, எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்புல கலந்துக்குற அன்னிக்கி, எனக்கு பிடித்தமான உணவுகளை  பார்த்திபன் சார் ஏற்பாடு செய்திடுவார். ஒவ்வொரு நாளும் எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரு. ஓணம் பண்டிகையின்போது ஷூட்டிங் இருந்துச்சு. அப்போ ஓணம் சத்யா ஏற்பாடு செஞ்சு, என்னை திக்குமுக்காட வச்சிட்டாரு.”

 

அடுத்த நடிக்கும் படங்கள் பற்றி..

“இப்போ தெலுங்கில இரண்டு படங்கள், மலையாளத்துல ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். தமிழ்ல ‘எங்கிட்டே மோதாதே’ பண்ணிட்டு இருக்கேன்” என்று நிறுத்தி நிதானமாகப் பதிலளித்தார் பார்வதி நாயர். அந்த அழகு தேவதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles