'குருநாதா' என்று அழைப்பதுதான் சந்தோஷம்! - ‘தில்லுக்கு துட்டு’ இயக்குநர் ராம்பாலா 

Wednesday, August 31, 2016

“இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தபோது, அதற்குமுன் வேலை பார்த்த எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. காரணம், அவரிடம் ஒரு அப்ரண்டீஸாக இருந்தால் கூட சினிமாவைத் தெரிந்து கொள்ளலாம் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. அவரிடம்தான் திரைக்கதை, வசனத்தை கற்றுக் கொண்டேன். நகைச்சுவையின் மூலமாக, ஒரு சீரியஸான விஷயத்தைக் கூட மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதில் பாக்யராஜ் சார் ஒரு பிதாமகன்.

அந்தவகையில், சீரியஸான மேட்டரையெல்லாம் காமெடி கலந்து எப்படிச் சொல்றது என்கிற உத்தி அவர்கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டதுதான்!” என்று சீரியஸாகப் பேசுகிறார் இயக்குநர் ராம்பாலா. ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலமாக, தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கும் லேட்டஸ்ட் இயக்குநர். பிரபல தொலைக்காட்சியொன்றில் நடிகர் சந்தானத்தை வைத்து ‘லொள்ளு சபா’, ‘சகல ரகள’ போன்ற தொடர்களை இயக்கியவர் என்றால், பளிச்சென்று ரசிகர்களுக்கு அடையாளம் தெரியும். ராம்பாலாவிடம், அவரது சினிமா பிரவேசம் குறித்து பேசியபோது... 

 

“பாக்யராஜ் சார்கிட்டே இருந்து வெளியே வந்தவுடன், எனக்கான கதையை எழுதி இயக்கணும்னு முடிவு பண்ணினேன். சில கதைகளை எழுதிட்டு, தயாரிப்பாளர்களுக்காகக் காத்திருந்தேன். ஒருத்தரும் என்னைத் தேடி வரலை. அப்படி இருக்கும்போதுதான், எனக்கு ஒரு தேங்காய் வியாபாரி தயாரிப்பாளரா கிடைச்சாரு. அவரைப் பார்த்தவுடனே, எனக்குள்ளே ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதலில் கிடைச்ச தயாரிப்பாளர் ராஜ்கண்ணன், ஒரு தேங்காய் வியாபாரிதான். அதனால நமக்கு கிடைச்சிருக்கிற சுப்ரமணியனும் அதே ரகம் தான். நாமும், பாரதிராஜா மாதிரி பெரிய டைரக்டரா ஆயிடுவோம்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்தத் தயாரிப்பாளர், பாண்டி பஜார்ல ஆபிஸ் ஒண்ணு போட்டுக் கொடுத்தாரு. 

 

முதல் நாள் நல்ல சாப்பாடு வந்தது. அடுத்த நாள் முனியாண்டி விலாஸ். மூன்றாவது நாள் ரோட்டோரக் கடை. நான்காவது நாள் சாப்பாடே வரலை. என்னன்னு பார்த்தா, அந்தத் தயாரிப்பாளர் சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டின விஷயம், அப்புறம்தான் தெரிஞ்சுது. பிறகு, அந்த அலுவலகத்தில இருந்து வெளியேறினேன். பட வாய்ப்புக்காக, நிறைய கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கினேன். ஆனா, எதுவும் சரியா அமையலை. நேரமும் காலமும் வேகமாக போயிடுச்சு. சரி, சீரியல் பக்கமா ஒதுங்கலாம்னு நினைச்சபோதுதான், விஜய் தொலைக்காட்சியில ‘லொள்ளு சபா’ வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து ‘சகல ரகள’ பண்ணினேன். அதுவும் வெற்றியடைஞ்சது!” என்று தான் தொலைக்காட்சி உலகத்தினுள் நுழைந்ததை விவரித்தார் ராம்பாலா.

 

ராம்பாலாவின் முதல் ரசிகை அவரது தாய் தான். அதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால், அவரது குரலில் நெகிழ்ச்சி. “நான் இயக்குற தொடர்களுக்கு முதல் ரசிகை எங்க அம்மாதான். அவங்கதான் ஒருநாள் சொன்னாங்க, ‘என்னடா தம்பி.. காமெடி தொடரே பண்ணிக்கிட்டிருந்தா எப்படி. படம் பண்ண வேண்டியதுதானே?’ன்னு கேட்டாங்க. அப்படிக் கேட்ட அன்றைய இரவுதான், அவங்க மரணம் அடைஞ்சாங்க. அவங்க சொன்ன வார்த்தை மட்டும், என் மனசுக்குள்ளே ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு. சரி, இனிமேலும் தாமதிக்க வேண்டாம்னு நினைச்சு படம் பண்ணலாம்னு களத்துல இறங்கிட்டேன். அப்படித்தான், ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு போய் கதை சொன்னேன். கதை பிடிச்சுப்போய், ஆபீஸ் எல்லாம் போட்டாங்க. ஆனா, அந்தக் கம்பெனி என் படத்தை எடுக்காமல் அலைக்கழிச்சாங்க. பிறகு, அங்கிருந்து வெளியேறிட்டேன்.

 

என்னுடைய கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துல பதிவு செஞ்சிட்டு, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போதான் நடிகர் சந்தானம் ஞாபகம் வந்துச்சு. அவருக்கு போன் போட்டு, நடந்ததை எல்லாம் சொன்னேன். ’நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?’னு கேட்டாரு. பதில் சொல்லும்போதே, ’உடனே ஆபிஸ் கிளம்பி வாங்க’னு சொல்லிட்டாரு. போய் கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. உடனே பட வேலைகளை ஆரம்பிச்சிட்டாரு. அப்படித்தான் ‘தில்லுக்கு துட்டு’ வாய்ப்பு கிடைச்சது.

 

‘லொள்ளு சபா’ மூலமாக, நடிகர் சந்தானத்தை நான் அறிமுகம் செஞ்சேன். என்னை ஒரு இயக்குநராக, தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியிருக்கார் சந்தானம். ஒருவகையில இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உதவி செஞ்சிக்கிட்டாலும், உண்மையிலேயே சந்தானம் குருபக்தி உடையவர். அதனாலதான், எப்போ எந்த வேலையைத் தொடங்கினாலும் ‘குருவே துணை’ன்னு எழுதுவார். அதேமாதிரி ‘லொள்ளு சபா’ டீமும் என்னைப் பார்த்தால், “குருவே, குருநாதா”ன்னுதான் கூப்பிடுவாங்க. எனக்குப் படங்கள் கிடைப்பதைக் காட்டிலும் பெருமையான விஷயம், என்னுடைய சிஷயர்கள் என்னை “குருவே” என்று அழைப்பதுதான்!

 

‘தில்லுக்கு துட்டு’ படம் எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிச்சிருக்கு. அதற்குக் காரணம், ஒவ்வொரு காட்சியையும் எடுக்கும்போது, இதைவிட பெட்டர்மென்டா ஒண்ணு வேணும்னு எதிர்பார்த்து எடுத்ததுதான். அடுத்ததா, ’மீண்டும் சந்தானத்தோடு இணைந்து எப்போ படம் பண்ணப் போறீங்க?’ன்னு கேட்குறாங்க. எல்லோருக்கும் நான் சொல்றது இதுதான். நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சாதானே சேர்றதுக்கு. சந்தானம், இப்போ தொடர்ச்சியா படங்கள் கையில வைச்சிருக்காரு. இரண்டு, மூன்று படங்களுக்குப் பிறகு, அவரை வைத்து மறுபடியும் இயக்குவேன்” என்று நிதானமாகப் பேசினார் ராம்பாலா. 

 

ஐம்பது நாட்களைக் கடந்து, ‘தில்லுக்கு துட்டு’ தியேட்டர்களை அலங்கரித்து வருகிறது. ஒரு இயக்குநரின் முதல் படம், தொடர்ந்து தியேட்டரில் இருப்பது தற்போதைய சூழலில் அபூர்வமானதே. தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க ராம்பாலாவை வாழ்த்திவிட்டு, வெளியேறினோம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

@manam

Related Articles