கதை பிடிச்சிருந்தா, உடனே இசையமைக்க சம்மதிப்பேன்! இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்!

Thursday, December 1, 2016

கோலிவுட்டிற்கு நாலாப் பக்கங்களில் இருந்தும் புதிய வீச்சுடன் இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள், குறிப்பாக இசைத்துறையில். எல்லாவகையிலும் தங்களை வித்தியாசப்படுத்திக்கொண்டு, இசையமைப்பில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தவும் செய்கிறார்கள். அந்த வரிசையில் கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ஒரு மாலைவேளையில், பல்வேறு இசைக்கருவிகளோடு இசையாய் ஒட்டிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

உங்களுடைய இசைப்பயணம், தற்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

“ ‘கவலை வேண்டாம்’ என்னோட இரண்டாவது படம். என்னோட இசைப்பயணத்தை திரும்பிப் பார்த்தா பிரமிப்பா இருக்கு. மூன்று வயசா இருக்கும்போதே, நான் பியானோ வாசிக்கத் தொடங்கிட்டேன். இதுக்காக, என் பெற்றோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். அந்த வயசிலேயே, அவங்க என்னை கீபோர்ட் வாசிக்க அனுமதிச்சாங்க. எங்க அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் ட்ரூப்ல  இருந்தாரு. இந்தச் சூழல்ல வளர்ந்ததால, எனக்கு இசை மேல தனி ஆர்வம் ஏற்பட்டுச்சு. அதே நேரத்துல, இசைக்கான பயிற்சிகளும் எடுத்துக்கிட்டேன். அதன்பிறகு, ஒரு ஆல்பத்துக்கு ட்யூன் போட்டு யூடியுப்ல வெளியிட்டேன். அந்தப் பாடலைக் கேட்ட லாரன்ஸ் சார், எனக்கு ‘காஞ்சனா2’ வில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். இப்படித்தான், நான் சினிமாவுக்குள்ள வந்தேன்!”

 

‘கவலை வேண்டாம்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்து..?

“இந்தப் படத்துல மொத்தம் நான்கு பாடல்கள். பள்ளிப்பருவத்துல வர்ற காதல், முதிர்ச்சியடைந்ததும் வரும் காதல், காதலின் ஆழம் என்று ஒவ்வொரு பாடலும் காதலை ஒவ்வொருவிதமா சொல்கிற மாதிரி இருக்கும். சித் ஸ்ரீராம் பாடிய ‘நீ தொலைந்தாயோ’, எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல், ‘என் பல்ஸ் ஏத்திட்டு போறியே’ ரொம்ப ஜாலியான பாடல். இப்படி எல்லா பாடலும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். 

ரொமான்டிக் படத்துக்கு இசையமைக்கிறதுன்னா, எந்தவொரு இசையமைப்பாளருக்கும் பிடிக்கும். எனக்கும் அப்படித்தான், இந்தப் படத்துல பணியாற்றியது ரொம்ப சந்தோஷம்.”

 

இந்தப் படத்தின் இசையமைப்பில் என்ன ஸ்பெஷல்?

"நடிகர் ஜீவா ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு. காஜல் அகர்வால் ரொம்ப பிரமாதமா பெர்பார்ம் செஞ்சிருக்காங்க. பின்னணி இசை அமைக்கும்போது என்கிட்ட நானே சொல்லிப்பேன், ‘இவங்க நடிச்சதை விட நாம் இன்னும் பெட்டரா கொடுக்கணும்’ என்று. அதுக்காக நான் ரொம்ப மெனக்கெட்டு இருக்கேன். இதுல நிறைய துணைப் பாத்திரங்கள் இருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தரோட குணாதிசயங்களும் படத்துல வெளிப்படுற மாதிரி பின்னணி இசையமைச்சேன். அது ஆல்பத்துக்கு இணையாக நல்லா வந்திருக்கு!”

 

இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நீங்கள். ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து..?

"ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிள்தான் என்னோட குரு. அஞ்சு வயசுல இருந்தே, அவரைப் பார்த்துதான் வளர்ந்திருக்கேன். அவருடைய ஸ்டூடியோவுல ஓடியாடி, சுத்திக்கிட்டு இருந்திருக்கேன். அவரின் கம்போஸிங்கை பார்த்திருக்கேன். அப்படி இருந்ததால என்னவோ, இசை மீது ஈடுபாடு அதிகமாச்சு. அதேபோல, எனக்கு எந்த இசைக் கருவி தேவைப்பட்டாலும் உடனே அது கிடைச்சது. அதற்குக் காரணம் என்னோட பேரண்ட்ஸ் தான். சின்ன வயசுல ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்புல சில பாடல்களைப் பாடியிருக்கேன், எல்லாமே அவரோட ஆசிர்வாதத்தாலதான். இன்றைக்கு மியூசிக் டைரக்டரா உங்க முன்னாடி உட்கார்ந்திருக்கிறதுக்குக் காரணமும் அவர்தான்!"

 

சக இசையமைப்பாளர்களிடம் இருந்து, உங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறீர்கள்?

"நான் இசையமைக்கிற படங்களில் மெலடிஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை கம்போஸ் பண்ணுவேன். அதே சமயத்தில் மியூச்சிக்கல் அரேஞ்மென்ட்ஸும் முக்கியம்னு நினைக்கிறேன். ரசிகர்களை ஈர்க்கிறது சில தனித்துவமான சத்தங்கள்தான். என்னோட இசையமைப்பில், நிறைய லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பயன்படுத்துவேன். அப்புறம் நம்மோட இன்டியன் கிளாசிக்ஸ் மறக்கக்கூடாதுன்னு நினைப்பேன். அதுல பாப்ஸை இணைச்சு பண்ணணும்னு ஆசையிருக்கு. அப்படித்தான் என்னை வேறுபடுத்திக் காட்டிக்கிறேன்!"

 

எந்த மாதிரியான பாடல்கள் உங்களை அடையாளப்படுத்தும்?

"எனக்கொரு ஆசை உண்டு. வருங்காலங்களில், நான் ஒப்பந்தமாகும் படங்களில் ஒரு மெலடி பாடலையாவது இடம்பெறச் செய்யணும். அது கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி; கலைப்படமாக இருந்தாலும் சரி. எந்த ஜானராக இருந்தாலும், எனக்குக் கதை பிடிச்சிருந்தா உடனே இசையமைக்க சம்மதிப்பேன்!" என்று உற்சாகமாகப் பேட்டியை முடித்தார் லியோன் ஜேம்ஸ். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles