மிஷ்கின் கைப்பற்றி சினிமாவுக்குள் வந்தேன்! - இயக்குநர் ஜி.ஆர். ஆதித்யா

Wednesday, August 31, 2016

தமிழ் சினிமாவுக்கு இது நல்ல நேரம். தொடர்ச்சியாக, இளம் இயக்குநர்கள் களத்தில் குதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். அந்த வரிசையில், இப்போது இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவும் இணைந்திருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள ’சவரக்கத்தி’ படத்தின் ஆல்பம் ஹிட்டடித்திருப்பதே இதற்குச் சான்று. பட வெளியீட்டில் பரபரப்பாக இருந்தவரை, ஓரம்கட்டிப் பேசினோம்!

‘சவரக்கத்தி’ என்ற தலைப்பே, பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறதே?

“முதல் படம், ஒரு காமெடிப் படமாக இயக்கணும்தான் எனக்கு ஆசை. அப்படியொரு கதையை ரெடி பண்ணிகிட்டுதான் இயக்குநர் மிஷ்கின் சாரைச் சந்தித்து, கதை சொன்னேன். நிதானமாகக் கதையை கேட்டவர், ’இப்போ காமெடி கதை வேண்டாம்’னு சொல்லிட்டாரு. அப்புறம், நானும் அந்தக் கதையை அப்படியே விட்டுட்டேன். ஒருநாள் காரில் அவருடன் போய்கிட்டு இருக்கும்போது, என்கிட்ட ஒரு கதை சொன்னார். அது ஒரு அழகுக் கலை நிபுணர் பற்றிய கதை. அவர் சொல்லும்போதே, எனக்குக் கதை பிடித்துவிட்டது. ’இதையே நாம படமா பண்ணலாம்’னு சொன்னேன். அப்படித்தான் ‘சவரக்கத்தி’ உருவானது. ஆரம்பத்துல, ‘பார்பர்’னுதான் தலைப்பு வைச்சோம். அது ஆங்கிலப் பெயரா இருக்கிறதால, வரி விலக்கு கிடைக்காதுன்னு தோணுச்சு. பிறகுதான் தலைப்பு ‘சவரக்கத்தி’னு முடிவாச்சு!”

 

படத்துல என்ன ஸ்பெஷல்?

“இந்த சமூகத்துல ரொம்ப முக்கியமான கலைஞர்கள், அழகுக்கலை நிபுணர்கள் தான். அவங்கதான் ஒரு மனுஷனை ஜென்டில்மேனாக மாத்துறாங்க. இல்லைன்னா, இங்கே நாம எல்லோரும் சாமியார்கள் மாதிரி நீண்ட தலைமுடியும் தாடியோடும்தான் சுத்திக்கிட்டு அலைவோம். தேனாம்பேட்டையில இருக்கிற எல்லையம்மன் காலனியிலதான், ஆரம்பத்துல நாங்க தங்கியிருந்தோம். அங்கே சண்முகம்னு ஒருத்தர் சலூன் கடை வச்சிருந்தாரு. ரொம்ப வருஷமா அவர்கிட்டதான் முடி வெட்டிப்பேன். அப்படி அவரோடு பேசும்போது, நிறைய கிசுகிசுக்களைச் சொல்லுவாரு. அவரோட பேச்சும் செயலும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதேமாதிரி, இயக்குநர் மிஷ்கின் திண்டுக்கல்ல தங்கியிருந்தபோது, அவரைப் பாதித்த ஒரு பார்பர் இருக்கிறார். இந்த மனிதர்களை உள்வாங்கிட்டுதான், இந்தப் படத்தோட திரைக்கதையை எழுதியிருக்கார். படத்தின் திரைக்கதையை எழுதிய மிஷ்கின், ஒரு நெகட்டிவான பாத்திரத்துல நடிச்சிருக்கார். அதுதான் இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டி!”

 

மிஷ்கின், ராம் இருவரோடும் முதல் படத்திலேயே பணியாற்றிய அனுபவம் குறித்து..?

“மிஷ்கின், ராம் இருவருமே என்னுடைய அண்ணன்கள் தான். இதுல ராம் அண்ணனைப் பற்றி சொல்லியே ஆகணும். முதல்ல, அவர் மிகச்சிறந்த மனிதர். இந்தப் படத்துல சில காட்சிகளில் நடிக்கும்போது, அவர் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சார். பொதுவா இந்த மாதிரி கடினமான காட்சிகளில் வழக்கமான ஹுரோக்கள் நடிச்சிருப்பாங்களா என்பது என்னைப் பொருத்துவரைக்கும் சந்தேகம்தான். ஒருவேளை அவங்க நடிச்சிருந்தாலும் இந்தளவுக்கு அந்தக் காட்சியில் தங்களை ஈடுபடுத்திக்கிட்டு அர்ப்பணிப்போட நடிச்சிருப்பாங்களான்னு நிச்சயமா தெரியாது. ஆனா, ராம் அண்ணன் தன்னோட பாத்திரத்தை நூறு சதவீதம் உள்வாங்கிக்கிட்டு வாழ்ந்திருக்காருன்னுதான் சொல்லுவேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஷுட் பண்ணும்போது அவருக்கு காலில் அடிப்பட்டுடுச்சு. இதனால படப்பிடிப்பை மூன்று நாள் நிறுத்தலாம்னு முடிவெடுத்தோம். ஆனா, ஷுட்டிங்கை நிறுத்த வேணாம்னு கால் வலியோட வந்து நடிச்சாரு. 

அதேபோல, தமிழ் சினிமாவே கொண்டாடுகிற ஒரு டைரக்டர் மிஷ்கின். அவர் நடிக்கும்போது, சில திருத்தங்களைச் சொல்லலாமா, வேண்டாமான்னு யோசிச்சிட்டு நிற்பேன். என்னுடைய முகக்குறிகளைப் பார்த்துட்டு, ’இன்னொரு டேக் போயிடலாம்’ என்பார். இந்தப் படத்துக்கு மிஷ்கின் சார் மற்றொரு பலம்!”

 

படத்தில் பூர்ணாவுக்கு முக்கியமான பாத்திரமாமே?

“பூர்ணா ஒரு சிறந்த நடிகை. இந்தப் படத்துல கர்ப்பிணிப் பெண் என்கிற பெரிய பாத்திரத்தைச் சுமந்திருக்காங்க. காரைக்குடி பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல வாழ்கிற பெண்ணா வர்றாங்க. இந்தப் பாத்திரத்துக்காக, பூர்ணா நிறைய மெனக்கெட்டாங்க. காட்சியில வர்ற வசனங்களை எல்லாம் மலையாள மொழியில் எழுதிக்கிட்டுப் போய், மனப்பாடம் பண்ணிட்டு வந்து, ஸ்பாட்டுல நிப்பாங்க. சில வசனங்களை இப்படிப் பேசலாமான்னு கேட்டு, எங்க டீமை ஆச்சர்யப்படுத்தியிருக்காங்க. அநேகமாக ‘சவரக்கத்தி’ படத்துல நடிச்சதுக்காக, அவங்களுக்கு தேசிய விருதே கிடைக்கும்னு நம்புறேன். 

 

‘சவரக்கத்தி’ ஆல்பம் வலைதள உலகில் ஹிட்டடித்திருக்கிறதே?

“பொதுவாக, ஒரு படத்துல இடம்பெறுகிற நான்கு அல்லது ஐந்து பாடல்களுக்காக, மூன்று மாதமோ அல்லது நான்கு மாதமோ எடுத்துப்பாங்க. இப்போல்லாம் இரண்டு மாதங்கள்லயே முடிச்சிடுறாங்க. ஆனா, இந்த ஆல்பத்துக்கு சுமார் ஆறு மாதம் கடுமையாக வேலை பார்த்தோம். இசையமைப்பாளர் அரோல் கரோலி, தன்னோட வீட்டுல இருந்து படுக்கை, தலையணை எல்லாம் எடுத்துக்கிட்டு அலுவலகத்துக்கு வந்துட்டாரு. ’என்னப்பா கம்போஸிங் போலாமா?’ன்னா கேட்டா, ’எனக்கு மூடு வர்றல சார்..’னு சொல்லுவார். சரிப்பா, உனக்கு மூடு வரும்போது கம்போஸ் பண்ணுவோம்னு சொல்லிட்டு, மத்த வேலையை பார்க்கப் போயிட்டோம். அப்படி வேற வேலையில் மூழ்கியிருந்தபோது, ஒரு நாள் இந்த டியூனை போட்டுக் காட்டினாரு. அப்படியே மெர்சலாயிட்டோம். அந்த டியூன்னுதான் இப்போ எங்களோட தாலாட்டுப் பாடலா இருக்கு!”  

 

படத்தின் தயாரிப்பாளர் பற்றி..?

“தன்னோட ‘லோன் வுல்ப் புரொடக்ஷன்’ நிறுவனம் மூலமா, இயக்குநர் மிஷ்கின் ‘சவரக்கத்தி’ படத்தை தயாரிச்சிருக்கார். சென்னையைத் தாக்கிய வெள்ளத்தால படப்பிடிப்புகள் எல்லாம் தள்ளிப்போச்சு. வரிசையா நிறைய பிரச்சனைகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் மீறி படத்தை முடிக்க துணையா இருந்தார் மிஷ்கின். அதேமாதிரி, இந்தப் படத்துல புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவா ஜோயல் வேலை பார்த்திருக்காங்க. எஸ்.என்.சுரேஷ், ஏழுமலை போன்றவங்களும் தயாரிப்பு பக்கம் நின்னு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. அவங்க எல்லோருக்கும், இந்த நேரத்துல நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.”

 

இயக்குநர் மிஷ்கினை, உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாகத் தெரியும்?

“என்னுடைய சினிமா பயணம், ஒரு உதவி இயக்குநராக டைரக்டர் ரா.பார்த்திபன்கிட்டே இருந்துதான் ஆரம்பமாச்சு. அப்புறம் ஹோசிமின், நந்தா பெரியசாமி போன்ற இயக்குநர்களிடமும் வேலை பார்த்தேன். ஆனாலும், இன்னும் ஏதாவது கத்துக்கணும்னு உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. பிறகுதான், மிஷ்கின் சார்கிட்ட அஸிஸ்டென்டா சேர்றதுக்கு முயற்சி பண்ணினேன். அப்போ எனக்காக இயக்குநர் ராஜன் மாதவ், அவர்கிட்ட சிபாரிசு பண்ணார். ’ஒரு மாதம் வேலை பார்க்கட்டும். எனக்கு பிடிச்சுதுன்னா வச்சிக்கிறேன்’னு சொல்லிட்டு போயிட்டாரு. ஒரு மாதம், நானும் சின்சியரா ஆபிஸ்ல ஓடியாடி வேலை பார்த்தேன். அப்படி, முறையா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிதான், ‘அஞ்சாதே’ படத்துல உதவி இயக்குநரா அறிமுகமானேன். அந்தப் படத்துல இருந்து, இதோ ‘சவரக்கத்தி’ வரைக்கும் அவர் கையை பற்றிக்கொண்டு வந்து, இப்போ உங்க முன்னாடி இயக்குநராக நிற்கிறேன்” என்று சொல்லும் ஆதித்யாவின் கண்களில் சகோதரத்துவமும் அன்பும் தெறிக்கிறது. கோலிவுட்டுக்குள் வெற்றிக்கொடி நாட்ட, அவரை வாழ்த்திவிட்டு டீமோடு வெளியேறினோம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles