என்னோட டெய்லர்களுக்கு தான் நன்றி சொல்லணும்! - காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

Thursday, December 1, 2016

ஒரு பெண்ணுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சி தரும் விஷயம் 'தாய்மை'. சமீபகாலமாக, நிறைய பெண்கள் அந்தத் தருணங்களை படம்பிடித்துப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள். ’இதையே ஸ்டைலிஷா போட்டோஷூட் செஞ்சா, அது புதுவிதமா இருக்கும். வெளிநாட்டுல இப்படி ஒரு கான்செப்ட் செஞ்சுகிட்டு இருக்காங்க’ என்கிறார் நம்மூர் காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்.

முகமூடி, வடசென்னை, வீரசிவாஜி போன்ற படங்களின் காஸ்ட்யூம் டிசைனர். அஷ்வின் ரவிச்சந்திரன், துல்கர் சல்மான், ஜெயராமின் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றி வருபவர் இவர். 

டிசைனர், ஸ்டைலிஸ்ட் என்று வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்காட்டும் அம்ரிதாவிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தோம்; அவரிடம் இருந்து துடிதுடிப்பான பதில்கள் உடனுக்குடன் வருகிறது. 

 

இயக்குனர் மிஷ்கினுடன் பணியாற்றிய அனுபவம்..

“இயக்குனர் மிஷ்கின், எப்போதும் எல்லாருக்கும் சிறந்த ஒரு வழிகாட்டி. அவரோட ‘முகமூடி' படத்துல பணியாற்றி இருக்கேன். ’நீங்கதான் காஸ்ட்யூம்’னு முதன்முதலா அவரு சொன்னதும், நான் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். ’நாமதானே காஸ்ட்யூம் பாத்துக்கப்போறோம்’னு அசால்டா இருக்க முடியாது. ஏன்னா, அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அவருகிட்ட பேச ஆரம்பிச்சோம்னா, பேசிகிட்டே இருப்போம். நிறையா புதுப்புது விஷயங்கள் பத்திப் பேசுவாரு.

‘முகமூடி' படத்துல நிறையா கதாபாத்திரங்கள் இருந்துச்சு. எல்லோருக்கும் வேறுவேறு விதமா ஆடைகள்; அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கணும். ஆடைகள் பற்றி மிஷ்கினுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஷாப்பிங் செய்ய நம்ம கூடவே வருவாரு, அவரை நாம ஏமாற்றவே முடியாது.

 

பல மொழிகளில் பணியாற்றியது எப்படி? 

“வேற மொழி படங்கள்ல வேலை பார்க்குறோம்னா, அவங்க கலாச்சரத்தைத் தெரிஞ்சுக்கணும். ஒரு கன்னட படத்துல காஸ்ட்யூம் டிசைனரா வேலை பார்த்தேன். அதுல வேதிகா கதாநாயகியா நடிச்சிருந்தாங்க. அதுல, அவங்க காலேஜ் போற பொண்ணா வருவாங்க. காலேஜுக்கு போற பொண்ணு  எப்படி இருப்பாங்களோ, அந்த மாதிரியான ஆடைகளைத்தான் நான் காட்ட முடியும், ரொம்ப மிகைப்படுத்த முடியாது. அதோட, அவங்க டிரஸ் கதையில வர்ற பாத்திரத்தோட ஒன்றியிருக்கணும். அப்படியில்லைன்னா, ரசிகர்கள் அதை ரசிக்க மாட்டாங்க. 

காலேஜ் போற பொண்ணுங்க ரொம்ப சிம்பிளா டிரஸ் பண்ண விரும்புவாங்க. அதேபோல கதாநாயகிக்கு எளிமையான டிரஸ் கொடுத்தா, சுலபமா எல்லா ஆடியன்சுக்கும் ரீச் ஆகும். அந்தப் படத்துல, வேதிகா காலேஜ் கேர்ளா இருந்து குடும்பத்தலைவியா மாறுவாங்க. அதுக்கேத்த மாதிரியும், நாம அவங்களைக் காட்டணும். கூடவே, அவங்க கலாச்சாரத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கணும்.அப்போதான் அது ஸ்க்ரீன்ல நல்லா இருக்கும்.”

 

எப்படி ஒரு ஸ்டாருக்கு ஸ்டைலிங் செய்றீங்க?!

“ஸ்டைலிங் செய்றது, எல்லாருக்கும் சவாலான விஷயம், ஏன்னா, வேற ஒருத்தங்க வடிவமைச்ச ஆடைகளுக்கு நாம ஸ்டைலிங் செய்யணும். அதனால, நாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நம்ம ஸ்டைலிங், அவங்களோட  டிசைனை பாதிக்கக்கூடாது. நான் துல்கர் சல்மானுக்கும் ஸ்டைலிங் செஞ்சுருக்கேன், அஸ்வின் ரவிச்சந்திரனுக்கும் ஸ்டைலிங் செஞ்சுருக்கேன். ரெண்டு பேருமே வெவ்வேறு கேரக்டர்ஸ். அதனால, கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சுதான் செய்யணும்.

நான் ஒருத்தருக்கு ஸ்டைலிங் செய்ய கமிட் ஆகிட்டேன்னா, அவங்களை பற்றிய ஆராய்ச்சியில இறங்கிடுவேன். நம்ம எல்லோருக்கிட்டேயும், தனித்துவமான விஷயம் ஒண்ணு இருக்கும்; நமக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும். அந்த ஸ்டைலை, நெருங்கிப் பழகினாத்தான் கண்டுபிடிக்க முடியும். அதுக்காக, என்கிட்ட ஸ்டைலிங் பண்ண வர்றவங்களோட நல்லா பழகுவேன். அவங்ககிட்ட இயற்கையா இருக்குற ஸ்டைலை கண்டுபிடிச்சு, அவங்களை இன்னும் அழகா காட்டுவேன். காஸ்ட்யூம் டிசைனிங்ல, இந்தக் கேரக்டருக்கு இப்படித்தான் வடிவமைக்கணும்னு கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் ஸ்டைலிங் அப்படியில்ல, இதுல நம்ம கிரியேட்டிவிட்டியை உபயோகிக்கலாம்.”

 

விளம்பரங்களில் பணியாற்றியது பற்றி?

“ராம்ராஜ் வேட்டி விளம்பரத்துல, நடிகர் ஜெயராமுக்கு காஸ்ட்யூம் டிசைனரா ஒர்க் பண்ணேன். அதுல, அவரு போடுற டிரஸ் என்னமோ வேஷ்டி சட்டைதான். ஆனால், அதிலும் கூட அவரு பெர்பக்‌ஷன் எதிர்பார்ப்பாரு. ஒரு தடவை அவரோட தோள்கிட்ட, கொஞ்சமா பிட் இறங்குனமாதிரி இருந்துச்சு. உடனே எனக்கு போன் பண்ணி, ’ஆல்டர் செஞ்சு தாங்க’ன்னு சொல்லிட்டாரு. சில வேலைகள்ல மாட்டிகிட்டதுனால, லேட்டா கொண்டுபோய் கொடுத்தேன். அதுக்காக, அவரும் நடுராத்திரி வரைக்கும் காத்துட்டு இருந்தாரு. அவரு கூட வேலை செஞ்சோம்னா, டெடிகேஷன்னா என்னன்னு கத்துக்கலாம்."

 

வெளிநாடுகளில் நம்ம பாரம்பரிய உடைகளை எவ்வாறு வரவேற்கிறார்கள்?

“நம்ம நாட்டு உடைகளுக்கு, அங்க தனி வரவேற்பு இருக்கு. நம்ம நாட்டுல, கலவையான ட்ரெடிஷன் இருக்குன்னுதான் சொல்லுவேன். நம்ம ஊரு காஞ்சிபுரம் பட்டு, அங்கே ரொம்ப பேமஸ். அவங்களுக்கு அதைப் போடணும்னு ஆசை. ஆனால், அது அவங்களால முடியல. நம்ம ஊரு கிளைமேட் ரொம்ப சூடா இருக்கும், அதனால மேலை நாடுகள்ல உபயோகிக்குறமாதிரி, நாம வின்டர் ஜாக்கெட் போட முடியாது. 

அவங்க ஊர் ரொம்ப குளிரா இருக்கும்கிறதால, அவங்களால நம்ம பாரம்பரிய உடைகளை ரொம்ப நாள் போட முடியாது. அதுக்காக ரொம்ப மெனக்கெட்டு யோசிச்சு, ஜாக்கெட்ல காஞ்சிபுரம் பட்டை இணைச்சு டிசைன் செஞ்சேன். அதுக்கு ’காஞ்சி மாட்’னு பெயர். அதாவது, பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டை உபயோகிச்சு மேலை நாடுகளின் மாடர்ன் ட்ரஸ்ஸை ரெடி செய்யுறதுதான் காஞ்சி மாட். இந்த நேரத்துல, என்னோட டெய்லர்களுக்கு நன்றி சொல்ல விரும்பறேன். ஏன்னா, நான் சுட்டிக்காட்டுகிற நுணுக்கமான விஷயங்களைத் திருத்தி, எனக்காக அவங்க திரும்பத் தைப்பாங்க. இன்னிக்கி வெளிநாடுகள்ல அம்ரிதா ராம்னு ஒரு பிராண்ட் இருக்குன்னா, அதுக்கு அவங்கதான் காரணம்.”

 

ஸ்வானே ஸ்டோர் பற்றி..

“பிரெஞ்ச் மொழியில ‘ஸ்வானே’ன்னா பேஷன்னு அர்த்தம். இது ஒரு ஆன்லைன் ஸ்டோர். இப்போதைக்கு சிகாகோவில் மட்டும்பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா, எனக்கு அங்கே ஆள் இருக்காங்க. அது மட்டுமில்லாம, என்னோட ஸ்டோர்ல நான் டிசைன் செஞ்ச ட்ரஸ்ஸை தான் வைக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். வேறு ஒருத்தங்களோட கலெக்‌ஷனை, என் கஸ்டமர்கள்கிட்ட விக்குறதுல விருப்பமில்லை. எந்த ஒரு வேலையையும், தொடக்கத்துல இருந்து செஞ்சாத்தான் அதுல முழு திருப்தி இருக்கும். இந்த ஸ்வானே ஸ்டோரை நான் யூடியுப்ல கொண்டு வந்திருக்கேன். அதுல பேஷன் டிப்ஸ், செலிபிரிட்டி பேஷன்ஸ் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கும். சமீபத்துல, ஜனனி ஐயர் பங்கேற்ற வீடியோஸ் வெளியிட்டிருக்கேன். இது, எல்லாத்தரப்பு மக்களுக்கும் ரொம்ப உபயோகமாக இருக்கும்.”

மழையாகப் பொழிந்து, அருவியாக ஓடுகிறது அம்ரிதாவின் பேச்சு. காஸ்ட்யூம் டிசைனிங், ஸ்டைலிங் துறையில் அவர் மென்மேலும் வளரப்போகிறார் என்பதை, அது வெளிக்காட்டுகிறது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles