ஒன்பது நிமிட காட்சிகளை யூடியுபில் வெளியிட்டதனால் வெற்றி! ’சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Friday, December 16, 2016

தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும்போதே, அடுத்த பட வாய்ப்பு கிடைப்பது என்பது அதிர்ஷட தேவதை அருகில் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படியாக, சைத்தான் முடித்த கையோடு அதன் வெற்றியில் கூட பங்கெடுக்காமல், அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் கொஞ்சம் கதைத்தபோது..!

"பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் டாகுமெண்டரி நிகழ்ச்சி ஒன்றை இயக்கிக்கொண்டிருந்தேன். அப்படி வேலை பார்க்கும்போது, கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் சிக்கிக்கொள்ளும் சடலங்களை எடுப்பது குறித்த ஒரு ஆவணப்படத்தை தயார் செய்தேன். அந்த இடத்துக்கு போகும்போதெல்லாம், எனக்குள் ஏதோ ஒரு சிந்தனை உதித்துக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படிப் பேசும்போது, இதே மாதிரியான சம்பவங்களை மையமாக வைத்து எழுத்தாளர் சுஜாதா ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்று சொன்னான் என் நண்பன். அந்த நாவலைப் படிக்கும்போது எனக்குள் ஒலித்த குரல்தான் ’சைத்தான்’!

சைத்தான் படத்தை ஸ்கிரிப்டாக எழுதி முடித்த பிறகு, விஜய் ஆண்டனி சாரிடம் போய் கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. மூலக்கதை சுஜாதா என்றதும், "அனுமதி வாங்கிவிட்டு படமாக்கலாம்" என்றார். பிறகு, திருமதி சுஜாதா ரங்கராஜனிடம் போய், முறைப்படி அனுமதியை வாங்கி படமாக்கினோம். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, "சுஜாதா சாருக்கு ஏன் கிரெடிட் கொடுக்கவில்லை?" என்று கேட்டார்கள் சிலர். அப்போது கிரெடிட் கொடுத்திருந்தால், கதை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அதனால், தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு த்ரில் இருக்காது என்பதால் தான் தவிர்த்தோம். மற்றபடி, திட்டமிட்டு எல்லாம் அதைச் செய்யவில்லை. இப்போது அது ரசிகர்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி!

படத்தில் விஜய் ஆண்டனியும் அருந்ததி நாயரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் அவங்களோட முழு ஈடுபாடுதான். நான் என்ன சொன்னேனோ, அதை பலமடங்கு சிறப்பாக மாற்றியது அவங்கதான். அதேபோல படத்தில் பின்னணி இசை சிறப்பாக வந்திருப்பதற்குக் காரணம் விஜய் ஆண்டனி சார்தான். படப்பிடிப்பு முடிஞ்சு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கும்போது, அவர் ரஷ் பார்த்தார். "இந்தப் படத்துக்கு வேறமாதிரி பின்னணி இசை அமைக்கணும்”னு சொல்லிட்டு, அதற்கு ஏற்றமாதிரி இசையமைச்சாரு. அதனால்தான் சைத்தான் படத்தின் பின்னணி இசை வேற லெவல்ல வந்திருக்கு!

படத்தோட ட்ரெய்லர் ஆடியன்ஸ் மத்தியில நல்ல வரவேற்பைப் பெற்றதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். அப்பதான், படத்தின் சில காட்சிகளை வெளியிடணும்னு முடிவு செஞ்சோம். படத்தை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்ததால், இது கான்ஜுசரிங் மாதிரியான படமாக இருக்குமோன்னு ரசிகர்கள் குழம்பிடக்கூடாதுன்னு தோணுச்சு. ’படத்தோட கதை இதுதான். தைரியமாக தியேட்டருக்கு வாங்க’ன்னு சொல்றதுக்காகத்தான் ஒன்பது நிமிட படத்தை யூடியுபில் வெளியிட்டோம். அதுதான் படத்தோட வெற்றிக்கு இப்போ பெரிய பிளஸ்ஸா அமைஞ்சிருக்கு" என்று புன்னகையோடு விடைபெற்றார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

- கிராபியென்  பிளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles