மிகினும் குறையினும் சித்த மருத்துவத்தினால் சரியாகும் அதிக இரத்த அழுத்தம்!

Friday, January 13, 2017

"மூணு வருசமா பிரசர் இருக்கு டாக்டர், தலை சுத்திக்கிட்டே இருக்கும். என்னன்னு பார்க்கப் போனப்பதான் பி.பி. அதிகமாயிருக்குதுன்னு தெரிஞ்சது. மாத்திரை சாப்டுக்கிட்டே இருக்கேன். இப்ப என்னன்னா, காலத்துக்கும் மாத்திரையை நிப்பாட்ட முடியாதாமே. தொடர்ச்சியா சாப்ட்டு வேற ஏதாவது வந்துருச்சுனா என்ன பண்றது. அதான் சித்தால ஏதாவது வழி இருக்குமான்னு பார்க்க உங்ககிட்ட வந்தேன்" என யோசனையோடு வந்தமர்ந்தார் சுப்பையா.

"பத்து வருசமா பி.பி. இருக்கு டாக்டர். எனக்கு அதிகமாறது தெரியும். பின்னந்தலை வலிக்கும். சோர்வா இருக்கும். அப்பல்லாம் பிபி மாத்திரையை போட்டுக்குவேன். தொடர்ச்சியா போட்டா பி.பி. லோ ஆகுது. ’உடம்பு ஒண்ணும் பிரச்சினை இல்லை, கவலைப்படாம இருங்க’ன்றார் பேமிலி டாக்டர்"என்று கவலைப்பட்ட மீனா.

"இவரு ஐ.டி.ல இருக்கார் டாக்டர். பயங்கர ஸ்டெரஸ் ஆபிஸ்ல. வயசு 36 தான் ஆகுது. அதுக்குள்ள ஹை பி.பி. வந்துடுச்சு. 20 எம்.ஜி.ல ஆரம்பிச்ச மாத்திரையை 80 எம்.ஜி. வரை கூட்டியாச்சு, கொஞ்சம் பயமாருக்கு" என்று கணவரைக் காட்டி பேசிக்கொண்டிருந்த மலர்.

"படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கல டாக்டர். இப்ப என்கூட படிச்சவங்க எல்லாம் நல்ல ஜாப்ல இருக்காங்க. நான் ஒரு ஆபிஸ்ல அஸிஸ்டென்டா இருக்கேன். எனக்கே, என் லைஃப் பிடிக்கல. ஆபிஸ்ல யாராவது திட்டினா நானும் கோபமா பேசிடுறேன். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலை, தலைவலி வந்துருது. ஆபிஸ்ல பி.பி. செக் பண்ணாங்க. 160/100 இருக்கு. வயசு 26 தான் ஆகுது. சித்தால பாரு அதான் நல்லதுன்னு எங்க மேடம் சொன்னாங்க. அதான் வந்தேன்" என்ற ரமேஷ்.

"அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பிபி உண்டு. பரம்பரை சொத்து மாதிரி, பரம்பரை வியாதி எனக்கும். 40லயே ஸ்டார்ட் ஆகிடுச்சு. எனக்கு 
நாட்டு மருந்துன்னா ரொம்ப இஷ்டம். நல்ல மருந்தா கொடுங்க டாக்டர்" என நம்பிக்கையோடு வந்த முருகேசன்.

"பத்து வருசமா சுகர் இருக்கு டாக்டர். சுகரும் பிபியும், அக்கா தங்கை மாதிரியாமே. இப்ப 6 மாசமா பி.பி. அதிகமா இருக்கு. ரெண்டுக்கும் சேர்த்து நல்ல மருந்து இருக்கா" என்ற ஜோசப்.

என ஒவ்வொரு அதிஇரத்த நோயாளிகளுக்கும் சொல்வதற்குக் காரணங்கள் நிறைய இருந்தன. 

இதயம் சுருங்கி விரிகையில் ஏற்படும் அழுத்தமானது இயல்பா 100-130/80-90 எம்எம் ஹெச்ஜி அளவில் இருக்கும். இந்த அளவைத் தாண்டுகையில் அதி இரத்த அழுத்தம் என்ற நோய் நிலைக்கு வந்துவிடும். 

இதயம் சுருங்குகையில் ஏற்படும் அழுத்தம் சிஸ்டோலிக் என அழைக்கப்படும். இது பெரும்பாலும் 120 எம்எம் ஹெச்ஜி அளவில் இருக்க வேண்டும் என அறியப்பட்டாலும், 100-130 எம்எம் ஹெச்ஜி வரையிலும் இயல்பான இரத்த அழுத்தம் தான். அதேபோன்று இதயம் விரிகையில் ஏற்படும் அழுத்தம் டயஸ்டோலிக் என அழைக்கப்படும். இதன் அளவு 80-90 எம்எம் ஹெச்ஜி அளவில் இருக்கலாம்.

காரணங்கள்

 • மரபு வழியாக அதிஇரத்த அழுத்தம் நோய் வரலாம்.
 • வாழ்வியல் மாறுபாட்டினால் வரலாம். அதாவது உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்தல், உடல் உழைப்பின்மை, உடற்பருமன் போன்ற காரணங்களினால் அதிஇரத்த அழுத்தம் பாதிக்கலாம். 
 • பிற உடல்நலக் கோளாறுகளினால் அதிஇரத்த அழுத்த நோய் ஏற்படலாம். சான்றாக, சிறுநீரகக் கோளாறுகள், ஹார்மோன் கோளாறுகள்.
 • தீவிர மனஅழுத்தத்தினாலும் அதிஇரத்த அழுத்தம் ஏற்படலாம்.

சித்த மருத்துவ விளக்கம்

 • பித்த நாடி பாதிப்புக்கு உள்ளாகையில் அதிஇரத்த அழுத்த நோய் ஏற்படும்.
 • பித்தம் எப்பொழுதும் இரத்தத்துடன் தொடர்புடையது. உடற்சூடு அதிகரிக்கையில் இரத்தத்தில் ஏற்படும் மாற்றம், இரத்த அழுத்தம் உயர்வதற்கு ஏதுவாக அமைகிறது.
 • "உவர்ப்பேறில் பித்துச் சீறும்" என்பது மருத்துவப்பாடல். உவர்ப்பான உணவுகள் பித்தம் அதிகரிக்கக் காரணமாக அமையும். மேலும் உடற்சூட்டை அதிகரிக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள், மன அழுத்தம் போன்றவை பித்த நாடி சமநிலையைப் பாதித்து அதி இரத்த அழுத்த நோய்க்கு வழிவகுக்கும்.

உணவே மருந்து

 • உப்புச் சுவையைக் குறைப்பது மிக்க பலனைத் தரும். 
 • துவர்ப்பு, இனிப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் பித்த நாடியை சமநிலைக்குக் கொண்டு வரும்.
 • சீரகம் பித்தத்தை குறைப்பதில் முக்கியமானது. சுடுநீரில் சீரகத்தை ஊறவைத்து, அந்நீரையே அருந்துதல் நலம் பயக்கும். 
 • எளிதில் செரிக்கக் கூடிய இலகுவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • சாதாரணமாக நாம் பயன்படுத்தும் உப்பை, முருங்கை இலையோடு சேர்த்து வறுத்துப் பயன்படுத்தலாம். 
 • பாறை உப்பு எனப்படும் இந்துப்பு அதி இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்றது. இதனை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

உட்கொள்ளக்கூடிய சித்த மருந்துகள்

 • மருதம் பட்டை பொடி     - மூன்று விரல் கொள்ளும் அளவு / காலை, இரவு உணவிற்கு முன்
 • சீரக சூரணம்         - ஐவிரல் கொள்ளும் அளவு / காலை, இரவு உணவிற்கு முன்
 • வெண்தாமரை சூரணம்     - ஐவிரல் கொள்ளும் அளவு / காலை, இரவு உணவிற்கு முன்
 • கேசரி லேகியம்         - ஒரு தேக்கரண்டி அளவு / காலை, இரவு உணவிற்கு பின்

உடலில் தடவவேண்டிய மருந்துகள்

1. அசைத் தைலம் - 100 மி.லி. நல்லெண்ணெய் உடன் 10 கிராம் சீரகத்தைச் சேர்த்து, அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து, சீரகம் சிவந்து மிதக்கையில் இறக்கி வடிகட்டிக்கொண்டால் அசைத் தைலம் தயார். இதனை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தினால், இரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும்.

2. கீழாநெல்லி தைலம் - எண்ணெய்க் குளியல் வாரம் இருமுறை. 

மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய மூச்சுப்பயிற்சி, தியானம், யோகப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலமும் இரத்த அழுத்தத்தை இயல்பில் வைக்கலாம்.

இலகுவான உணவு, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றுடன் மேற்கண்ட சித்த மருந்துகளையும் பயன்படுத்தும்போது, அதி இரத்த அழுத்தத்தை குணப்படுத்தி இயல்பான வாழ்க்கை வாழ முடியும். தீவிர நிலையில் அருகிலுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி உயர்வகை சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்க!

அடுத்த இதழில் "காமாலை" நோய்க்கான தீர்வுகள் பற்றிக் காணலாம்..!

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles